என்னோடு சமைக்க வாருங்கள்!

நன்றி குங்குமம் தோழி

சுந்தரி கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்குள் நுழையும் முன் பிரமாண்டமான கண்ணாடி தான் நம்மை வரவேற்கிறது. இது என்ன என்று வியப்பில் நிற்கும்  போதே, “ஓ இது சீனாவின் மரபு. ஒருவரின் வீட்டிற்குள் நுழையும் முன், நம் பிம்பத்தை நாமே பார்ப்பது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். சீனாவில்  விருந்தாளிகளை வரவேற்க அருமையான முறை இது தான்” என்று கூறியபடியே நம்மை வரவேற்கிறார். சுந்தரி கிருஷ்ணமூர்த்தி, Home Chef. ‘குக்  வித் சுந்தரி கிருஷ்ணா’ என்ற பெயரில் சென்னைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு நம் பாரம்பரிய உணவினை சமைக்க கற்றுத்தருகிறார்.  இந்திய உணவுகள் இல்லாமல், அரேபியா. தாய்லாந்து, சீனா, மெக்ஸிகோ, இத்தாலி, பர்மா, எகிப்து, பங்களாதேஷ் போன்ற அனைத்து சைவ  உணவுகளும் இவருக்கு அத்துப்பிடி.

சமையல் ஆர்வம் தோன்ற காரணம்?

என் பெற்றோர் தான் எனக்குள் இருக்கும் சமையல் ஆர்வத்தை முதலில் கண்டுபிடித்தனர். அப்ப எனக்கு எட்டு வயசு இருக்கும். என் ஆர்வத்தை பார்த்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு சின்ன சமையலறையை எனக்காக அப்பா உருவாக்கி கொடுத்தார். அம்மா சின்ன வயசுல என்னை  சமையலறைக்குள் அனு மதிக்கவே மாட்டார். எனக்கு ஏதாவது அடிபடுமோன்னு பயம். அதற்காகவே அப்பா குட்டி சமையலறையை ஏற்பாடு செய்தார். அங்கு தான் என்னுடைய சமையல் கலை ஆரம்பிச்சது.

என் நண்பர்களை அழைத்து அவர்களுக்காக சமைத்து, சட்டி காலியாகும் வரை அவர்களை விடமாட்டேன். கல்லூரியில் ஹோம் சைன்ஸ் படிக்க வேண்டும் என விருப்பம். ஆனால் அந்த காலத்தில் சரியாக படிக்காதவர்கள்தான் ஹோம் சைன்ஸில் படிப்பார்கள் என்ற கருத்து இருந்தது. அதனால் என்னை பி.காம் படிக்க சேர்த்துவிட்டார்கள். கல்லூரி முடிந்ததும் கல்யாணம். எனக்கு அமைந்த கணவரோ பயங்கர Foodie. நிஜமாவே திருமணங்கள்  சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுது என்று அப்போது நினைத்துக் கொண்டேன். அதுவரைக்கும் அடக்கி வைத்திருந்த என் சமையல் கலையை தினமும் சுவைக்கச் செய்தேன்.

எந்த பயிற்சியும் எடுக்காமல் எப்படி பல வகை சமையலை சமைக்க முடிகிறது?

கல்யாணமான சில நாட்களில், கணவருக்கு வேலை மாற்றலாகி நாங்கள் தாய்லாந்து சென்றோம். அங்கு நான் வசித்த காலனியில் பஞ்சாப், ஆந்திரா, பெங்காலி போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக எங்கள் பாரம்பரிய உணவை தினமும் பரிமாறி வந்தோம். நாளடைவில் யார் அவர்களின் பாரம்பரிய உணவை நன்றாக சமைக்கிறார்கள் என்று போட்டியாக மாறியது. பொருட்களை தேடிச் சென்று வாங்கி, இந்தியாவில் இருக்கும் உறவினர்களிடம் சமையல் குறிப்புகள் கேட்டு, சமைப்பேன்.

அடுத்து, அவருக்கு துபாய்க்கு மாற்றலானது. துபாய் எனக்கு எலைட் இந்தியா போலதான் இருந்தது. இந்திய மாநிலங்களின் சிறந்த உணவுப் பொருட்கள் அனைத்துமே அங்கு கிடைக்கும். அங்கும் பல இந்திய தோழிகள் கிடைத்தனர். அவர்கள் குழந்தை களுக்கு டியூஷன் எடுத்து, அதற்கு பதிலாக, சமையல் யுத்திகளை கற்றுக்கொண்டேன். இது இல்லாமல் ஆந்திராவிலும் சில காலம் தங்கியிருந்து அவர்களின் ஊறுகாய், சட்டினி வகை  அத்தனையும் கற்றேன்.

‘குக் வித் சுந்தரி கிருஷ்ணா’ ஐடியா எப்படி வந்தது?

2012ல் குழந்தைகளின் படிப்புக்காகவும், என் கணவரின் பெற்றோருக்காகவும் இந்தியா திரும்பினோம், ஆனால் அவர்கள் அடுத்தடுத்து தவறிபோயினர். இதனால் நான் வீட்டில் தனியாக வருத்தத்தில் இருந்தேன். அப்போது என் தோழி ரேவதி ஷண்முகம், தனக்கு சமையல் கற்றுக்கொடுக்க முடியுமா என்று கேட்டார். நானும் சம்மதித்தேன். அவருடைய டெடிகேஷன் தான் எனக்கு இன்ஸ்பிரேஷனாக மாறியது.

அவர் மூலம் நிறைய மாணவர்கள் சேர்ந்தனர். அவர் தான் என்னை ஆன்லைன் மூலம் உலகம் முழுதும் இருந்து விருந்தினர்களை வீட்டிற்கு வரவழைக்க காரணமாக இருந்தார். ஐம்பது வயதை கடந்து தான் எனக்கான ஃபேஷனை நான் தொடர்ந் திருக்கிறேன். வாழ்க்கை எந்த நேரத்திலும் மாறி புதிய நோக்கத்திற்காக பயணிக்கலாம் என்ற பாடத்தை கற்றுக் கொண்டேன்.

இதை உணவகமாக மாற்றி இருக்கலாமே?

லாபம் என் நோக்கம் இல்லை. கடவுளின் கிருபையால் நான் நன்றாக இருக்கிறேன். நான் இதை என் விருப்பத்திற்காகத்தான் செய்கிறேன். பிஸினஸாக மாற்றும் எண்ணம் என்றைக்கும் இருந்தது இல்லை. குழுவிற்கு 5 பேர் என தினம் ஒரு குழு என்னுடன் சேர்ந்து சமையல் செய்யலாம். ஒரு நாள் ஜப்பான் நாட்டிலிருந்து மாணவர்கள், அடுத்த நாள் அமெரிக்க குடும்பம், போலந்து தம்பதி என உலகம் முழுதும் நான் இதுவரை கேட்டிராத இடங்களில்  இருந்து வருவார்கள்.

வருபவர்களிடம் ஏதாவது ஒவ்வாமை இருக்கிறதா, எந்த மாதிரியான உணவு வகைகள் வேண்டும் என பல கேள்விகளுக்கு பிறகு தான் சமைப்போம். நான் ஒரு நாளைக்கு ஒரு குழு. சிலர் சமைத்துவிட்டாலும், அன்று மாலை வரை இருந்துவிட்டு செல்வார்கள். அவர்களை நேரமாகி விட்டது கிளம்புங்கள் என்று என்றைக்கும் சொன்னதில்லை. இந்த ஆறு ஆண்டுகளில் உணவு மட்டும் என் குறிக்கோளாக இருக்கவில்லை. உணவுடன் சேர்ந்து நம் கலாச்சாரத்தையும் சேர்த்து வெளிநாட்டவர்கள் சுவைக்க வேண்டும் என விரும்பினேன்.

வெளிநாட்டு மக்களுக்கு நம் கலாச் சாரத்தை எப்படி கற்றுத்தருவீர்கள்?

வீட்டிற்கு வந்ததும் அவர்களுக்கு ஃபில்டர் காபி அல்லது மோர் கொடுத்து உபசரிப்பேன். அதன் பிறகு நம் கலாச்சாரத்தை பற்றி பேசுவேன். வீட்டு வாசல்களில் உள்ள கோலங்களை பார்த்து ஆச்சரியப்படுவார்கள். அப்போது அவர்களுக்கு கோலம் பற்றி சொல்வது மட்டும் இல்லாமல் கோலப்  பொடியை கையில் கொடுத்து கோலம் போடத் சொல்லித்தருவேன். சிலருக்கு சேலை வேட்டி அணிய வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அவர்களுக்கு புடவையும் வேட்டியும் அணியவைத்து அலங்கரித் திருக்கிறேன். சமையல் செய்த பிறகு அவர்களுக்கு தோசைக் கல், ஃபில்டர் காபி டபரா, 50 கிராம்களில் கிடைக்கும் சீரகம், கடுகு, கிராம்பு போன்ற பொருட்களை வாங்கித் தருவேன். பொதுவாக என்னிடம் சமையல் கற்று செல்லும் வெளிநாட்டவர்கள், அவர்கள் நாட்டிற்கு சென்ற பிறகும் நம் இந்திய உணவை சமைத்து புகைப்படம் அனுப்புவார்கள்.

உங்கள் விருந்தினராக வெளிநாட்டு மக்கள் மட்டும்தான் வர முடியுமா?

இந்தியர்களும் வருவார்கள். வெளி நாட்டிற்கு படிக்கவோ, வேலைக்காக செல்பவர்களும் வருவாங்க. ஒரு சாம்பார் பொடியை வைத்து பத்து விதமான வெவ்வேறு சுவையில் மற்றும் இரண்டே பாத்திரங்கள் வைத்து என்னவெல்லாம் சமைக்கலாம் என்றும் சொல்லித்தருவேன். குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டிலாகும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கலாச்சாரம் பற்றிய புரிதல் வேண்டும் என்பதற்காக கூட என்னிடம் கூட்டி  வருவார்கள்.

விருந்தினர்கள் மூலம் கிடைத்த மறக்க முடியாத அனுபவம்….

ஒரு முறை கொரியாவைச் சேர்ந்த பெண் வழி தெரியாமல் எங்கோ நிற்க, என் கணவர்தான் அவரை தேடிக் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தார். பயந்து போயிருந்தவர், வீட்டிற்கு வந்ததும்தான் நிம்மதி பெருமூச்சு விட்டார். பொறுமையாக சமையல் செய்து, வாழை இலையில் சாப்பிட்டு, ஷாப்பிங் செய்து சென்றார். மூன்று வருடம் கழித்து, அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. தனக்கு திருமணமாகிவிட்டதாகவும் இப்போது அமெரிக்காவில் வசிப்பதாகவும் எழுதியிருந்தார். அவர் கணவர் இந்தியா வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

வந்தவர் பெட்டி நிறைய பரிசுகள் கொண்டு வந்து, என் கையால் சமைத்த உணவை சுவைத்து சாப்பிட்டார். இந்த சம்பவம் என் னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. சிலர் விருந்தினராக வந்தாலும் தாமாக முன்வந்து பாத்திரம் கழுவி, சமையலறையை சுத்தமும் செய்வார்கள். இதை நாம் ஹோட்டலில் செய்ய மாட்டோம். என் வீட்டில் செய்யும் போது தனிப்பட்ட நபருக்கு கவனம் செலுத்தி அவர்களுக்கு முழு திருப்தியும் தர முடிகிறது. கல்லூரியில் சேர்ந்து படித்திருந்தால் கூட நான் இவ்வளவு கற்று இருந்திருக்க முடியாது.

தாய்லாந்து, துபாய், ஆந்திரா என பல தலைமுறையாக மரபு வழி உணவை சமைப்பவர்களிடம் சமையல் கற்றுள்ளேன். அவர்களை விட பெரிய சமையல் நிபுணர்கள் யாராக இருக்க முடியும். ‘‘சமையல் அத்தியாவசியமான கலை. அதை பெண்கள், ஆண்கள் இருவருமே கற்க வேண்டும். வாழ்க்கை முழுக்க ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்டு வாழ முடியாது. உங்களுக்கு பிடித்த ஏதாவது ஐந்து உணவையாவது நன்றாக சமைக்க தெரிந்து கொள்ளணும். உணவு எப்படி இன்றியமையாததோ, அதே போல சமையலும் இன்றியமையாததே. சுவையான உணவு நம் மனநிலையை மாற்றி  மகிழ்ச்சி தரும்.

கோபமாக இருக்கும் போது, நமக்கு பிடித்த உணவைச் சாப்பிட்டாலே கோவமும் பசியும் பறந்து போகும். முடிந்த அளவு ஹோட்டலில் சாப்பிடு வதை தவிர்த்து பிடித்த உணவை வீட்டிலேயே சமைக்க முயற்சியுங்கள். வார இறுதியில் குடும்பத்துடன் ஹோட்டல் சென்றுதான் விடுமுறையை கொண்டாட வேண்டும் என்றில்லை. குடும்பத்துடன் சேர்ந்து பிடித்த உணவை ஒன்றாக சமைத்து சாப்பிட்டால் அந்த மகிழ்ச்சிக்கு எந்த குறைவும் இருக்காது. இது உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பண்பை கற்றுத்தருவதோடு, அவர்கள் ஆரோக்கியத்தையும் காக்கும்’’ என்றார் சுந்தரி கிருஷ்ணமூர்த்தி.

- ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்

Related Stories: