நான் உங்களில் ஒருத்தி!

நன்றி குங்குமம் தோழி

எப்போதும் யாரிடமும் புன் னகை மாறாமல் பேசுகிறார். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் தன்னம்பிக்கை தெறிக் கிறது. பிறவியிலேயே  பார்வை இழந்தவரானாலும் தமிழ் ஆசிரியராக சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற  மாற்றுத்திறனாளி தமிழ் ஆசிரியர் சுகுணா. இவரின் சொந்த ஊர் மும்பை. தாய்மொழி செளராஸ்ட்ரா.

தமிழ் மேல் ஏற்பட்ட ஆர்வத்தால் தமிழை முக்கிய பாடமாக கொண்டு அதில் பட்டமும்  பெற்றுள்ளார். ‘‘எனக்கு பிறவிலயே பார்வை கிடையாது.  அதை நான் குறையா எடுத்துக் கொள்ளாமல், சாதிக்க வேண்டும் என்ற வெறி மட்டும் தான்  என் மனதில் ஒளித்துக் கொண்டே இருந்தது. பார்வை இல்லாத காரணத்தாலே என்னவோ உலகம் எனக்கு ரொம்ப பெரிதாக தெரிந்தது. ஒவ்வொரு  இடத்திற்கும் நான் பயணித்த போது, நிறைய தடங்கல்களை தாண்டி செல்லவேண்டி இருந்தது. அதை நான் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டேன்.  

ஒவ்வொரு தடைகளை தாண்டும் போதும் இந்த உலகம் என்னுடைய மன உறுதியை மேலும் விரிவடைய செய்தது மட்டும் இல்லாமல் உறுதியாக்கியது. நான் மும்பை பொண்ணு. என் தாய்மொழி சௌ ராஸ்ட்ரா. ஆனா நான் இன்று தமிழ் ஆசிரியராக பணியாற்றுகிறேன். காரணம் எனக்குள் இந்த சாதிக்க வேண்டும் என்ற தீ. தமிழை சவாலாக எடுத்துக் கற்றேன். தமிழ் மொழியில் உள்ள புராணங்கள், இலக்கியங்கள் என்னை மேலும்  கவர்ந்தது. அது தான் என்னை அந்த மொழியை கற்க தூண்டியது மட்டுமில்லாமல், ஆசிரியராக வேண்டும் என்று எனக்குள் ஒரு உந்துதலை ஏற்படுத்தியது.

தமிழ் பழமையான மொழி. அதை அவ்வளவு எளிதில் கற்றுக் கொள்ள முடியாது என்பதை  கற்கும் போது புரிந்து கொண்டேன். கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. சவாலாக எடுத்து படிச்சேன். தமிழ்மொழி போல ஒரு மொழி  இல்லைன்னு  சொல்லலாம்’’ என்றவர் படிச்சது எல்லாம் தமிழ்நாட்டில் தான். ‘‘மும்பையில் பிறந்து இருந்தாலும், பள்ளிப் படிக்கும் போதே தமிழ்நாட்டுக்கு வந்திட்டேன். பாண்டிச்சேரியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அதன் பிறகு திருச்சி பிளைன்ட் ஸ்கூல்ல பனிரெண்டாம் வகுப்பு வரை படிச்சேன். பிறகு குடும்பச் சூழல் காரணமாக என்னால் கல்லூரிக்கு சென்று படிக்க  முடியவில்லை.

+2 முடித்த கையோடு திருமணம். என் கணவர் தான் என்னை மேலும் படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்தினார். தொலைதூர கல்வியில்  தமிழை முக்கிய பாடமாக கொண்டு பி.ஏ, எம்.ஏ. எம்.ஃபில்ன்னு படிச்சேன். அதற்கு பிறகு என்ன செய்வதுன்னு தெரியாம இருந்தேன். படிச்சாச்சு வேலை எனக்கு கிடைக்குமான்னு ஒரு தயக்கமும் இருந்தது. இந்த காலக்கட்டத்தில் தான் காஞ்சிபுர  மாவட்டத்தில் உள்ள மஹேந்திரா வேர்ல்டு ஸ்கூல், தமிழ் ஆசிரியைக்கான விண்ணப்பம் விடுத்து இருந்தாங்க. நானும் நேர்காணலுக்கு சென்றேன்.  அவர்கள் என்னுடைய குறையை பொருட்படுத்தாமல் பள்ளியில் தமிழ் ஆசிரியராக நியமித்தனர்.

என் மாணவர்களும் என்னை மட்டும் இல்லை நான்  நடத்தும் பாடத்தையும் நன்கு புரிந்து கொள்கிறார்கள். அதை நினைக்கும் போது எனக்கு ரொம்பவே பெருமையா இருக்கும்’’ என்ற சுகுணாவிற்கு  தமிழில் பி.ஹெச்.டி முடித்து கல்லூரி பேராசிரியராக பணியாற்ற வேண்டுமாம். ‘‘கல்விக்கு எல்லையே இல்லை. இப்போது பள்ளி ஆசிரியராக இருக்கிறேன். அடுத்து கல்லூரி பேராசிரியராக வேண்டும். அதற்கு பி.எச்.டி முடிக்க  வேண்டும். என் மூலம் தமிழ் மொழிக்கு ஆளுமைமிக்க மாணவர்களை உருவாக்க வேண்டும். நான் படித்து நல்ல நிலையில் வேலையில் இருந்தாலும்  இன்றும் சமூகம் எங்களை ஒரு மாற்றுத்திறனாளிகளாகத்தான் பார்க்கிறார்கள்.

எங்களின் ஊனத்தை பார்க்காமல் எங்களுக்கும் ஒரு மதிப்பு கொடுக்க  வேண்டும். காரணம், இன்றும் பொது இடங்களில் பலருக்கு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை அணுகும் முறை குறித்த விழிப்புணர்வு இல்லை. இது  வருந்தக்கூடியது. இரக்கப்படுவதை விட இயல்பாக பாருங்கள். உங்களில் ஒருவராக நினையுங்கள். என்னை போன்ற மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கையில் சவால்கள் அதிகமாக இருக்கும். ஒவ்வொருவரும் சாதிக்கப் பிறந்தவர்கள் என்று நினைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.  எங்களுக்கு பரிதாபம் வேண்டாம். அது எங்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.

சக மனிதராக பார்த்தாலே போதும். எங்களாலும்  எல்லா வேலைகளையும் செய்ய முடியும் என்பதை மற்றவர்கள் புரிந்து கொண்டாலே போதும். நான் பணியாற்றும் பள்ளியில் மாணவர்களும், ஆசிரியர்களும் என்னை வேறுபடுத்தி பார்ப்பதில்லை அவர்களில் ஒருவராக கருதி இயல்பாக இருக்கிறார்கள். இதைத்தான் நான் சமூகத்திடம் எதிர்  பார்க்கிறேன். அரசு படித்த மாற்றுத்திறனாளிகளை கண்டெடுத்து அவர்களை உரிய பணியில் அமர்த்த வேண்டும். எல்லா துறைகளிலும் இவர்களுக்கு  என வேலை வாய்ப்பினை அதிகப்படுத்த வேண்டும்’’ என்ற தன் கோரிக்கையை முன்னிறுத்தினார் சுகுணா.

- க.இளஞ்சேரன்

Related Stories: