தாயுமானவள்!

நன்றி குங்குமம் தோழி

அக்கா-தம்பி... அண்ணன்-தங்கை பாசத்தை பறைசாற்றுவது போல் பல திரைப்படங்கள் உள்ளன. அதை பார்க்கும் போது இது நிஜ வாழ்வில் சாத்தியமா என்று எண்ணத் தோன்றும். பொதுவாக வீட்டில் எப்போதும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இவர்களுக்குள் ஒரு சின்ன பிரிவு ஏற்பட்டாலோ அல்லது ஒருவருக்கு உடல் ரீதியிலான பிரச்னை வந்தாலும் தாங்கமாட்டார்கள். மகாராஷ்டிராவை சேர்ந்த இந்த பாசமலர்களும் அப்படித்தான். தன் 13 வயது தம்பிக்காக புதுமையான ஒரு சைக்கிளை வடிவமைத்துள்ளார் 16 வயதே நிரம்பிய பாசமுள்ள  அக்கா.

அக்கா, தாயின் மறுஉருவம் என்று சொல்லலாம். மயுரியும் அப்படித்தான். இவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பூனாவில் வசித்து வருகிறார்கள். இருவரும் ஒரே பள்ளியில் தான் படித்து வருகிறார்கள். அக்கா ஒரு நாள் கூட பள்ளிக்கு செல்லாமல் இருக்கமாட்டாள். ஆனால் தம்பி நிகிலோ பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுப்பார் அல்லது தாமதமாக வருவார். அதற்கு காரணம் அவரின் சோம்பேறித்தனம் இல்லை. அவர் ஒரு மாற்றுத்திறனாளி. நிகில் படிப்பில் சுட்டி. அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவன்.

தான் ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் யாரையும் எதிர்பார்க்காமல் தன் வேலைகளை தானே செய்துகொள்வான். ஒன்றை மட்டும் தவிர. அதாவது, பள்ளிக்கு செல்ல மட்டும் அவன் அவனுடைய தந்தையின் உதவியை நாடுவான். ‘‘அப்பாதான் நிகிலை எப்போதும் பள்ளியில் கொண்டு வந்து விடுவார். அதன் பிறகு அவர் அலுவலகம் சென்றுவிடுவார்’’ என்று பேசத் துவங்கினார் மயூரி. ‘‘சில சமயம் அப்பா அலுவலக வேலையாக ஊருக்கு சென்றுவிட்டால் நிகிலால் பள்ளிக்கு வரமுடியாமல் போய்விடும். மத்த வேலையை தன்னால் செய்ய முடியும் போது, அந்த ஒரு வேலை மட்டும் அப்பாவை எதிர்பார்க்க வேண்டி இருக்குன்னு என்னிடம் பல முறை சொல்லி வருத்தப்படுவான்.

அதே சமயம் பள்ளிக்கும் வரமுடியவில்லைன்னு மனவருத்தம் அடைவான். அவன் அப்படி இருப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ரொம்பவே கஷ்டமா இருக்கும். இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும்னு முடிவு செய்தேன். எனக்கு அவன் தினமும் பள்ளிக்கு வரணும். அவ்வளவு தான். ஆனால் என்ன செய்ய வேண்டும்ன்னு தெரியல’’  என்றவர் தன் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரின் உதவியுடன் ஒரு புதுமாதிரி சைக்கிளை  வடிவமைத்துள்ளார். ‘‘என் தம்பி வளர்ந்துவிட்டான்.

அப்பா வால் தினமும் அவனை தூக்கி வண்டியில் அமர்த்தி வைத்து மறுபடியும் வீல்சேரில் வைத்து பள்ளிக்கு கொண்டு வருவது சிரம மாக உள்ளது.  இதனாலேயே அவன் பாதி நாட்கள் பள்ளிக்கு தாமதமாக வருகிறான். இதை சரிசெய்ய என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நானும் அதே பள்ளிக்கு  சைக்கிளில் செல்கிறேன். என்னுடன் என் தம்பியையும் அழைத்துச் செல்லலாமே... ஆனால் அவனால் சைக்கிளில் அமர முடியாது. என் சைக்கிளுடன்  வீல் சேரை இணைத்துவிட்டால் அவன் என்னுடன் பள்ளிக்கு வரமுடியுமே. அப்பாவும் கஷ்டப்பட தேவையில்லை.

இது பற்றி என் அறிவியல் ஆசிரியர்களிடம் ஆலோசனை செய்தேன். சைக்கிளையும், வீல் சேரையும் ஒன்றாக சேர்த்துவிடலாம்ன்னு அவர்கள்  சொல்ல... அதற்கு ஏற்ப சைக்கிளுடன் வீல்சேரை இணைத்தேன். அது மட்டும் இல்லை சைக்கிளில் உள்ள பிரேக்கையும் வீல்சேர் சக்கரத்துடன்  சேர்த்து இணைத்தேன். இதனால் சைக்களில் பிரேக் பிடிக்கும் போது வீல்சேர் நகராமல் இருக்கும். இது தவிர நிகில் கீழே விழாமல் இருக்க பெல்ட்  எல்லாம் இணைத்து இருக்கேன்’’ என்றவரின் இந்த சைக்கிள் வீல்சேர் அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

‘‘மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. எனது பள்ளி சார்பாக நான் இந்த வீல்சேர் சைக்கிளை கண்காட்சியில் வைத்தேன்.  இப்போது இது மாநில அளவிலான கண்காட்சியில் தேர்வாகியுள்ளது. என் தம்பிக்காக செய்தது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை நினைக்கும் போது  ரொம்ப பெருமையாக உள்ளது. மாற்றுத்திறனாளிகள் இந்த சமூகத்தில் பாகுபாடின்றி சமமாக இயங்க, அதற்கு ஏற்ற வசதிகளை அரசு செயல்படுத்த வேண்டும்’’ என்று தன் கோரிக்கையை முன்வைத்துள்ளார் மயூரி.

- ஸ்வேதா கண்ணன்

Related Stories: