ஒரு ராணி போல பயணம்!

நன்றி குங்குமம் தோழி

தினமும் நீங்கள் சென்று வரும் பேருந்தில் ஒரு நாள் உங்களுக்குப் பிடித்த இடத்தில் அமர்ந்து நீங்கள் மட்டுமே பயணம் செய்திருக்கிறீர்களா? ‘என்ன கிண்டலா? கவர்மென்ட் பஸ்ல இதெல்லாம் சாத்தியமா? என்னைக்காவது 11 மணிக்கு மேல போகிற பஸ்ல வேணும்னா அது நடக்கும். அதுவும் நமக்கு கடைசி ஸ்டாப்பா இருந்தா வாய்ப்பிருக்கு’ என்னும் உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. ஆனால் ஒரு பெண் தனியாக விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் லூயிஸா எரிப்ஸ். ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் நிருபராக வேலை செய்கிறார். சொந்த விஷயமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டோனா தீவிலிருக்கும் டவையோ நகரிலிருந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவிற்கு டிக்கெட் புக் செய்திருக்கிறார். சாதாரணமான சிக்கனக் கட்டணத்தில்தான் (economy class) இத்தனைக்கும் டிக்கெட் புக் செய்திருக்கிறார் லூயிஸா. விமானத்தில் ஏறியவருக்கு அதிர்ச்சி யாக மொத்த விமானமும் காலியாக இருந்திருக்கிறது.

சரி நாம் தான் முதல் ஆள் போல என நினைத்து அமர்ந்தவருக்கு நேரம் ஆக ஆகத்தான் யாருமே வராதது புரிந்தது. பதறிப்போய் அங்கிருந்த விமான பணிப்பெண்ணிடம் விசாரிக்க... நீங்கள் ஒருவர் மட்டுமே பயணம் செய்யவிருக்கிறீர்கள் என இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். பெரும்பாலும் எதிர்பார்த்த டிக்கெட் புக்கிங் நடக்கவில்லை எனில் அந்த குறிப்பிட்ட விமானத்தை ரத்து செய்வதுதான் வழக்கம். ஆனால் லூயிஸா ஒருவருக்காக பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் பறந்து மொத்த நாட்டையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிங்கிள் வுமனாக பறந்த லூயிஸா விமானத்தில் தன்னுடைய செல்ஃபி படம் மற்றும் விமான பைலட்கள் மற்றும் பணியாளர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. நாட்டின் இளவரசியாகவே இருந்தாலும் உடன் பணியாளர்கள், உறவினர் என நிச்சயம் யாரேனும் வருவார்கள். ஆனால் லூயிசா அதிர்ஷ்டசாலி என அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

- ஷாலினி நியூட்டன்

Related Stories: