தோடர் இனத்தின் முதல் பெண் மருத்துவர்

நன்றி குங்குமம் தோழி

நீலகிரி மாவட்டத்தில் 1,600 பேர் மட்டுமே உள்ள பழங்குடியினர் தோடர் இனம். இவர்கள் ‘தொதவம்’ என்ற மொழியை மட்டுமே பேசக்கூடியவர்கள். இந்த மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இன மக்கள் இந்த மொழியினை பேசி வருகின்றனர். சமீபத்தில் ஐநாவின் துணை அமைப்பான யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் அழியும் நிலையில் 42 மொழிகள் இருப்பதாகவும் அதில் தோடர் இன மொழியும் ஒன்று என தெரிவித்துள்ளது.

குன்னூர் அருகே உள்ள நெடி மந்து, பொட்டு மந்து, தேனாடு மந்து, கோடநாடு மந்து, சிக்கட்டி மந்து, கண்ண மந்து ஆகிய இடங்களில் தோடர் இன மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களது வாழ்க்கை பெரும்பாலும் எருமை மாடுகளுடன் தொடர்புடையது. இவர்கள் வசிக்கும் பகுதிக்கு மந்துகள் என்று பெயர். இதை அடிப்படையாக கொண்டுதான் உதகமண்ட் என்று ஆங்கிலேயர்கள் ஊட்டியை அழைத்துள்ளனர். இந்த மக்கள் பள்ளிக்கு செல்வதே அபூர்வம் என்ற நிலையில் அந்த இனத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் பாரதி என்பவர் உயர்கல்வி கற்றுள்ளார்.

அதிலும் பல் மருத்துவராக பட்டம் பெற்றுள்ளார். இந்த மாவட்டத்தில் தோடர் இன பெண் ஒருவர் மருத்துவராக உயர்ந்துள்ளதை அந்த இனமே கொண்டாடுகிறது. புரட்சி கவிஞரின் பெயரை வைத்ததால் தானோ என்னவோ மலைவாழ் இனத்தில் இருந்து புதிய முத்து பிறந்துள்ளதாக அவ்வின மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். தோடர் மக்கள் வாழ்க்கை தரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து வந்துள்ளது. இதனை அறிந்து மத்திய, மாநில அரசுகள் இவர்களுக்கு உதவி செய்து வருகின்றன. இதன் மூலம் தோடர் இன மக்களின் வாழ்க்கை தரம் தற்போது உயர்ந்துள்ளது.

இளைய தலைமுறையினர் பல்வேறு துறைகளில் பட்ட படிப்புகளை பயின்று வருகின்றனர். இருப்பினும் தோடர் இனத்தில் இதுவரை யாரும் மருத்துவம் பயின்றது  இல்லை என்ற குறை நிலவி வந்தது. உதகை அருகே உள்ள தேனாடு மந்தையை சேர்ந்த மந்தேஷ் குட்டன் - நேரு இந்திரா தம்பதியரின் மகள் பாரதி அதனை போக்கி பல் மருத்துவராக பட்டம் பெற்றுள்ளார். கோவை தனியார் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவ பட்டம் பெற்ற பாரதி, ‘‘என்னை போன்று எங்கள் இனத்தவர் பலரும் உயர்கல்வி கற்று எங்கள் இன மக்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்’’ என்றார்.

- கோமதி பாஸ்கரன்

Related Stories: