இரட்டையர்களின் கிராமம்!...

நன்றி குங்குமம் தோழி

கடவுளின் தேசம் எனப்படும் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது கொடிங்கி கிராமம். இது கேரளாவின் ஹாட் சுற்றுலாத்தளம். அந்த ஊரின் எல்லையில் காலடி வைக்கும் ஒவ்வொருவரும், `கடவுளின் ஆசிபெற்ற இரட்டையர் கிராமமான கொடிங்கி உங்களை வரவேற்கிறது' என பலகையை தவிர்க்கமுடியாது. பலகையில் இருப்பது போலவே உள்ளே செல்லும் அனைவரும் அனைத்து வயதில் உள்ள இரட்டையர்களை பார்க்காமல் இருக்க முடியாது. சிறு வயது முதல் மூதாட்டி வரை பல இரட்டையர்களை அங்கு சர்வசாதாரணமாக காணலாம்.

2000ம் பேர் மட்டும் வசிக்கும் அந்த கிராமத்தில் 500 பேர் இரட்டையர்கள். பள்ளிகள், கடைத்தெரு என பல இடங்களில் இவர்களை பார்க்க முடிகிறது. ஒரு விநாடி இவரை இப்போது தானே பார்த்தோம் என்று யோசிப்பதற்குள் பலர் நம்மை கடந்து செல்கின்றனர். ஒரு வகுப்பில் மட்டுமே ஒன்பது ஜோடி இரட்டையர்கள் படிக்கிறார்கள். இந்தியா முழுதும் சராசரியாக ஆயிரம் பிரசவங்களுக்கு ஒன்பது பேர் இரட்டையர்களாக பிறக்கிறார்கள்.

இந்த கிராமத்தில் மட்டும் இந்த விகிதம் ஆயிரத்துக்கு 45 பேர் இரட்டையர்களாக உள்ளனர். இது மரபணு காரணமாக ஏற்படக்கூடும். மேலும் உள்ளூரிலேயே திருமணம் செய்வதால் இரட்டையர்கள் பிறக்கிறார்களா என்ற சந்தேகத்தை அங்கு வசித்து வரும் மூதாட்டி தீர்த்து வைத்தார். ‘‘இன்னிக்கு நேத்து இல்ல எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து இப்படிதான் பல பெண்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கிறார்கள்.

குடி தண்ணீர் காரணமா இப்படி பிறக்கலாம் என பல விஞ்ஞானிகள் ஆய்வு செய்தாங்க. இதற்காக பல பேரோட எச்சில் உமிழ்நீர், தலைமுடி போன்ற மரபணு சார்ந்த பொருட்களை  சோதனைக்கு எடுத்துட்டு போனாங்க. ம்கூம் எந்த முடிவுக்கும் அவங்களால வரமுடியலை... வெளியூர்ல திருமணமாகி போன எங்க ஊரு பொண்ணுங்களுக்கும் அங்கே இரட்டை குழந்தை பிறந்திருக்கு. கத்தார்ல உள்ள எனது மகளுக்கு கூட இரட்டை பிள்ளைகள் தான்’’ என்றார் அந்த மூதாட்டி. கேரளாவுக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக சுற்றுலாவுக்கு வரும் பல வெளிநாட்டினர். இந்த ஊரையும் விசிட் அடித்து செல்கின்றனர்.

இரட்டையர்களுடன் செல்பியும் எடுத்துக் கொள்கிறார்கள். இரட்டை குழந்தைகள் பெற்றெடுக்கிறவங்களுக்கு இது வரை மாநில அரசோ, மத்திய அரசோ எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. எது எப்படி இருந்தாலும் கடவுள் கொடுத்த இந்த வரத்தை நாங்கள் மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொள்கிறோம் என்கின்றனர் அந்த ஊர் மக்கள்.

-கோமதி பாஸ்கரன்

Related Stories: