கம்பல்ல... தெம்பு!

நன்றி குங்குமம் தோழி

சிலம்பம் என்பது கம்பல்ல.. அது நமக்குக் கிடைக்கும் தெம்பு என நம்மிடம் பேசத் தொடங்கினார் திரைத்துறையில் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்றிக் கொண்டே, மாணவர்களுக்கும் சிலம்பப் பயிற்சியினை முறைப்படி கற்றுத் தரும் பயிற்சியாளரான பி.கே. ராஜா. ஒரு அதிகாலைப் பொழுதில் சென்னை அண்ணா நகர் டவர் பார்க்கில் பெண்களுக்கென பிரத்யேகப் பயிற்சியினை வழங்கிக் கொண்டிருந்தவரிடம் பேசியபோது...

கையில் சிலம்பத்தை எடுத்து நம்மிடம் சுழற்றிக் காட்டியபடியே பேசினார். ‘‘உடலையும் உள்ளத்தையும் ஒருசேர உறுதி செய்து நிறையவே தெம்பை ஊட்டுவது இந்த சிலம்பம். நமக்கு வயது முதிர்வடையும்போது குழந்தைகள் நம் கையைப் பிடிக்கிறார்களோ இல்லையோ கம்புதானே அனைவருக்குமான ஊன்றுகோல் என்றார். ‘‘கம்பைச் சுழற்றி விளையாடும் வீர விளையாட்டே சிலம்பம். நம் பாரம்பரியத் தமிழனின் மூத்த கலை இது. ஆதிகாலத்தில் இருந்தே சிலம்பக் கலை இருந்துள்ளது.

அந்தக் காலத்தில் பெண்கள் வேல், கம்பு, வளரி போன்றவற்றை எடுத்து வீர விளையாட்டுக்களை விளையாடி இருக்கிறார்கள். முக்கியமாக தென் மாவட்டங்களான தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் வீரம் நிறைந்தவர்களாகவும், போர்க்களங்களைக் கண்டவர்களாகவும் இருந்துள்ளனர். சிலம்பம் என்பது போர் மற்றும் தற்காப்புக் கலை என்பதைத் தாண்டி, இன்று தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுகளிலும் இடம் பெற்றுள்ளது.

என்னிடத்தில் சிலம்பம் கற்க, ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் மிகவும் ஆர்வத்தோடு வருகிறார்கள். 60 முதல் 70 பெண்கள் தற்போது சிலம்பம் கற்றுக் கொள்கிறார்கள். நான்கு வயதில் தொடங்கி வயது வித்தியாசமின்றி யார் வேண்டும் என்றாலும் சிலம்பக் கலையை கற்கலாம். இதில் தொடுமுறை, அதாவது பொட்டு வைப்பது மற்றும் தொட்டுப் பார் என்பதுபோல், ஒவ்வொரு இடத்தையும் தொடுவதற்கு மதிப்பெண்கள் உண்டு.

துடுக்காண்டம், குறவஞ்சி, மறக்காணம், அலங்காரச் சிலம்பம், போர்ச் சிலம்பம், பனையேறி மல்லு, நாகதாளி, நாகசீறல், கள்ளன்கம்பு என்ற பிரிவுகளும் சிலம்பத்தில் உண்டு. மேலும் சிலம்பப் போட்டியில் விருதுகளையும், சான்றிதழ்களையும் பெறும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் 30 சதவிகித இட ஒதுக்கீடும் அரசால் வழங்கப்படுகிறது. பெண்கள் ரயில்வே மற்றும் காவல் துறையில் பயிற்றுநராகவும் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

இந்த வாரத்தில் சிலம்பம் போட்டிகள் மாவட்ட அளவில் திருவண்ணா மலையிலும், தேசிய அளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கி லும் நடைபெறுகிறது. அதற்கான பயிற்சியையும் மாணவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். நமது உடல்தான் நம்முடைய முதல் சொத்து. தினமும் ஒரு அரை மணி நேரமாவது ஏதாவது ஒரு உடற் பயிற்சியினைச் செய்தால்தான் உடலானது இறுதிவரை நோயின்றி நமக்கு ஒத்துழைப்புத் தரும்.

சிலம்பம் செய்வதால் கை கால்கள் வலுப்பெறுவதோடு, உடல் சுறுசுறுப்படைகிறது. பெண்களைப் பொறுத்தவரை தற்காப்பு என்பதையும் கடந்து, உடற்பயிற்சியாகவும், மன அழுத்தத்தை குறைக்கும் அருமருந்தாகவும் செயல்படுகிறது. இப்போதுள்ள பெண்களுக்கு சின்ன விசயத்தைக் கூடத் தாங்கும் மனோ தைரியம் என்பது இல்லை. தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்தால் வாழ்க்கையில் நிச்சயம் எதிர் நீச்சல் போடலாம். சிலம்பம் இது இரண்டையும் தருகிறது.

சிலம்பத்தைக் கற்க விரும்பும் அனைத்துப் பெண்களுக்கும் நாங்கள் துவக்கத்தில் இலவசமாகவே இங்கு பயிற்சி வழங்குகிறோம். பயிற்சியில் தொடர்ந்து விரும்பி ஈடுபட்டு, பெரிய அளவில் சாதிக்க நினைப்பவர்களுக்கு முறையான பயிற்சியும் வழங்கப்படும். என்னிடத்தில் நிறைய மாற்றுத் திறனாளி மாணவர்களும் சிலம்பப் போட்டியில் முறையான பயிற்சி பெற்று பங்கேற்று வருகிறார்கள். அவர்களில் ஒருசிலர் வெற்றி இலக்கைத் தொட்டிருக்கிறார்கள்.இந்தக் கலை தலைமுறை கடந்தும் எல்லோரையும் போய் சேர வேண்டும். இதுவே என் நோக்கம்’’ என முடித்தார்.

பி.கே.ராஜா, ஸ்டண்ட் மாஸ்டர்

‘‘சிவகங்கை மாவட் டம் தேவகோட்டை எனது ஊர். அடிப்படையில் நான் ஒரு விவசாயி. இப்போதும் விவசாயத்தை விடாமல் செய்கிறேன். சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்து இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளேன். எனது சின்ன வயதில் குங்பூ, கராத்தே, சிலம்பம் போன்ற விளையாட்டுக்களில் நிறையவே எனக்கு ஆர்வம் இருந்தது.

10 வயதில் மிகவும் சாதாரணமாக இந்த வீர விளையாட்டுக்களை கற்கத் தொடங்கினேன். அதைத் தொடர்ந்து நண்பர்களின் தூண்டுதலால் சினிமாவில் ஸ்டண்ட் செய்யும் ஆர்வம் வந்தது. 89களில் சினிமாவிற்குள் நுழைந்தேன். இதுவரை ஸ்டண்ட்  மாஸ்டராக 1000த்துக்கும் அதிகமான  படங்களுக்கு சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறேன். தொடர்ந்து சில படங்களில் ஸ்டண்ட் இயக்குநராகவும் இருந்து வருகிறேன்.

சிங்கம், சிங்கம் 2, திருடா திருடி, நாட்டாமை, போன்ற படங்களை உதாரணத்திற்குச் சொல்லலாம். ரஜினி சாருக்கு மாப்பிள்ளை, கமல் சாருக்கும் தேவர் மகன், ஆளவந்தான், அஜீத் சாருக்கு ஆஞ்சநேயா, விஜய் சாருக்கு பகவதி, துப்பாக்கி, விஜய் சேதுபதி சாருக்கு தென்மேற்கு பருவக் காற்று போன்ற படங்களில் சண்டைக் காட்சிகளை அமைத்துக் கொடுத்திருக்கிறேன். என்னோடு இந்தக் கலை அழிந்துபோகக் கூடாது என்பதற்காக  தொடர்ந்து அடுத்த தலைமுறையிடத்திலும் வளர்த்தெடுக்கும் நோக்கில் மாணவர்களுக்கு தினமும் பயிற்சிகளை வழங்கி வருகிறேன்’’ என்கிறார்.

சுகிர்தா பொறியியல் கல்லூரி மாணவி

‘‘சென்னை இந்துஸ்தான் கல்லூரியில் சிவில் இஞ்சினியரிங் மாணவி நான். கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிலம்பம் கற்று வருகிறேன். சின்ன வயதில் கையில் தொடப்பத்தை வைத்து சுற்றி சுற்றி விளையாடிக்கொண்டே வீட்டை சுத்தம் செய்வேன். படத்தில் சில கதாநாயகிகள் பைட் பண்ணும்போது எனக்கு அதைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கும். என் அப்பா கராத்தே செய்வதையும் நான் அருகில் இருந்து தினமும் பார்த்திருக்கிறேன். இவையெல்லாம் இயல்பாக எனக்குள் ஆர்வத்தை மேலும் விதைத்தது.

இது ஒரு வீரவிளையாட்டு என்பதைத் தாண்டி தன்னம்பிக்கை வளர்க்கிறது. தைரியமும் அதிகமாயிருக்கு. எதிரியை நாம் எப்படித் தாக்கனும், நம்மை யாராவது தாக்க வந்தால் எப்படி நம்மைத்  தற்காக்க வேண்டும் என்கிற புரிதல் வந்திருக்கு. எங்க தொட்டா எதிரிக்கு வலிக்கும் என்கிற நுணுக்கம் புரிகிறது. சிலம்பம் கற்பதில் உடற் பயிற்சியும் கிடைக்கிறது.. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய மாற்றங்கள் வருகிறது. என் உடல் என் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நேரக் கட்டுப்பாடும் தானாக வந்துவிடும்.

மேலும் நமது பாரம்பரியம் சார்ந்த கலை என்பதால் இந்த கலை அழிந்துவிடாமல், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். வீட்டிற்குச் சென்றால் என் அப்பாவிற்கு நான் கற்றுக்கொண்ட சிலம்பத்தை நானே பயிற்சியாளராக இருந்து கற்றுத் தருகிறேன். தொடர்ந்து மாநில மற்றும் சர்வதேச அளவில் விளையாட வேண்டும் என்பதே என் ஆசை’’ என்றார்.

கோப்பெருந்தேவி இரண்டாம் வகுப்பு மாணவி

‘‘சென்னை அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கிறேன். சிலம்பம் விளையாடு பவர்களைப் பார்க்கும்போது எனக்கும் ஆசை வந்தது. அப்பாவிடம் என் ஆசையைத் தெரிவித்தேன். உடனே சேர்த்து விட்டார். தினமும் அதிகாலை 5 மணிக்கு அப்பா என்னை தேவி என ஒருமுறை அழைத்ததுமே, எழுந்து கிளம்பி ரெடியாகி பயிற்சிக்காக இங்கு வருகிறேன். தினமும் பயிற்சி முடிந்து 7 மணிக்கு திரும்பி பள்ளிக்குக் கிளம்பிச் செல்கிறேன்’’ என்றார்.

ஆனந்த லெட்சுமி மற்றும் நர்மதா பள்ளி மாணவிகள்

கிருஷ்ணசாமி பள்ளியில் நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நர்மதா, அண்ணா ஆதர்ஷ் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறார். நாங்கள் நண்பர்கள். சிலம்பம் கற்பதற்கு முன்பு ரொம்பவே சோம்பேறியாக இருந்தோம். இதில் இணைந்த பிறகு தினமும் 5 மணிக்கே எழுந்து சிலம்பம் வகுப்புக்கு வந்துவிடுகிறோம்.

சுறுசுறுப்பு எங்களுக்கு நிறையவே வந்துள்ளது. நினைவாற்றல் அதிகமாகியுள்ளது. படிப்பிலும் கவனம் கூடியுள்ளது. கை மற்றும் கால்களுக்கு நல்ல பயிற்சியும் கிடைக்கிறது. கம்பில் கவனம் குவிவதால்  கண் பார்வையும் கூர்மையாகவே உள்ளது. நாங்கள் படிக்கும் பள்ளியிலும் ஆசிரியர்கள் ரொம்பவே ஆதரவாக உள்ளார்கள். பள்ளிகளில் நடக்கும் ஸ்போர்ட் மீட்டிலும் நாங்கள் சிலம்பம் செய்து காட்ட இருக்கிறோம்’’ என்கிறார்கள்.

- மகேஸ்வரி, ஏ.டி.தமிழ்வாணன்

Related Stories: