இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு பிடித்த நடிகையாக இருந்திருப்பேன் ‘டூலெட்’ நாயகி

நன்றி குங்குமம் தோழி

பக்கத்து வீடுகளில் பார்த்துப் பழகிய எதார்த்த முகம் ஷீலா ராஜ்குமாருக்கு.  மிகவும் மென்மையாக அதே சமயம் தெளிவாகப் பேசுகிறார்.  நடிப்பைத்தாண்டி வாழ்க்கையின் மீதான அனுபவங்களும் அவரிடம் இருந்து வெளிப்படுகிறது.   ஆழமாகவும் அழுத்தமாகவும் தன் கருத்துக்களை முன் வைத்தார் ஷீலா.

தென்மேற்குப் பருவக்காற்று, தாரை தப்பட்டை, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன். இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படம் ‘டூலெட்’.  65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூலெட்’ படம் வென்றது. திரைக்கு வராத நிலையில், ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதோடு, விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது. 28 முறை சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

 மிகச் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதையும் பெற்றது. அனைவரின் எதிர்பார்ப்போடு இம்மாதம் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் திரைக்கு வரத் தயாராகி வருகிறது. இதில் நாயகியாக நடித்துள்ள நாட்டியக் கலைஞர் ஷீலா ராஜ்குமாரை சந்தித்தபோது தன் நடிப்பு அனுபவங்களையும் தாண்டி நிறைய நம்மிடம் பேசினார்.

‘‘இயல்பில் நான் ஒரு பரத நாட்டியக் கலைஞர். பரதக் கலையில் எம்.எஃப்.ஏ. முடித்துள்ளேன். மேலும் நான் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட். இயல்பிலே எனக்கு நடிப்பு நன்றாக வரும். டிராட்ஸ்கி மருது சார் மூலமாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. எனது கணவர் ராஜ்குமார், திரைத் துறையில் தம்பிச் சோழன் என்கிற பெயரில் நடிப்பு பயிற்சி வழங்கி வருகிறார்.

அவர் மூலமாக எனது புகைப்படங்களைப் பார்த்த செழியன் சார், எனது முகம் டூலெட் படத்தின் கேரக்டருக்குப் பொருந்திப்போவதால், ஷீலா நடித்தால் நன்றாக இருக்கும் என சோழனிடம் கூறியுள்ளார். என்னை அந்த நடிப்புக்குத் தயாராகச் சொன்னார். ஒரு மாதம் பயிற்சி எடுத்த பிறகு படப்பிடிப்பு தொடங்கியது.

2010ல் கல்லூரியில் படிக்கும்போது, எழுத்தாளர் இமயம் எழுதி தம்பிச் சோழன் இயக்கிய பெத்தவன் என்கிற ஒரு குறும்படத்தில் நடித்தேன். அதுதான் என்னுடைய முதல் நடிப்பு அனுபவம். டூலெட் மூவிக்குப் பிறகு ஜீ தமிழ் சேனலில் அழகிய தமிழ் மகள் தொடரில் முக்கிய ரோலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஓராண்டு இத்தொடரில் நடித்தேன். தொடர்ந்து மலையாளப் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது. அந்தப் படமும் பிப்ரவரி மாதத்தில் வெளிவர இருக்கிறது.

டூலெட் படம் நிறையவே டிராவல் செய்துள்ளது என்று சொல்லலாம்.  அந்தப் படத்தின் வெற்றி இன்னும் நிறைவடையவில்லை. மொத்த கதையும் மூன்று பேரைச் சுற்றிதான் நகர்கிறது. அம்மா, அப்பா, குழந்தை. செழியன் சாரிடம் உதவியாளராக  பணியாற்றிய சந்தோஷ் இதில் அப்பாவாக  நடித்துள்ளார். அவருக்கும் இதுதான் முதல் படம்.  

அவரும் சிறப்பாகவே தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் குழந்தை நட்சத்திரமாக வரும் தருணுக்கு 4 வயதுதான். படம் வெளிவந்த பிறகு எங்கள் அனைவரின் உழைப்பும் இதில் தெரியும். எங்களின் முதல் படம் மாதிரியே இது இருக்காது.  அந்த அளவுக்கு படம் எதார்த்தமாக இயல்பாக வந்துள்ளது. நாங்கள் மூவரும் இதில் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறோம்.  படம் பார்த்தவர்கள் அனைவருமே மிகவும் சிறப்பாக படம் வந்திருப்பதாகத் தெரிவித்தார்கள்.

கோவா திரைப்பட விழாவில்தான் நான் முழுப் படத்தையும் பார்த்தேன். என்னை திரையில் பார்த்த அந்த நொடி ரொம்பவே மகிழ்ச்சியானது. ஒரு பார்வையாளராய் படம் பார்த்த நிலையில், அடுத்த ஒரு சில நிமிடத்தில்தான், படத்தில் நடித்திருப்பது நான் என என்னிடம் சொல்லிக் கொண்டேன். என்னை மறந்து பார்க்கும் அளவிற்கு படம் அத்தனை நேர்த்தியாக இயல்பாக இருந்தது. படத்தில் ஒரு இடத்தில் கூட என்னை நான் பார்க்கவில்லை. அமுதா என்கிற கதாபாத்திரம் மட்டுமே தெரிந்தது.

இது செழியன் சார் 2007ல் எழுதிய, அவரது வாழ்க்கையில் நடந்த உண்மைக் கதை. முதலில் அஞ்சலி, தமனா மாதிரியான பிரபலங்களை நடிக்க வைக்கலாமா என யோசித்துள்ளார். ஆனால் பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரியான லுக் இருக்கனும், அதே சமயம் கேரக்டருக்கும் பொருந்தணும் என முடிவு செய்து என்னைத் தேர்வு செய்தார். எனது திரைப்பட வாய்ப்பு செழியன் சாரிடம் இருந்து வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. அவரது படைப்பில் நான் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியும் சந்தோசமுமாக இருக்கிறது. உலக சினிமாவின் மீது செழியன் சாருக்கு மிகப் பெரிய ரசனை இருக்கு.

உலக சினிமா குறித்த கட்டுரைகளை நிறையவே அவர் எழுதி இருக்கிறார். படம் எடுக்கும்போதே விருதுக்காக எடுக்கப்படுகிற படமாகத்தான் இது இருந்தது. படம் வெளியான நிலையில், இரண்டே மாதத்தில் தேசிய விருதையும் வென்றது. தமிழ் சினிமா மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி நகரத் தொடங்கி இருக்கிறது என்றே சொல்லலாம். தனித்து சுதந்திரமாக இயங்குபவர்களுக்கு வெற்றி இங்கே சாத்தியமாகிறது. அந்த மாதிரியான நம்பிக்கையை டூலெட், மேற்கு தொடர்ச்சி மலை மாதிரியான சின்ன பட்ஜெட் படங்கள் கொடுக்கத் துவங்கியுள்ளன.

டூலெட் படம் வெளியானால் மிகப் பெரும் தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது. இந்த படம் நிறைய பேரை யோசிக்க வைக்கும். எந்த தளத்தில் நின்று யோசித்தாலும் படம் பொருந்தும். எல்லா உணர்வுகளுமே இதில் உண்டு. படத்தைப் பார்க்கும்போது எல்லாவற்றையும் கடந்து வருவீர்கள்.

நமக்கு நெருக்கமானவர்களை, பக்கத்து வீட்டுப் பெண்ணை, பக்கத்து குடும்பத்தைப் பார்க்கிற மாதிரியான உணர்வை கண்டிப்பாகத் தரும். வெளியூரில் இருந்து சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள் இந்தப் படத்தைப் பார்க்கும்போது ரொம்பவே நெகிழ்ச்சியாவார்கள். எங்களுக்கும் நடிப்பில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். படம் வெளிவராமலே மலையாளப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. படம் வெளிவந்த பின் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியை நோக்கி என்னை நகர்த்தும் என்றே நினைக்கிறேன். மேலும் சினிமாவில் மிகப் பெரிய பொருப்பும் நமக்கு உள்ளது.

டூலெட் படப்பிடிப்பு வேலைகள் துவங்கியபோது ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் இருந்த நேரம் அது. அதைத் தொடர்ந்து கடலில் ஆயில் கலந்ததை வேறு அள்ளி கொட்டிக் கொண்டு இருந்தார்கள். மெரீனாவுக்குள் நுழைய தொடர்ந்து தடை இருந்தது.  ஆட்கள் அதிகமாக இல்லாமல் மிகவும் இயல்பாக திட்டமிடலோடு படப்பிடிப்பை செழியன் சார் நடத்தினார்.

சில இடங்களில் அவர் கேமராவை வைத்து சூட் பண்ணியதே எங்களுக்குத் தெரியாது. சில சாலைக் காட்சிகளை லைவ்வாக கையில் இருந்த பையில் வைத்து ரொம்பவே எதார்த்தமாகப் பதிவு செய்தார். ராமாபுரம், வடபழனி, விருகம்பாக்கத்தில் உள்ள வீடுகளிலும், மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளிலும் படப்பிடிப்பு நடந்தது. மொத்த படப்பிடிப்பும் 25 நாளில் முடிந்தது. ஒரு மணி 40 நிமிடத்தில் முடியும் திரைப்படத்தை திரைப்பட விழாவிற்காக 99 நிமிடமாகச் சுருக்கினார்கள்.

சென்னை மாதிரியான நகரில் வீட்டுக்காக ஒரு குடும்பம் படும் பாடுதான் மொத்த படம். பாலுமகேந்திரா சாரின் வீடு படத்தில் இருந்த எமோஷன் இதிலும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் வீடு படத்திற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது வேறு கதை. இது வேறு கதை. வீடு அர்ச்சனா அளவுக்கு என் நடிப்பும் இதில் பேசப்படும் என எதிர்பார்க்கிறேன்.  ஒரு நடிகையாக எல்லார் மனதிலும் நான் இருப்பேன். படம் பார்த்தவர்கள் அனைவரும் இயக்குநர் பாலுமகேந்திரா இருந்திருந்தால் உங்களைக் கொண்டாடியிருப்பார். அவருக்கு நெருக்கமான கதையாக இது இருந்திருக்கும் என்றனர்.

திரையில் ரசிகர்கள் நம்மைப் பார்க் கும்போது அந்த கேரக்டராகத்தான் நம்மைப் பார்க்க வேண்டும். அதுதான் நடிப்பிற்கான நமது அங்கீகாரம். வெற்றி. ஒரு நடிகையாக அதைத்தான் நானும் விரும்புகிறேன். தவிர திரைப்பட விழாக் களில் டூலெட் படம் பங்கேற்றதன் மூலமாக எனக்கும் நிறையவே மாற்றங்கள் வந்திருக்கு.  தமிழ்நாட்டில் படம் திரைக்கு வந்த பிறகு வேறுமாதிரியான வாய்ப்புகள் எனக்கு அமையும் என எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து சில படங்களுக்காகவும் பேசிக் கொண்டிருக்கிறேன். நல்ல வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாதிரியான திறமையான நடிகையாக ரசிகர்கள் என்னை எதிர்பார்க்கலாம்.

கறுப்பு வெள்ளை காலத்திலேயே திருமணம் செய்து கொண்டு நடித்து வெற்றிபெற்ற நடிகைகள் நிறையவே உண்டு. அவர்கள் எல்லோரும் அவரவர் நடிப்பில் நின்று நிறையவே சாதித்தார்கள்.திருமணம் முடிந்துவிட்டால் பெண் மட்டும் நடிக்கக் கூடாதா’’ என்ற கேள்வியை முன் வைத்து விடைபெற்றார்.

மகேஸ்வரி

Related Stories: