தென் துருவத்தை தொட்ட முதல் இந்தியப் பெண்

நன்றி குங்குமம் தோழி

மார்கழி மாதம் முடிந்தும், சென்னையில் குளிர் இன்னும் குறையவில்லை. உலகின் எப்போதும் பனிப்படர்ந்து இருக்கும் தென் துருவத்தில் (South Pole) சத்தமில்லாமல் அதிகாலை பொழுதில் ஜனவரி மாதம் 13ம் தேதி, அபர்ணா குமார் ஐ.பி.எஸ் அதிகாரி தன் கால் தடத்தை பதித்துள்ளார். இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையில் டி.ஐ.ஜியாக அபர்ணா பணியாற்றி வருகிறார். சவுத் போலில் கால் பதித்த முதல் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற பெருமையை இவர் தட்டிச் சென்றுள்ளார். பயணம் துவங்கும் முன் அபர்ணாவிற்கு நிமோனியா ஜுரம் இருந்துள்ளது. அதை பொருட்படுத்தாமல் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.  ‘‘மைனஸ் டிகிரியால் எங்கும் பனிப்படர்ந்து இருந்தது. வேகமான பனிக்காற்று, பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட மார்பு நெரிசலை பொருட்படுத்தாமல் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் பனிச்சறுக்கு செய்தது என்னால் மறக்க முடியாது.

இங்கு ஒவ்வொரு நாளும் சீதோஷ்ணநிலை மாறிக் கொண்டே இருக்கும். ஒரு நாள் மேகம் இருள் சூழ இருக்கும், மறுநாள் பனிக்காற்று வீசும், அடுத்த நாள் பனிப்பொழிவு... அன்டார்டிகா, பூமியின் மிகவும் வறண்ட மற்றும் குளிர் பிரதேசம். இங்கு வெட்ட வெளியில் பனியில் இருப்பது எவ்வளவு கடினம் என்பதை நான் அங்கு சென்ற போது உணர்ந்தேன். கை கால்கள் எப்போதும் விறைக்கும் தருணத்தில் இருக்கும். ஒவ்வொரு முறை ஓய்வு எடுக்கும் போது, நான் உறைந்து விடுவேனோ என்ற பயம் என்னுள் இருந்தது. குளிர் என்னை அதிகமாக தாக்கும் முன்பு சாப்பிட்டு கையுறையை அணிந்து பனிச்சறுக்குக்கு தயாராக வேண்டும். சிலசமயம் இரண்டு கையுறைகள் கூட அணிந்து இருக்கேன். என்னுடன் வந்த அனைவரும் உடல் நிலை காரணமாக பயணத்தை தொடரவில்லை’’ என்ற அபர்ணா மனித நடமாட்டமே இல்லாத பகுதியில் 111 கிலோ மீட்டர் தூரம் கால்நடையாக தென்துருவத்தை அடைந்துள்ளார்.

‘‘நான் சென்ற போது அங்கு மைனஸ் 40 டிகிரி. உடலில் இருக்கும் ரத்தத்தை உறையவைக்கக் கூடிய வெப்பநிலை. நான் கைவீசிக் கொண்டு செல்ல முடியாது. என்னுடைய பயணத்திற்கு தேவையான உணவு, மருந்துகள் மற்றும் உடைமைகளை எடுத்து செல்லணும். அது மட்டுமே 35 கிலோ எடை இருந்தது’’ என்றவருக்கு பயணம் புதிதல்ல. ஆறு கண்டங்களின் மிக உயரமான ஆறு மலைகளில் ஏறி சாதனை படைத்திருக்கும் அபர்ணாவின் சாதனை மணி மகுடத்தில் இது மற்றொரு மைல்கல். 2002ம் ஆண்டு ஐ.பி.எஸ் பயிற்சியை முடித்த அபர்ணா குமார் 211 முறை பல்வேறு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்தவர். இப்போது தென்துருவத்தை அடைந்து நம் நாட்டின் தேசியக் கொடி மற்றும் இந்தோ-திபெத் போலீஸ் படையின் கொடியையும் ஊன்றி இந்தியாவின் பெருமையை உலகுக்கு பறைசாற்றியுள்ளார். இதன் மூலம் தென்துருவத்தை தொட்ட முதல் இந்திய பெண் என்ற பெருமை அபர்ணாவுக்கு கிடைத்துள்ளது. இவரின் சாதனையை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர்  யோகி ஆதித்யநாத் பாராட்டியுள்ளனர்.

கோமதி பாஸ்கரன்

Related Stories: