ஒரு நிஜமான குடும்பம்

நன்றி குங்குமம் தோழி

ஓர் அழகான குடும்பத்துக்குள் இரண்டு மணி நேரம் வாழ்ந்த பேரனுபவத்தைக் கொடுக்கிறது ‘Shoplifters’.  டோக்கியா நகரின் ஒதுக்குப்புறத்தில் குருவிக்கூண்டைப் போல் ஒரு சிறு வீடு. அதில் ஒரு குடும்பம் சண்டை சச்சரவுகள் இல்லாமல், அன்பு பொங்க ஆனந்தமாக வசித்து வருகிறது. மரணத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு பாட்டி தான் அதன் தலைவி. எல்லோரையும் தன் குழந்தைகளைப் போல பாசம் காட்டும் அவளுக்கு மாதம் 30 ஆயிரம் யென் பென்சனாக கிடைக்கிறது. அதனை குடும்பத்துக்காகவே செலவழிக்கிறாள்.

அவளின் மகனைப் போன்ற ஓசாமு என்ற நாற்பது வயதுக்காரர் கட்டிட வேலை செய்து வருகிறார். அவரின் மனைவி நொபுயாவிற்கு சலவையகத்தில் துணி துவைத்து இஸ்திரி செய்யும் பணி. இவர்களுடன் ஷோட்டா என்ற சுட்டிச் சிறுவனும், அகி என்ற விடலைப்பருவ பெண்ணும் வசிக்கிறார்கள். கடைகளில் திருடுவது இக்குடும்பத்தின் முக்கியத் தொழில். வழக்கம் போல ஓசாமும் ஷோட்டாவும் சேர்ந்து ஒரு கடையில் திருடுகிறார்கள். தாங்கள் திருடியதை யாருமே பார்க்கவில்லை என்ற குஷியோடு வீட்டுக்கு நடைப்பயணமாக திரும்பிக்கொண்டிருக்கும்போது வழியில் நான்கு வயதான யூரி என்ற சிறுமியைச் சந்திக்கிறார்கள்.

அவள் குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கிறாள். அவளின் கை, கால்களில் வெட்டுக் காயங்கள். வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட அவள் பேசுவதில்லை. அவளை அப்படியே விட்டுவிட்டு போக ஓசாமுக்கு மனமில்லை. அதனால் அச்சிறுமியையும் தன் வீட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறார். குழந்தையைக் கடத்திவிட்டார்கள் என்ற குற்றம் நம் மீது விழுந்துவிடும் என்று குடும்பத்தினர் பயப்படுகின்றனர். சிறுமியிடம் அவளின் வீட்டைப் பற்றி விசாரிக்கிறார்கள். வீட்டுக்குப்போக விருப்பமில்லாததை கண் பார்வையிலேயே அச்சிறுமி தெரிவிக்கிறாள்.

என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் யூரியைக் குடும்பத்தின் புதிய உறுப்பினராக்கி மகிழ்கிறார்கள். சரியான நேரம் கிடைக்கும்போது நொபுயோவும் சலவைக்கு வரும் துணிகளில் இருக்கும் கவனிக்காமல் விடப்பட்ட பொருட்களைத் திருடுகிறாள். அகி ரகசியமாக பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். இந்நிலையில் வேலையின் போது ஓசாமுமின் காலில் பலத்த அடிபடுகிறது. அவரால் வேலைக்கும் போக முடிவதில்லை. திருடவும் முடிவதில்லை. அதனால் ஷோட்டாவுடன் சேர்ந்து சிறுமி யூரிக்கும் திருட பயிற்சி தருகிறார்.

நொபுயோவுடன் மகளைப் போல நெருக்கமாகிறாள் யூரி. ஒரு கட்டத்தில் வீட்டையும் பெற்றோரையும் கூட அவள் மறந்துவிடுகிறாள். குடும்பமே சமூகத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டாலும் அன்பாக, மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இவர்களுடன் இணைந்ததால் யூரியும் மகிழ்ச்சியில் ததும்புகிறாள். இந்நிலையில் யூரியின் புகைப்படத்துடன் ‘சிறுமி காணவில்லை’ என்று செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அதைப் பார்க்கும் குடும்பத்தினர் பதற்றமடைகின்றனர். அச்சிறுமியின் உண்மையான பெயர் யூரி அல்ல ஜூரி என்று தெரியவருகிறது. அவள் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையும் கூட.

யூரியின் முடியை வெட்டி அவளின் அடையாளத்தை மாற்றுகிறார்கள். இச்சூழலில் நொபுயோவிற்கு தன்னுடன் வேலை செய்யும் பெண்மணியுடன் பிரச்சனை ஏற்படுகிறது. அவளுக்கு யூரியைப் பற்றிய விஷயம் தெரியும் என்பதால் நொபுயோவை மிரட்டுகிறாள். நொபுயோ யூரிக்காக தான் பார்த்து வந்த வேலையை விடுகிறாள். குடும்பத்தின் பொருளாதாரநிலை சீர்குலைகிறது. இந்நிலையில் பாட்டி உறங்கிக் கொணடிருக்கும்போதே இறந்துவிடுகிறாள். அவளை வீட்டுக்குள்ளேயே புதைத்து விடுகின்றனர். பொருளாதார தேவைக்காக பாட்டி இறந்ததை அரசிடமிருந்து மறைத்து பென்சனை நொபுயோ வாங்குகிறாள்.

நாட்கள் நகர்கிறது. ஷோட்டாவும் யூரியும் சேர்ந்து ஒரு கடைக்குத் திருடப் போகிறார்கள். ஷோட்டா கையும் களவுமாக மாட்டிக்கொள்கிறான். கடைக்காரர்களிடமிருந்து தப்பிக்க அவன் ஒரு பாலத்தில் இருந்து கீழே குதித்து காலை உடைத்துக்கொள்கிறான். காவல்துறை அவனைப் பிடித்து இறந்துபோன பாட்டியையும், யூரி யார் என்ற உண்மையையும் கண்டுபிடிக்கிறது. நொபுயோ எல்லா பழியையும் ஏற்றுக்கொள்கிறாள். ஓசாமுவை விடுவிக்கின்றனர். யூரி வசதியான தன் குடும்பத்துக்குத் திரும்புகிறாள். ஷோட்டா ஒரு அனாதை இல்லத்தில் சேர்க்கப்படுகிறான்.  

அனாதை இல்லத்துக்குத் தெரியாமல் ஷோட்டாவும் ஓசாமும் சிறையில் இருக்கும் நொபுயோவைப் பார்க்க வருகிறார்கள். நொபுயோ ஷோட்டாவிடம்  அவனைப் பற்றிய விஷயங்களைச் சொல்கிறாள். விருப்பமிருந்தால் உன் பெற்றோர்களைத் தேடிக் கண்டுபிடி என்கிறாள். ஷோட்டா ஒரு இரவு ஓசாமுடன் தங்குகிறான். ஷோட்டா மறுநாள் இல்லத்துக்குத் திரும்புவதால் ஓசாமு யாருமில்லாத அனாதையாகிறார். யூரியின் அம்மா எப்போதுமே பிஸியாக இருக்கிறார். யூரி ஏதாவது செய்தால் கடிந்துவிழுகிறார். யாருமற்ற பெரிய பங்களாவில் விளையாடவோ, பேசவோ ஆளில்லாமல் தன்னந்தனியாக நின்று கொண்டு ஏக்கத்துடன் தெருவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் யூரி.

திரை இருள படம் நிறைவடைகிறது. அந்த பாட்டி அவளின் உண்மையான குடும்பத்தினரால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு நடுத்தெருவில் விடப்பட்டவள், நொபுயா தன் முன்னாள் கணவனால் பல கொடுமைக்கு ஆளானவள். தற்பாதுகாப்புக்காக கணவனையே  கொலை செய்தவள். அந்த கொலைக்கு  உறுதுணையாக இருந்தவர் தான் ஓசாமு. பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் அகி, காரில் தன்னந்தனியாக உறங்கிக்கொண்டிருந்த சிறுவன் ஷோட்டா. வசதியான பெற்றோரிடமிருந்து அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் நொறுங்கிப் போன குழந்தை யூரி.

அவள் உடல் முழுவதும் அம்மா அடித்த காயங்கள். இப்படி ரத்த சம்பந்தமே இல்லாத மனிதர்கள் ஒரு சின்ன வீட்டில் குடும்பமாக இணைந்து, மகிழ்ச்சியில் திளைத்து, அன்பை பகிர்ந்து குடும்பம் என்ற அமைப்பிற்கு ஒரு புதிய அர்த்தத்தைத் தருகிறார்கள். அது நாம் குடும்பம் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பதிலிருந்து எவ்வளவு மாறுபட்டிருக்கிறது என்பதில் இப்படம் பெரும் வெற்றியடைகிறது. நொபுயாவின் கையில் ஒரு காயம் இருக்கும்.

அது அவளின் முன்னாள் கணவனால் ஏற்பட்டது. அதுபோன்ற ஒரு காயம் யூரியின் கையிலும் இருக்கும். யூரியை இறுக்கமாக அணைத்துக்கொண்டு ‘‘குடும்பம் என்றால் இந்த மாதிரி கொடுமை யெல்லாம் நடக்காது. அப்படி நடந்தால் குடும்பம் இல்லை...’’ என்பாள். ஆம்; வன்முறையும் கொடுமையும் அற்று அன்பால் திளைப்பதே குடும்பம். அதுவே இப்படம் நமக்கு சொல்லும் சேதி. படத்தில் நடித்தவர்களின் நடிப்பு அவ்வளவு இயல்பு.

மெதுவாக செல்லும் திரைக்கதை ஒரு கட்டத்தில் நம்மை வசப்படுத்தி அந்தக் குடும்பத்தின் உறுப்பினராக்கி விடுகிறது. பாட்டி, அகி, நொபுயோ, யூரி என்று குடும்ப வன்முறையில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களே என்பதையும் இப்படம் சொல்லாமல் சொல்கிறது. ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் உயரிய விருதைப் பெற்ற இந்த ஜப்பானிய படத்தின் இயக்குனர் Hirokazu Kore-eda.

தோழி அந்தரங்கம்

ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பிரச்னைகள். வெளியில் தெரிவது கொஞ்சம். உள்ளுக்குள் வைத்து மருகுவது அதிகம். எல்லாவற்றையும் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது. அதிலும்  ‘அந்தரங்கம்’ என்றால்... கேட்கவே வேண்டாம். சொன்னால் ‘நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்’ என்ற தயக்கம் ஒருபுறம். மற்றவர்களிடம் சொல்லிவிடுவார்களோ என்ற பயம் மறுபக்கம். இந்நிலை இனி வேண்டாம். ‘அந்தரங்க’ பிரச்னையை நினைத்து மருகி மருகி உங்கள் வாழ்க்கையை தொலைக்க வேண்டாம்.

நம்பிக்கைக்குரிய தோழியாக, உங்கள் நலம் விரும்பும் உயிராக, பிரச்னையிலிருந்து உங்களை விடுவிக்கும் நட்பாக இதோ ‘குங்குமம் தோழி’ உங்கள் இரு கரங்களையும் அன்புடன் பற்றிக் கொள்கிறாள். அச்சம்  வேண்டாம். நிச்சயம் இவள் ரகசியம் காப்பாள். ஆறுதலாக இருப்பாள். நம்பிக்கை அளிப்பாள். காப்பாற்றி கரை சேர்ப்பாள். பாலியல் பிரச்னைகள் தொடங்கி குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் வரை அனைத்துக் குழப்பங்களில் இருந்தும் உங்களை விடுவிக்க காத்திருக்கிறாள். தயக்கமில்லாமல் உங்கள் கேள்விகளை -

‘என்ன செய்வது தோழி?’

குங்குமம் தோழி,

தபால் பெட்டி எண்: 2924

எண்: 229, கச்சேரி சாலை,

மயிலாப்பூர்,

சென்னை - 600 004

என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என அவசியமில்லை. தேவை பிரச்னைக்கு தீர்வு தானே தவிர அடையாளங்கள் இல்லையே...கரம் கோர்த்து தலை வருட உங்களுக்காக தோழி காத்திருக்கிறாள்!

- த.சக்திவேல்

Related Stories: