78 ஆண்டுகள் இலவச பிரசவம்!

நன்றி குங்குமம் தோழி

ஆட்டோக்களில் பிரசவத்துக்கு இலவசம் என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதை பார்த்திருக்கிறோம். கர்நாடகா, பவகாடா தாலூக், கிருஷ்ணாபுரா கிராமத்தில் வசிக்கும் மக்கள் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் அவர்கள் தேடுவது நரசம்மா என்ற மூதாட்டியை தான். மிகவும் பின்தங்கிய பகுதியான பவகாடாவில், தலைவலி, காய்ச்சலுக்கு மருத்துவம் பார்ப்பதற்கே டாக்டர்கள் கிடையாது. பிரசவம் பார்க்க டாக்டர்களுக்கு எங்கே போவது. இங்குள்ள கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க உதவியாக இருந்தவர் நரசம்மா.

சுலகத்தி நரசம்மா என்றால் அந்த சுற்றுவட்டாரத்தில் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சுலகத்தி என்றால் கன்னட மொழியில் பிரசவத்துக்கு உதவுபவர் என்று பொருள். நரசம்மா என்று பெயர் வைத்ததால் தானோ என்னவோ நர்சிங் பணியில் அவருக்கு ஈடுபாடு அதிகரித்தது. பிரசவத்துக்கு இலவசம் என விளம்பர பலகை வைக்காதது தான் இவரது குறை. இதுவரை 15 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்து அசத்தியுள்ளார் நரசம்மா.

எடுத்தவுடன் சிசேரியன் என பணத்தின் மீது குறிவைக்கும் டாக்டர்கள் மத்தியில் இவர் வேறு லெவல். 1940ல் தனது 20 வயதில் பிரசவம் பார்க்கும் பணியை தொடங்கியுள்ளார் நரசம்மா. 78 ஆண்டுகளாக இவர் இந்த பணியை சேவையாக ஒரு பைசா கூட வாங்காமல் இலவசமாக செய்து வந்துள்ளார். இவரின் இந்த பணிக்கு முன்னோடி இவரின் பாட்டி மார்கம்மா. இவரும் பிரசவம் பார்த்து வந்துள்ளார். அவரிடம் தான் பிரசவம் பார்க்கும் கலையை கற்றுக்கொண்டுள்ளார் நரசம்மா.

இப்போது அந்த கிராமத்தில் மருத்துவ வசதிகள் வந்திருந்தாலும், கர்ப்பிணிகள் பிரசவ நேரத்தில் தேடுவது நரசம்மாவைதான். இவர் பிரசவம் பார்க்கும் கலை இவரோட அழிந்துவிடக் கூடாதுன்னு இவர் 180 பேருக்கும் அந்த கலையை சொல்லிக் கொடுத்துள்ளார். தற்போது இவரின் இளைய மகள் ஜெயம்மா தான் கிராமத்து கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்து வருகிறார். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பிரசவம் பார்த்த இவரது சேவையை பாராட்டி கடந்த 2018ல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை குடியரசு தினவிழாவில் வழங்கினார்.

பிரசவம் பார்ப்பது அவ்வளவு சுலபம் இல்லை. எந்த ஒரு மருத்துவ உதவியும் இல்லாமல் பார்க்கும் போது தாயும் சேயும் நலமாக மீட்கப்பட வேண்டும் என்பதால் நரசம்மா தன் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் திடீரென நுரையீரல் பாதிப்பால் உடல் நலம் குன்றிய நரசம்மா டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் நாளில் மரணத்தை தழுவினார். அவரது இறப்புக்கு முதல்வர் குமாரசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

- கோமதி

Related Stories: