பைக் ரைடிங் எங்களின் உரிமை!

நன்றி குங்குமம் தோழி

‘‘என்னுடைய பெரிய பலமே என் இரண்டு சக்கர வாகனம்தான். எனக்கு தன்னம்பிக்கை மட்டும் இல்லை தைரியத்தை தரக்கூடியதும் அதுதான்’’ என்கிறார் வேலூர்வாசியான பிரேம்ராணி மஞ்சுனாதன். ஐ.டி துறையில் சென்னையில் வேலை பார்த்து வரும் இவர் ஒரு பைக் பிரியை. பெண்கள் பயன்படுத்தும் கியர் இல்லாத வண்டி இல்லை, ஆண்கள் பயன்படுத்தும் பெரிய ரக கியர் வண்டிகள் தான் இவரின் ஃபேவரிட். இந்தாண்டு சென்னையில் இருந்து கொல்கத்தா, மும்பை, தில்லி என தன் பைக் பயணத்தை துவங்க இருக்கும் 23 வயதான பிரேம்ராணி தன் பைக்கிங் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

‘‘சொந்த ஊர் வாணியம்பாடி. முதன் முதலில் பைக் ஓட்டும் போது நான் ஆறாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். காரணம் என் அண்ணன். என்னுடைய பெரிய இன்ஸ்பிரேஷன், ரோல் மாடல் அவர்தான். எனக்கு பைக் ஓட்ட சொல்லிக் கொடுத்ததும் அவர்தான். அண்ணனுடைய பைக் வீட்டு வாசலில் நிக்கும் போது எல்லாம் எனக்கு ஒரே பரபரப்பா இருக்கும். எடுத்து ஓட்டணும்ன்னு ஆசையா இருக்கும். அண்ணன் கிட்ட கேட்டேன், சரின்னு சொல்லி, பைக் ஓட்டவும் கத்துக் கொடுத்தார்.  

ஆறாம் வகுப்பு மாணவி என்பதால், பைக்கில் உட்கார்ந்தா கால் தரையில் எட்டவே எட்டாது. அப்ப பட்டன் ஸ்டார்ட் கிடையாது. கிக் ஸ்டார்ட் தான். ரொம்பவே கஷ்டமா இருக்கும். கிக் ஸ்டார்ட் செய்ய கத்துக்கவே ஒரு மாசமாச்சு. அதன் பிறகு தான் பைக் ஓட்ட கத்துக்கிட்டேன். கால் தரையில் எட்டாது, எங்க போனாலும் வண்டியை நிறுத்த வீட்டுக்கு வந்திடுவேன். ஒரு கட்டத்தில் நானே வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பிச்சேன். அப்பவும் கால் தரையில் தட்டாது, வீட்டு வாசலில் இருக்கும் திண்ணையில் கால் வச்சு நிறுத்துவேன். இப்படித்தான் நான் வண்டி ஓட்டவே கத்துக்கிட்டேன்’’ என்றவர் அதன் பிறகு எந்த வண்டியையும் விடுவதில்லை.

 

‘‘வண்டி நல்லா ஓட்ட கத்துக்கிட்டதும், எந்த வண்டி கிடைச்சாலும் எடுத்து ஓட்ட ஆரம்பிச்சேன். வீட்டில் எங்கேயாவது போக சொன்னா உடனே பைக்கை ஸ்டார்ட் செய்திடுவேன். நான் +2 படிச்சிட்டு இருந்த சமயம். அண்ணான் ‘அப்பாச்சி’ புது வண்டி வாங்கி இருந்தார். எப்படியாவது ஓட்டி பார்க்கணும்ன்னு ஆசை. அண்ணனிடம் கேட்ட போது மறுத்துட்டார். ரொம்ப கெஞ்சி கேட்டதும், ‘‘சரி எடுத்துக் கொண்டு போ, ஆனா கீழே விழக்கூடாது, எங்கேயும் இடிக்கக்கூடாது. அப்படி வந்துட்டா இந்த பைக்க உனக்கே கொடுத்திடுறேன்’’னு சொன்னாங்க. அண்ணனுக்கு என்ன தைரியம்னா, நான் இதுநாள் வரை சிங்கில் கியர் வண்டி ஓட்டினதில்லை. ஒரு பக்கம் பயம் இருந்தாலும் ஓட்டிடலாம்ன்னு ஒரு தைரியம்.

 முதல் கியர் போட்டேன், இரண்டாவது மாற்றும் போது அது போட வரல. ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியல. அப்படி இப்படி டிரை செய்ததில், இரண்டாவது கியர் விழுந்தது. அப்படியே ஒரு பெரிய ரவுண்ட் வந்து வீட்டில் வண்டியை நிறுத்தினேன். அண்ணன் எதுவுமே பேசல, வண்டி சாவியை கையில் கொடுத்திட்டு போயிட்டார். ஊர்ல என்னை அப்பாச்சி பொண்ணுன்னு தான் கூப்பிடுவாங்க’’ என்ற ராணி 18 வயசு நிரம்பியதும் முதல் வேலையாக ஓட்டுனர் உரிமத்தை பெற்றுள்ளார்.

‘‘ஓட்டுனர் உரிமம் வந்ததும், நிறைய சுத்த ஆரம்பித்தேன். அது நாள் வரை ஊருக்குள்ள தான் வண்டி ஓட்டுவேன். இப்பதான் அங்கீகாரம் கிடைச்சுடுச்சே, வீட்டில் கோயிலுக்கு போகலாம்ன்னு சொன்னா போதும், வண்டியிலேயே போயிடலாம்ன்னு கிளம்பிடுவோம். சொந்தக்காரங்க, அம்மாகிட்ட பொண்ண என்ன இப்படி வளர்க்கிற... வண்டி எல்லாம் ஓட்டிக்கிட்டு ஆம்பிள மாதிரி இருக்கா... அடக்கமா வீட்டில இருக்க சொல்லுன்னு சொல்லுவாங்க. எங்க வீட்டில் ஆணோ, பெண்ணோ எல்லாரும் சமம் தான்.

பெண்கள் வெளியுலகத்தை தெரிஞ்சுக்கணும்ன்னு நினைப்பாங்க. அப்படித்தான் எங்கள தைரியமான பொண்ணா வளர்த்தாங்க. என்னோட அக்காவும் பைக் ஓட்டுவா. அண்ணன் ராயல் என்பீல்டு பைக் வாங்கினாங்க. அதையும் ஓட்ட கத்துக்கிட்டேன். எந்த பெரிய பைக்கையும் என்னால் ஓட்ட முடியும்ன்னு ஒரு தன்னம்பிக்கை வளர்ந்தது. பள்ளி முடிச்சதும், பெங்களூரில், அண்ணனோட நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். வேலைப் பார்த்துக் கொண்டே, ஜெம்மாலஜி ஒரு வருட படிப்பு படிச்சேன்.

ஒரு முறை திருவண்ணாமலை கோயிலுக்கு பைக்கில் போக திட்டமிட்டோம். நானும் அக்காவும் ஒரு பைக். அம்மா, அண்ணனோடு வந்தாங்க. போகும் வழியில் இரண்டு பேர் நாங்க வண்டி ஓட்டுவதை பார்த்திட்டு எங்கள திசை திருப்ப, பக்கத்தில் இடிப்பது போல வந்து கட் குடுத்தாங்க. பொண்ணுங்கள கிண்டல் செய்றதே இவங்க வேலையான்னு தோணுச்சு. சண்டை போடல ஆர்ப்பாட்டம் செய்யல, நேரா அவன்கிட்ட போய் கட் கொடுத்தேன். பின்னாடி வந்த அண்ணன் பொண்ணுங்க வண்டி ஓட்டும் போது நீங்க இப்படி செய்றது  உங்களுக்கு தான் அசிங்கம்ன்னு சொல்லிட்டு வந்துட்டார்’’ என்றவர் பைக் ரைடிங் குழுவில் இணைந்தது எதிர்பாராத சம்பவம் என்றார்.

‘‘அண்ணன் பைக் ரைடிங் குழுவில் இணைந்து பல ஊர்களுக்கு பயணம் செய்துள்ளார். அந்த ஆர்வம்தான் அவரை கின்னஸ் சாதனையில் இடம் பெற வைத்தது. அவர் ‘லாங்கஸ்ட் ஜர்னி இன் எ சிங்கில் கன்ட்ரி வித்தவுட் ரிபீட்டிங் த ரூட்’ என்ற தலைப்பில் கின்னஸ் பட்டம் பெற்று இருக்கார். இந்தியா முழுக்க பைக்கில் பயணம் செய்து போன பாதையில் திரும்பாமல், வேறு பாதையில் வந்தார். அவர் அந்த பயணத்திற்கு போகும் போது அவரின் குழு நண்பர்கள் எல்லாரும் வழி அனுப்ப வந்தாங்க. குழுவின் தலைவர் அரவிந்த் அண்ணா நான் பைக் ஓட்டுவதை பார்த்து என்னை குழுவில் சேர சொன்னார். வீட்டில் பச்சைக் கொடி காட்ட அன்று முதல் அந்தக் குழுவில் இணைந்து நானும் பயணம் செய்ய ஆரம்பிச்சேன். அந்தக் குழுவின் முதல் பெண் ரைடர் நான்தான்.

இது நாள் வரை ஊருக்குள் வண்டி ஓட்டி இருக்கேன். குடும்பத்துடன் கோயிலுக்கு போவோம். குழுவில் சேர்ந்த பிறகு தான் முறையா பைக் எப்படி ஓட்டணும்னு கத்துக்கிட்டேன். பைக் ஓட்டவும் சில விதிமுறைகள் உண்டுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அவங்களுக்குன்னு மொழிகள் உண்டு. அதாவது முதலில் பயணம் செய்யும் நபர் சாலையில் பள்ளம் இருப்பதை தெரிந்து கொண்டால் அதை கடைசியில் பயணம் செய்யும் நபருக்கு தெரியப்படுத்தணும். பைக்கை அப்படியே எடுத்து ஓட்டிட முடியாது. ஹெல்மெட் மற்றும் ரைடிங் உடை அணிந்து இருக்கணும்.

ரைடிங் குறித்த ஒவ் வொரு  விஷயம்  தெரியும்போது ரொம்பவே இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. அதன் பிறகு நான் முழுமையா ரைடிங்கில் ஈடுபட ஆரம்பிச்சேன். முதல்ல ஒரு நாள் ரைடிங் ஏலகிரி, ஏர்காடுன்னு போக ஆரம்பிச்சேன். அதன் பிறகு கோவா, கர்நாடகா, மும்பைன்னு பைக்கில் பயணம் செய்து இருக்கேன்’’ என்று சொல்லும் பிரேம்ராணி பைக் பயணம் மூலம் மக்கள் மத்தியில் சமூக பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் எண்ணம் இருப்பதாக தெரிவித்தார்.  

‘‘நான் ஒவ்ெவாரு முறையும் பயணம் செய்யும் போது, ஹெல்மெட் அணிவது மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். எங்க குழுவில் ஹெல்மெட் இல்லாம பைக் எடுக்க முடியாது. எல்லாரும் கண்டிப்பா ஹெல்மெட் போடணும். பலருக்கு அதோட மதிப்பு தெரியல. வீட்டில் சண்டை போட்டு வண்டி வாங்குவாங்க.

ஹெல்மெட்டை கண்ணாடிக்கு மாட்டி இருப்பாங்க. யாருமே சாலை விதிகளை பின்பற்றுவது கிடையாது. இன்டிகேட்டர் இல்லாம திரும்புவாங்க. பின்னால வர்றவங்களுக்கு  சிக்னல் கொடுக்கணும்ன்னு கூட தெரியாது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் பெண்களுக்கு பாதுகாப்பு நம் நாட்டில் இல்லை. சின்ன சிசுவைக் கூட நாசம் செய்யும் அரக்கர்கள் மத்தியில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். பெண்ணை உடலால் பார்க்காமல், அவரை ஒரு மனித இனமா பாருங்க’’ என்றவர் ஒவ்வொரு முறையும் பயணம் செய்யும் போது அது குறித்து சமூக வளைத்தலங்களில் பதிவு செய்ய தவறுவதில்லை.

‘‘சென்னையில் இருந்து கிளம்பும் போதே எங்கே போறேன், எந்த இடத்தில் இருக்கேன், என் நோக்கம் என்ன என்பதை வெளிப்படுத்துவேன். அதன் மூலம் இளையதலைமுறையினருக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை. என் பைக்கிலும் இது குறித்த வாசகங்கள் இருக்கும். நானும் ஒரு பெண். தனியாக பல ஊர்களுக்கு பயணம் செய்கிறேன். பெற்ேறார் என் மேல் நம்பிக்கை வைக்கிறாங்க, நான் மக்கள் மேல் நம்பிக்கை வைக்கிறேன். காரணம் ஒரு முறை திருச்சிக்கு பயணம் செய்த போது என் வண்டியின் டயர் கிழிந்துவிட்டது.

என்ன செய்றதுன்னு தெரியல. எங்க குழுவினருக்கு விவரம் தெரிவித்தேன். அவர்கள் வர எப்படியும் சில மணி நேரமாகும். அது வரை சாலையில் இருந்த டீக்கடை தான் எனக்கு பாதுகாப்பு கொடுத்தது. கிளம்பும் வரை எனக்காக கடையை மூடாமல் இருந்தார்’’ என்றவர் பைக்கில் தனியாக பயணம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

‘‘பைக்கில் பயணம் செய்யும் போது ஒரு துணை நம்முடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். முன்பெல்லாம் 400 கி.மீ பயணம் செய்தாலே சோர்வாயிடுவேன். இப்ப பழகிடுச்சு. தொடர்ந்து பயணம் செய்வதால் உடல் சூடாகும். நிறைய தண்ணீர்,  பழச்சாறு குடிக்கணும். எப்போதும் என்னுடன் தண்ணீர் பாட்டில் மற்றும் பெட்ரோல் கேன் இருக்கும்.

ஹைவேயில் பயணம் செய்யும் போது அங்கு பெட்ரோல் பங்க் இருக்காது. அதனால் கையில் பெட்ரோல் ஸ்டாக் வைத்து இருப்பேன். எல்லாவற்றையும் விட வண்டியை நல்லா மெயின்டெயின் செய்யணும். ஒரு ஊருக்கு போகும் போது அங்குள்ள சீதோஷ்ணநிலையை தெரிஞ்சுக்கணும். சின்னச் சின்ன விஷயம் தான் கவனமா இருக்கணும்.

இப்ப என்னுடைய அடுத்த டிரிப் சென்னை, கொல்கத்தா, மும்பை, தில்லி. முதல் முறையாக வடமாநிலங்களுக்கு பயணம் செய்ய இருக்கிறேன். பழக்கமில்லாத பாதை, மக்கள் மற்றும் மொழி. இதுவும் ஒரு புது அனுபவம் தான்’’ என்ற பிரேம்ராணிக்கு கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பது கனவாம். கனவு மெய்படட்டும்.

-ப்ரியா

Related Stories: