திரு தாய் அவளே!

நன்றி குங்குமம் தோழி

மூன்றாம் பாலினத்தவர் மேல் முன்பு தவறான பார்வை படிந்திருந்தது. தற்போது அவர்களுக்கு என ஒரு அங்கீகாரம் பெற்று வருகிறார்கள். சமூகத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டதுபோல இவர்களின் வாழ்விலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் நிலவி வந்த தவறான கண்ணோட்டத்தை உடைத்தெறிந்து எங்களாலும் இந்த சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்று இவர்கள் சமீப காலமாக நிரூபித்து வருகிறார்கள். செவிலியர், அழகுக் கலை நிபுணர், காவல்துறை ஆய்வாளர் என தடைகளை தாண்டி தங்களுக்கு என தனி அடையாளத்தை பதித்துவர ஆரம்பித்துள்ளனர்.

அந்த வெற்றியின் அடுத்தபடி ‘திருநங்கையர் குறும்பட விழா’. இந்த விழாவை திருநங்கைகள் ஆவணக் காப்பகம் நடத்தியது. இதன் நிறுவனர் பிரியா பாபு. பிரியா அடிப்படையில் ஒரு திருநங்கை. வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்தவர். இப்போது தனக்கான ஒரு நிலையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ‘‘திருநங்கைகளில் பலர் ஓவியராக, சமையல் கலைஞராக, அழகுக்கலை நிபுணராக, ஊடக துறையில் வேலை செய்பவர்களாக உள்ளனர். சமூகத்துடன் ஒன்றி வாழ்ந்தாலும் எங்களுக்கான ஒரு பாதுகாப்பு அமைப்பு வேண்டும் என நினைச்சேன். ‘திருநங்கை ஆவண மையம்’ என்ற அமைப்பை துவங்கினேன்.

இதில் எங்களின் ஆரம்ப காலம் முதல் இன்றையகாலம் வரை உள்ள அனைத்து செய்திகள், நிகழ்வுகள், சட்ட ரீதியான விவரங்களை பதிவு செய்து வருகிறோம். இதன் அடுத்த கட்டம்தான் திருநங்கைகள் குறும்பட விழா. என்னதான் புத்தகங்கள் மற்றும் நாடகங்கள் மூலம் எங்களின் உணர்வுகளை பதிவு செய்தாலும், மக்களை அடைய வேறு வழியும் உண்டு என்பதை புரிந்துகொண்டோம். அந்த பாதை தான் குறும்படம். திருநங்கைகளின் வாழ் வியல் பற்றி சமூகம் இதுவரை சந்திக்காத மறுபக்கங்களை மையப்படுத்தி எடுக்கப் பட்ட குறும்படங்களை திரையிட்டோம்.

39 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. பொதுவாக திரைப்படங்களில் திருநங்கைகளை கேலியாகத்தான் சித்தரித்துள்ளனர். அந்த முகமூடியை குறும்படங்கள் மூலம் அகற்ற முடியும் என்று நினைத்தேன். அப்படி உருவானதுதான் திருநங்கைகளுக்கான குறும்பட விழா. எங்களுடைய ஓர் ஆண்டு கனவு பல்வேறு போராட்டங்களையும் கடந்து இந்த ஆண்டு மதுரையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து கல்லூரிகள், முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைததளங்களிலும், குறும்படம் இயக்குபவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டோம்.

திருநங்கைகள் தொடர்பான குறும்படங்களை மட்டுமே தேர்வு செய்தோம். திருநங்கைகளுக்கு எதிரான கௌரவக் கொலை, பாலியல் வன்முறை, திருநங்கைகளுடைய கனவு, வெற்றி போன்றவற்றை இந்தப் படங்கள் பேசி யிருந்தது. இதிலிருந்து சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர் என மொத்தம் 7 விருதுகள் வழங்கப்பட்டன. திருநங்கைகளுக்குள் சிறந்த படைப்பாளிகள் உள்ளனர் என்பதை  இந்த “திருநங்கையர் குறும்பட விழா” அமைத்துக் கொடுத்திருக்கிறது. இதுதான் எங்களின் வெற்றி’’ என்றார் பிரியா பாபு.

விழாவில் வெளியிட்ட 39 படங்களில் மூன்று படங்களில் நடித்து, சிறந்த நடிகை என்ற விருதினை பெற்றுள்ளார் ஜீவா சுப்ரமணியம். “திரு தாய் அவளே” என்கிற குறும் படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைச்சது. பிரவீன் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் திருநங்கையான நான் வாடகைத்தாயாக நடித்து இருக்கேன். என்னதான் வாடகைத்தாயாக இருந்தாலும், ஒரு குழந்தையை பெற்று எடுக்கும் போது தாயின் உணர்வு வெளிப்படும். வாடகைத் தாயாக இருந்தும் நான் பெற்றெடுத்த குழந்தையை பார்க்க முடியாத நிலையில் ஏற்படும் வலியை உணர்த்தும் கதாப்பாத்திரம். அதற்கு எனக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைச்சது.

 

திருநங்கைகள் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கான கதாப்பாத்திரத்தில் முக்கியத்துவம் உள்ளதா என்பது கேள்விக்குறிதான். தங்கையாக, அம்மாவாக, அக்காவாக, தோழியாக எங்களை இந்த விழாவில் பார்க்க முடிந்தது’’ என்ற ஜீவா தான் கடந்து வந்த பாதையை விவரித்தார்.“பிறந்தது சிவகாசி. 1ம் வகுப்பு படிக்கும் போதே எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தேன். திருநங்கைகள் எதிர் கொள்ளும் கேலி கிண்டல்களை நானும் சந்தித்தேன். என் குடும்பம் ஆதரவா இருந்தாலும் சமூகம் என்னை புறக் கணித்தது. இதனால் 13 வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தேன்.

சென்னை கோயம்பேட்டில்  உள்ள டீக்கடை, பாத்திரக்கடைகளில் வேலை பார்த்தேன். கோயம்பேடு மார்க்கெட்டில் விடியற்காலையில் மூட்டையை தூக்கிவிட்டு விட்டு மார்க்கெட்டில் படுத்துவிடுவேன். ஒரு நாள் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடையின் நிர்வாகி ரோச் என்பவரின் அறிமுகம் கிடைச்சது. அவர் பணிபுரியும் அதே கடையில் எனக்கு ஹவுஸ் கீப்பிங் வேலை வாங்கி கொடுத்தார். எனக்கு நடனம் பிடிக்கும் என்பதால் நடனப் பள்ளியில் சேர்ந்து கற்றுக்கொண்டேன். கோயில் திருவிழாக்கள், திருமணங்களில் நடனமாடும் வாய்ப்பு கிடைச்சது.

இதற்கிடையில் ‘மெட்டிஒலி’ உமா என்பவரிடம் துணை மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக வேலைக்கு சேர்ந்தேன். பல நடிகைகளுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்டா பணிபுரிந்து இருக்கேன். அவர்கள் நடிப்பதை பார்க்கும் போது எனக்கும் நடிக்கணும்னு ஆசை ஏற்பட்டது. என் விருப்பத்தை தெரிவித்த போது, ‘உன்னை ஆணா காட்டவா... இல்லை பெண்ணா காட்டவா’ன்னு கிண்டல் செய்தாங்க. அதனால் குறும்படங்களில் நடிக்க தொடங்கினேன். ‘தாரைத்தப்பட்டை’ படத்தில் முதலில் ஸ்ரேயா நடிப்பதாக இருந்தது. அவருக்கு மேக்கப் ஆர்ட் டிஸ்ட்டாக போன போது இயக்குநர் பாலா சார் என்னை சந்தித்து ‘உங்களுக்கு ஒரு கதாப்பாத்திரம் இருக்கு... நடிக்கிறீங்களா’ன்னு கேட்டார்.

சில காரணத்தால் நாயகி மாற்றப்பட்டார். எனக்கு வாய்ப்பு இருக்காதுன்னு நினைச்சேன். திடீரென ஒரு நாள் பாலா சார் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. வாய்ப்பும் கொடுத்தார். பிறகு ‘தர்மதுரை’ படத்தில் நடிச்சேன். அந்த படம் எனக்கு ஒரு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது மட்டுமில்லாமல் என் குடும்பமும் எனக்கு திரும்ப கிடைச்சது. இப்போது ‘அயிரா’ படத்தில் நயன்தாராவின் தோழியா நடித்திருக்கிறேன். சத்யராஜ் சாருடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். ‘தாதா 87’ படத்திலும் நடித்திருக்கேன். இந்தியாவில் முதல் முறையா திருநங்கைகளின் பிரச்னைகள், வலிகள், மகிழ்ச்சியை பேசுவதற்கான வாய்ப்பை “திருநங்கையர் குறும்பட விழா” கொடுத்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த முயற்சி தொடரட்டும்’’ என்றார் ஜீவா சுப்ரமணியம்.

- ஜெ.சதீஷ்

Related Stories: