ப்யூட்டி பாக்ஸ்

நன்றி குங்குமம் தோழி

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!

கைகளை அழகூட்டும் மெனிக்யூர்

மெனிக்யூர். ஆங்கிலத்தில் மேனிக்யூர் (manicure). அதாவது சுருங்கச் சொன்னால் “கை, விரல், நக” ஒப்பனைக் கலை.முகத்திற்கு  அடுத்தபடியாக நம் உடலில் வெளியில் தெரியும் பாகம் என்றால் அது கைகள் மட்டுமே. நமக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது என்பதை நம்  முகம் மட்டுமல்ல கைகளும் எளிதாய் காட்டிக்கொடுக்கும். நமக்கு வயது ஏறஏற தோல்களில் தோன்றும் சுருக்கம் முகத்தில் மட்டுமல்ல  கைகளிலும் தெரியத் தொடங்கும். அந்தக்காலத்தில் ஐரோப்பிய பெண்கள் மற்றும் மகாராணிகள், முகத்தை மட்டுமல்லாது கைகள், கால்கள்  என சேர்த்தே  தங்களை அழகுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினர். பெரும்பாலும் மன்னர்காலத்து பெண்களிடத்தில் கைகளில்  கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு மெனிக்யூர்-பெடிக்யூர் செய்யும் பழக்கம் இருந்துள்ளது.

மெனிக்யூர் என்பது அழகுபடுத்துவது மட்டுமல்ல.. நமது கைகளை.. கைவிரல்களை.. எல்லாவற்றிற்கும் மேலாக விரல்களில் இருக்கும்  நகங்களைச் சுத்தப்படுத்தி நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி, விரல்களுக்கும் கைகளுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பது  எனலாம். புத்துணர்ச்சி கிடைப்பதன் மூலமாகவே கை மற்றும்  விரல்கள் சுருக்கம் நீங்கிய நிலையில் பார்க்க மிகவும் அழகாக  மினுமினுப்பாக வெளிப்படுகிறது.பெண்கள் பெரும்பாலும் தங்கள் முகம், தலைமுடிக்கு அடுத்து அழகுப் படுத்திக்கொள்ள விரும்புவது  கைகளைத்தான். ஏனெனில் அழகான முகம்… அலையலையான கூந்தல்… வாழைத் தண்டைப் போன்ற நீண்ட அழகிய கைகள் என்று தானே  பெண்களை கவிஞர்களும் வர்ணிக்கிறார்கள். முகத்திற்கு அடுத்தபடியாக வெளியில் சட்டெனத் தெரியும் கைகளும் விரல்களும் கைவிரல்  நகங்களும் பெண்களால் கூடுதல் கவனம் பெறுகிறது.

உண்மையைச் சொல்ல வேண்டு மென்றால் இதில் அழகை விட ஆரோக்கியமே மிகவும் முக்கியமானது. மெனிக்யூர் செய்யும்போது  விரல்கள் மற்றும் உள்ளங் கைகளில் உள்ள முக்கியமான நரம்புகளின் இணைப்புகள் (pressure point) தூண்டப்படுகின்றன.  உள்ளங்  கைகளுக்கும், விரல்களுக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதால் உடலில் பல பாகங்களோடு தொடர்பில் உள்ள நரம்புகள்  உடனடியாகத் தூண்டப்பட்டு மொத்த உடலுமே புத்துணர்ச்சி பெறுகிறது. நமது மூளை, இதயம், கண்கள், கழுத்து, முதுகுப் பகுதி எல்லாமே  புத்துணர்வு அடையும். உடலுக்கு உடனடி வலி நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு மன அழுத்தம் கூட சரியாக இதில் நிறைய  வாய்ப்பிருக்கிறது.

நவீன  யுகத்தில், அழகுக் கலைக்கென உள்ள தனிப்பட்ட பட்டயப் படிப்புகள், அழகு சாதனப் பொருட்களின் கணக்கிலடங்கா வருகை  மற்றும் அதை சந்தைப் படுத்துதல், தொடர்ந்து தெருக்கொன்றாக முளைத்து நிற்கும் அழகு நிலையங்களின் வரவு இவற்றால்,   மாணவர்களில் தொடங்கி வயதானவர்கள்வரை மெனிக்யூர்-பெடிக்யூர் செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர் என்றே  சொல்லலாம்.அழகு நிலையங்களில் நம் முகத்திற்கு செய்யப்படும் ஃபேசியலில் எத்தனை விதமான வகைகள் உள்ளதோ, அதேபோல  கைகளுக்கு மெனிக்யூர் செய்வதற்கு நாம் செலவழிக்கும் பணத்தைப் பொறுத்து நிறைய வகைகள் உள்ளது. சுருக்கமாக மெனிலக்யூரில்  நான்கு விதமான பிரிவுகளைச் சொல்லலாம்.

*    க்ளீன் அப்(clean up)

*    பேசிக் (basic)

*    டீலக்ஸ் (deluxe pack)

*    ஸ்பா(Spa)

*    ஸ்டார் (star pack)

க்ளீன் அப்

வெதுவெதுப்பான நீரில் நமது இரண்டு கைகளையும் நனைத்து, அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்கி நகங்களை வடிவமைப்பது.

பேசிக்

வெதுவெதுப்பான நீரில் அழுக்கை நீக்குவதற்கென உள்ள உப்பை இட்டு, அவற்றில் கைகளை சற்றே ஊறவைத்து சுத்தம் செய்யப்படும்.  இதற்கென க்யூட்டிகல் க்ரீம் (cuticle cream) உள்ளது. அதை பயன்படுத்தும்போது அழுக்கு வெளியில் வரத் துவங்கும். நகங்களைச் சுற்றி  வளர்ந்திருக்கும் தேவையற்ற இறந்த தோல்கள் நீக்கப்பட்டு, நகங்கள் புஷ் செய்யப்படும்போது விரல் நகங்கள் வெளியில் நீண்டு பெரிதாகத்  தெரியும். பிறகு வேண்டிய வடிவில் சீர் செய்யலாம்.

டீலக்ஸ் மற்றும் ஸ்டார்

பெரும்பாலும் இரண்டும் ஒரே மாதிரிதான். இதில் ப்யூட்டி புராடக்ட்கள் மட்டுமே வேறுபடும். பேசிக் மெனிக்யூர் செய்த பிறகு கைகளை  ஸ்க்ரப் செய்தபின் பேக்(pack) அப்ளை செய்து அதன் பிறகு மசாஜ் கொடுக்கப்படும்.

ஸ்பா

இதில் மசாஜ் கூடுதலாகக் கிடைப்பதுடன், நெயில் ஆர்ட் கூடுதலாக செய்யப்படும். நெயில் ஆர்ட்டுக்கென மெஷின்கள் வந்துள்ளன.  ரெடிமேட் ஸ்டிக்கர்களும் கிடைக்கிறது.

அழகு நிலையங்களில் செய்யப்படும் மெனிக்யூர்…

* மெனிக்யூர் செய்வதற்கென ரெடிமேட் பேக்குகள் தயார் நிலையில் விற்பனையில் இருக்கின்றன. முதலில் விரும்பிய பேக்கினை  தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

* ஒரு அகன்ற வட்ட வடிவ டப்பில் வெதுவெதுப்பான நீரினை நிரப்பி அதில் பேக்கில் இணைக்கப்பட்டுள்ள மெனிக்யூர் சால்டை  தண்ணீரில் போட வேண்டும்.

* பேக்கில் உள்ள சாஷேவில் இடம்பெற்றிருக்கும் அமோனியா கலந்த ஷாம்புவை தண்ணிரில் இணைக்க வேண்டும்.

* விரல் நகங்களைச் சுற்றி க்யூட்டிக்கில்(cuticle) சொல்யூஷனை அப்ளை செய்தல் வேண்டும். விரல் நகங்களில் நெயில் பாலிஸ்  இடம்பெற்றிருந்தால் அதை நீக்கிய பிறகே க்யூட்டிக்கல் க்ரீமை இட வேண்டும். நெயில் பாலிஸை நீக்காமல் செய்தால் க்ரீமை வேலை  செய்ய விடாமல் தடைப்படுத்தும்.

* இப்போது கைகள் இரண்டையும் டப்பில் உள்ள நீரில் மூழ்க வைத்தல் வேண்டும்.

* நிமிட  இடைவெளிக்குப்பின்  ஒரு கையை மட்டும் வெளியில் எடுத்து நகங்களைப் புஷ்ஷர் கொண்டு புஷ் செய்யும்போது நகத்தைச்  சுற்றியுள்ள இறந்த தோல்கள் தானாக நீங்கும். அப்போது விரல் நகங்கள் பார்க்க நீளமாக அழகாகத் தெரியும். ஒரு கையினை முடித்த  பிறகு மற்றோர் கையில் செய்தல் வேண்டும்.

* தண்ணீரால் கைகளை நன்றாகச் சுத்தம் செய்த பிறகு ஸ்க்ரப்பினை கைகளில் தடவி அழுக்கை நீக்குதல் வேண்டும்.

* அடுத்தது பேக்கை(pack) அப்ளை செய்தல் வேண்டும்.

* பேக் காய்ந்த நிலையில் அதை நீக்கிவிட்டு மசாஜ் க்ரீமினை தடவி நன்றாக மசாஜ் கொடுத்தல் வேண்டும்.

அடுத்த இதழில்…

நகங்கள் உடையாமல் இருப்பதற்கு

என்ன செய்ய வேண்டும்…?

வீட்டில் மெனிக் க்யூர் செய்வது எப்படி?

எழுத்து வடிவம்: மகேஸ்வரி

வாசகர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு இதழ் முகவரிக்கு ‘ப்யூட்டி பாக்ஸ்’ என்னும் பெயரில் கேள்விகளை அனுப்பினால் அழகுக்கலை  நிபுணர் ஹேமலதா தங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்.

Related Stories: