செல்லுலாயிட் பெண்கள்

நன்றி குங்குமம் தோழி

ஆச்சியாய் ஆட்சி செலுத்திய நகைச்சுவை அரசி மனோரமா

நகைச்சுவைப் பாத்திரம் என்பது வாழ்வின் சகல அம்சங்களையும் அதற்குள் புகுந்து சுய எள்ளல் செய்வதாகும். இதற்கு உடல், குரல்  இரண்டின் தன்மையையும் மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நாயகி பிம்பத்துக்கான உடல் மொழியைக் கூட்டியோ குறைத்தோ அதீதமாக்க  வேண்டும்; அதே போல் குரலிலும் அதீத குழைவையோ, கடுமையையோ கொண்டிருக்க வேண்டும். கொஞ்சம் ஆண் தன்மையையும் உடல்  மற்றும் குரலில் ஏற்றிக் கொண்டிருக்கவும் வேண்டும். ஆச்சி மனோரமாவின் சித்திரத்தை மனத்திரையில் எப்போது தீட்டினாலும்  இவ்விரண்டும் அதில் சமமாகக் கலந்தே இருக்கும். 1,300 படங்களில் அசர வைத்த நகைச்சுவைப் பாத்திரங்கள், குணச்சித்திரம், ஒரு சில  வில்லத்தனம் மிக்க வேடங்கள் என ஆச்சி மனோரமாவின் உடல் மொழியும் குரலும் ஒருவித எள்ளலையும் எகத்தாளத்தையும் தமிழ்த்  திரைப்படங்களில் ஆழமாகப் பதியச் செய்துள்ளன. ஆனால், அவரது ஆரம்பகால அழகும் ஒயிலும் கம்பீரமும் ஒரு நாயகிக்கே  உரித்தானவை.

‘நாயகியாக மட்டுமே’ என்ற வீம்பற்றவர்

ஒரு நடிகை நாயகியாகப் பாத்திரமேற்க விரும்பும்போது அவரது உடலைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. உடல் லயம்,  குரல் இனிமை அனைத்தும் பராமரிக்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக அவர் ஏராள முயற்சி மேற்கொண்டால்தான் நாயகி பிம்பத்தைத்  தொடர்ந்து காப்பாற்ற முடியும். அதை மீறிய நாயகிகள் தங்கள் தனித் திறனால்  மீண்டவர்கள். இது வெறும் அழகு, கவர்ச்சி தொடர்பான  சங்கதி மட்டுமல்ல. ஒரு நாயகி எந்த வயதுக்கேற்ற பாத்திரத்தை ஏற்றாலும் எந்த வர்க்கப் பாத்திரத்தை ஏற்றாலும் இவை அனைத்தையும்  அவர் பராமரித்துத் தீர வேண்டியிருக்கிறது.

‘கொஞ்சும் குமரி’ யில் நாயகியாக அப்பாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்த மனோரமா இந்தக் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தைக்காக  எவ்வளவு பயிற்சிகளைத் தன்னளவில் மேற்கொண்டிருப்பார் என்பதை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. அந்தப் படம்  வேண்டுமானால் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். ஆனால், அவர் நடிப்பில் குறை காண இயலாது. நாயகியாக மட்டுமே தொடர்வேன்  என்று அவரும் வீம்பு பிடிக்கவில்லை. அதனாலேயே அவரால், தன் மறைவுக்குச் சில ஆண்டு காலம் வரை திரையில் நீடித்திருக்க  முடிந்தது.

ஆண் தன்மை, பெண் தன்மை என்ற இரு எதிரெதிர் நிலைகளுக்குள் மாறி, மாறி நடிக்கும் கலை அது. அதனால்தான் ஆண், பெண் என இரு  தன்மைகளும் ஒன்றிணையும் புள்ளியான திருநங்கை பாத்திரத்தை ஏற்க வேண்டுமென்ற தீராத ஆவலோடு இறுதிவரை அவர்  காத்திருந்தார். அந்த வேடத்தை ஏற்று நடிப்பதற்கான சந்தர்ப்பம் மட்டும் அவருக்கு வாய்க்கவே இல்லை என்பது சோகம்.

கலைகளின் நிலம் தந்த கோபி சாந்தா

கலைகளின் இருப்பிடமான தஞ்சை மாவட்டம் ராஜ மன்னார்குடியில் 1937, மே 26 ல் காசி கிளாக்குடையார் - இராமாமிர்தம் தம்பதியருக்கு  மகளாகப் பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் கோபி சாந்தா. தந்தையாருக்கு சாலை ஒப்பந்ததாரராகப் பணி. ஓரளவு வசதியான குடும்பம்,  ஆனால் விதி யாரை விட்டது. தந்தையார் தன் மைத்துனியை இரண்டாம் தாரமாக்கிக் கொண்டார். சட்டப்பூர்வமாக மட்டுமல்ல, தார்மீக  ரீதியிலும் ஒரு பெண்ணால் இதையெல்லாம் அப்போது எதிர்க்க முடியாது. பல தார மணம் சமூகத்தில் அந்த அளவு புரையோடிப்  போயிருந்தது. தாயார் இராமாமிர்தம் ரோஷக்காரர், தன் வாழ்க்கையில் குறுக்கிட்டவர் தங்கையே என்றாலும் தன் சுயமரியாதையை இழக்க  விரும்பாமல் தனித்து வாழ முடிவு செய்து மகள் கோபி சாந்தாவுடன் செட்டி நாட்டுப் பள்ளத்தூருக்குப் புலம் பெயர்ந்தார்.

கைவசம் இருந்த திறமையான சமையல் கலை கை கொடுத்தது. பலகாரங்கள் செய்து விற்று மகளைக் காப்பாற்றினார். தாயுடன் தனித்து  வாழ வேண்டிய குடும்பச்சூழல், சந்தர்ப்பம் போன்றவற்றுக்கு ஆட்பட்டு, பள்ளத்தூரில் ஆறாம் வகுப்பு வரையே பள்ளிக் கல்வி. நன்றாகப்  பாடவும் ஆடவும் சுயமாகக் கற்றுக் கொண்டதுடன், நடிப்பின் மீதும் தீராத ஆர்வம் பிறந்தது. பள்ளிப் பருவத்திலேயே கல்வியைத் துறந்து  பன்னிரண்டு வயதில் நாடக மேடை ஏறும் வாய்ப்பைப் பெற்றார் கோபி சாந்தா. ஆனால் ‘பள்ளத்தூர் பாப்பா’ என்றே பலராலும்  அறியப்பட்டவர். ஏழ்மை நிலையில் தாயின் அரவணைப்பில் மிகுந்த பொறுப்புணர்வோடு வளர்க்கப்பட்டார்.

பதினைந்து வயதில் ஆயிரம் மேடை கண்ட நடிகை

வைரம் நாடக சபா நடிப்பில் பட்டை தீட்டி  நல் வாய்ப்பை  வழங்கியது. அக்குழுவில் இருந்த நாடக இயக்குநர் திருவேங்கடம் மற்றும்  ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் இருவரும் கோபி சாந்தாவை ‘மனோரமா’ ஆக்கினர். இறுதிவரை அவர்கள் வைத்த பெயரே  நிலைத்தது. அமெச்சூர் நாடக நடிகையாகவே 15 வயதுக்குள் 1000 நாடகங்கள் நடித்து முடித்திருந்தார் மனோரமா. இவ்வளவு  மேடையேற்றத்தின் மூலம் சிறந்த நடிகை என்ற பெயரையும் அந்தச் சிறு வயதிலேயே சுற்று வட்டாரப் பகுதிகளில் பெற்றிருந்தார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த நேரத்தில் எஸ்.எஸ்.ஆர் தன் முதல் படமான ‘பராசக்தி’யில் நடித்துக் கொண்டிருந்தார்.

எஸ்.எஸ்.ஆர், பிரமிளா (அவரும் அப்போது  நாடக நடிகையே. பின்னாளில் அவரே திரைப்பட நடிகை தேவிகா) இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், நாடக  நடிகை மனோரமாவையும் அப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்ற முடிவில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்  பி.ஏ.குமார் என்பவர். இந்தச் சம்பவம் நடந்தது புதுக்கோட்டையில். ஆனால், துரதிருஷ்டவசமாக அந்தப் படத்தின் ஃபைனான்சியர் வீடு  தீப்பற்றி எரிந்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நடத்தப்படாமலே முடிந்து போனது. மனோரமாவுக்கு சினிமாவில் நடிக்கும்  அதிர்ஷ்டம் இப்படி பாதியிலேயே பறி போனது.

மணிமகுடம் பெற்ற மகத்தான வெற்றி

இந்தச் சிறு பெண் மிகவும் திறமையாக நடிக்கிறார் என்பதையறிந்து தன்னுடைய எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில் இணைத்துக் கொண்டார்.  அவரது புகழ் பெற்ற நாடகங்களான ‘மணி மகுடம்’, ‘தென்பாண்டி வீரன்’, ‘புது வெள்ளம்’ உட்பட ஏராளமான நாடகங்களில்  எஸ்.எஸ்.ஆருடன் இணைந்து நடித்தார் மனோரமா. திராவிட இயக்கக் கருத்துகளை முன் நிறுத்திய அந்த நாடகங்கள் அக்காலகட்டத்தில்  பெரும் பிரச்சாரமாகவும் சக்கைப் போடு போட்டன. குறிப்பாக  ‘மணிமகுடம்’  நாடகம் கலைஞர் கருணாநிதியின் அற்புதமான வசனமும்  எஸ்.எஸ்.ஆர்., – மனோரமாவின் மிகச் சிறப்பான நடிப்பிலும் தமிழகத்தையே புரட்டிப் போட்டது. தி.மு.கழக மாநாடுகளில் நகரங்கள்,  கிராமங்கள் என்று வித்தியாசமில்லாமல் எல்லா இடங்களிலும் நடத்தப்பட்ட நாடகம் இது. தி.மு.க.வின் வளர்ச்சிக்கு இந்த நாடகமும்  துணை புரிந்தது என்றால் மிகையில்லை. இந்த நாடகத்தில் நடிப்பதற்காகவே முதன்முதலாகச் சென்னைக்கு  ரயிலேறியதாகவும்   மனோரமா குறிப்பிட்டிருக்கிறார். அவரது பட்டணப் பிரவேசம் அவருக்கு நல்வாய்ப்பையே வழங்கியது.

நாடக நிலத்திலிருந்து திரையுலகம் நோக்கி…

கவிஞர் கன்ணதாசன் தன் சொந்தத் தயாரிப்பான ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாகவே, ஒரு சிங்களப்  படத்தில் மனோரமா தலைகாட்டியிருக்கிறார். ஆம், ஒரு சிறு வேடத்தில் மஸ்தான் என்பவர் இயக்கிய படத்தில் கதாநாயகிக்குத்  தோழியாக வந்து போயிருக்கிறார். பின்னாளில் திரையில் நடிக்கவிருக்கும் வேடங்களுக்கான முன்னோட்டம் இது. திராவிட இயக்க  நாடகங்களில் பிரதான நாயகியாக வேடமேற்று அண்ணாதுரை, கருணாநிதி போன்ற அரசியல் பிரபலங்களுடனும் நடித்துக்  கொண்டிருந்தவரை கவிஞர் கண்ணதாசன் தன் ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் நகைச்சுவை நடிகையாக நடிப்பதற்குத் தேர்வு செய்து  சினிமாவுக்கு அழைத்து வந்தார்.

அவரே அதற்கான காரணத்தையும் தீர்க்கதரிசியாக இருந்து எடுத்துச் சொன்னவர். மனோரமாவின்  திரையுலகப் பிரவேசத்துக்கான பிள்ளையார் சுழி, கவிஞரால்  அழுத்தமாகவே  போடப்பட்டது. அப்படத்தில் வேலைக்காரி வேடம்,  வேலைக்காரராக உடன் நடித்தவர் நகைச்சுவை நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன். அந்தத் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு பெற்றவர்கள்  அந்தப் பாத்திரத்துக்கு மனோரமா எவ்வளவு பொருத்தமாக இருந்தார் என்பதை உணர்ந்திருக்க இயலும். அதன் பின் திரையுலகில் நிற்கவே  நேரமில்லாத ஓட்டம்தான். அதிலும் பல படங்களில் ஏற்றவை வேலைக்காரப் பாத்திரங்களே. அதிலேயே அவர் அவ்வளவு  வித்தியாசங்களைக் காண்பித்திருக்கிறார்.

என்றும் வற்றாத நகைச்சுவை ஊற்று

தமிழில் நகைச்சுவை நடிகர்களுக்கு எப்போதும் பஞ்சமேயில்லை. வற்றாத வளம் கொண்ட நகைச்சுவையாளர்கள் நம்மிடையே மிக அதிகம்.  தான் நடிக்க வந்த காலத்தில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் தொடங்கி, தனக்குப் பின் நடிக்க வந்த அத்துணை பேருடனும் ஆச்சி  நடித்திருக்கிறார். பலரும் அதில் காணாமல் போன பிறகும் அவர் மட்டும் நிலைத்து நின்றிருக்கிறார்.   டி.எஸ். பாலையா, எம்.ஆர். ராதா,  வி.கே. ராமசாமி, கே.ஏ.தங்கவேலு, சந்திர பாபு, ‘அய்யா தெரியாதய்யா’ ராமாராவ், எம்.ஆர்.ஆர்.வாசு, ஏ.வீரப்பன், சோ, நீலு, டைப்பிஸ்ட்  கோபு, ஒருவிரல் கிருஷ்ணா ராவ், காத்தாடி ராமமூர்த்தி, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், எஸ்.எஸ்.சந்திரன்,  வடிவேலு, விவேக் என அத்தனை நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்தாலும், மறக்க முடியாத சாதனை ஜோடியென்றால் அது  நாகேஷ்-மனோரமா ஜோடியே.

திரையில் உற்ற ஜோடி நாகேஷ் என்றாலும் இருவரிடையிலும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு இருவரையும் இணைந்து நடிக்க முடியாமல்  தடுத்தது. நாகேஷ் வனவாசம் அனுபவித்தாலும், ஆச்சியின் ராஜ்ஜியம் மட்டும் தொய்வில்லாமல் வேறு வேறு ஜோடிகளுடன், வெவ்வேறு  தளங்களில் தொடர்ந்தது. 60,–70 காலகட்டங்களில் மனோரமா, நாகேஷ் இருவரும் இணைந்து ஏற்று நடிக்காத வேடமில்லை.  கணக்கிலடங்காத படங்கள். நம்மால் மறக்க முடியாத பல பாத்திரங்களையும் அவர்கள் இருவரும் ஏற்றிருக்கிறார்கள்.

‘சர்வர் சுந்தரம்’  படத்தில் அசல் திரைப்பட நடிகையாக, படப்பிடிப்பில் ‘ஆப்பிள் ஜூஸ்’ கேட்டு செய்யும் அலம்பல், புதுமுக நடிகராக வரும் நாகேஷைப்  பார்த்து, ‘இதோ பாருப்பா, பெரிய ஹீரோயின் கூட நடிக்கறோம்னு பயப்படாதே’ என அலட்டிக் கொள்வது, கொஞ்சும் குரலில் பேசி,  ‘நவரசத்தை நாராசமாக்கி’ தமிழ் வசனங்களைக் குதறி எடுப்பது என்று அப்போதிருந்த ஒரு கதாநாயகியைப் பிரதி எடுத்தது போல நடித்துக்  கலகலப்பூட்டி என்றும் நினைவில் நிற்கிறார்.

இதே படத்தில் சினிமாவுக்குள் ஒரு நாடகமாக இடம் பெறும் குசேலன் கதை, 26 குழந்தைகளைப் பெற்ற குசேலனின் மனைவி சுசீலையாக  நாகேஷுடன் நடிக்கும் குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சார நாடகம். இது பரவலான கவனம் பெறாதது ஆச்சரியமே. ‘அன்பே வா’, ‘கலாட்டா  கல்யாணம்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘அனுபவி ராஜா அனுபவி’, ‘சந்திரோதயம்’ என்று  எத்தனை படங்களில் இருவரும் ரசிகர்களை மெய் மறக்க  வைத்திருக்கிறார்கள். வயதான காலத்தில் இருவரும் இறுதியாக இணைந்து நடித்த படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ .

ஜில் ஜில் ரமாமணியின் முன்னோடி

‘குலமகள் ராதை’ படத்தில் வேலைக்காரி வேடம், மதுரையிலிருந்து சென்னைக்கு வரும் கிராமத்துப் பெண், சென்னை காய்கறி  மார்க்கெட்டில் இழுவையான மதுரைத் தமிழில் பேரம் பேசி, தான் அசலூர்க்காரி என்பதை ஊருக்கெல்லாம் தமுக்கடிக்கும் அப்பாவி. இந்தப்  படத்தில் அவர் பேசிய வட்டார வழக்கு வசன பாணி, பின்னாளில் ‘தில்லானா மோகனாம்பாள்’ செட்டி நாட்டு ஜில் ஜில் ரமாமணிக்கு  முன்னோடி என்றும்  சொல்லலாம். சினிமா வரலாற்றில் ஜில்ஜில் ரமாமணியும் ரோஸ்ஸா ராணியும் இன்றும் என்றும் உயிர்ப்புடன் நீடித்து  நிலைத்திருக்கிறார்கள், உயிர்ப்புடன் உலா வருவார்கள்.

இந்த இரண்டு படங்களின் கதாபாத்திரங்களையும் உருவாக்கியவர் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். அதை உயிரோட்டத்துடன் உலவ விட்டவர்  ஆச்சி மனோரமா.  மனோரமா பல வேடங்களை ஏற்று நடித்திருந்தபோதும், இன்றுவரை மறக்க முடியாத கதாபாத்திரம் என்றால் அது ஜில்  ஜில் ரமாமணி.ஒரு பரத நாட்டியக் கலைஞராக அறிமுகமாகும் அந்தக் கதாபாத்திரம் இறுதிவரை பரத நாட்டியம் ஆடவேயில்லை. வில்லன்  நாகலிங்கத்திடமிருந்து (ஈ.ஆர். சகாதேவன்) தப்பித்து வாழ்க்கையைத் தொய்வின்றி வாழ்வதற்காக, நடிப்புத்தொழிலை ஏற்கிறாள். ஒரு  நாடகக் கம்பெனியைத் தொடங்கி நடத்தக்கூடிய, அதனூடே பல கலைஞர்களுக்கும் வாழ்வளிக்கக்கூடிய ஒரு ஆளுமை மிக்க பெண்ணாக,  ரோஜா ராணி… அல்ல… அல்ல, ஆச்சியின் வசன மொழியில் அந்த ‘ரோஸ்ஸா ராணி’ பாத்திரம் செதுக்கப்பட்டிருக்கும்.

கள்ளபார்ட்டாக மாறிய ஆச்சி

இந்தப் படத்தின் மற்றோர் ஆச்சரியம் அவர் நாடகத்துக்குள் ஆண் வேடமேற்றது. அதிலும் கள்ளபார்ட். ‘தில்லான் டோமரி டப்பாங்குத்து  ஆட்டம் ஆடுவேன், ஷோக்கா பாட்டுப் பாடுவே’ பாடலின் ஆரம்ப வரிகள் அர்த்தமில்லாதவை என்றாலும் தாளம் போட்டு ரசித்துச் சிரிக்க  வைக்கும் ரகம். அந்த கள்ளபார்ட் வேடத்தையும் நகைச்சுவை பொருந்திய பாடல் ஆடல் காட்சியாகவே மாற்றியது இயக்குநரின் திறமை.   பொதுவாக அக்கால நாடகங்களில் ராஜபார்ட் – கதாநாயகன், கள்ளபார்ட் – திருடன், ஸ்திரீ பார்ட் கதாநாயகி, இப்படித்தான் வேடங்கள்  பகுக்கப்பட்டிருந்தன. அத்தனையையும் ஆண்களே ஏற்று நடித்துக் கொண்டிருந்த நிலையில், பின்னர் மேடையேறி நடிக்க வந்த பெண்களில்  கே.பி. சுந்தராம்பாள் மற்றும் சில பிரபலமான நடிகைகள் மட்டும் ஆண் வேடம், ராஜபார்ட் வேடமேற்று நடித்த ஸ்பெஷல் நாடகங்கள்  அனைத்தும் விதிவிலக்கு. சரோஜா என்று ஒரு நடிகையும் நாடகங்களில் அப்போது கள்ளபார்ட் வேடம் ஏற்றிருக்கிறார்.

நாடகங்களில் கள்ளபார்ட் வேடக்காரர்கள் பலர் இருந்தபோதும், அவர்களில் பரவலாக அறியப்பட்டவர் கள்ளபார்ட் நடராஜன். தமிழ்  சினிமாவிலும் அவர் வெகு பிரபலம். கல்கியின் ‘கள்வனின் காதலி’ படத்தில் சிவாஜி கணேசன் ஒரு நாடகக் காட்சியில் கள்ளபார்ட்  வேடம் ஏற்றிருக்கிறார். சிவாஜி கள்ள பார்ட்டாக நடிப்பதற்கும், ‘நவராத்திரி’ படத்தில் இடம்பெற்ற ‘சத்தியவான் சாவித்திரி’ கூத்து பாணி  நாடகத்திற்கும் உதவியாக இருந்தவர் ‘கள்ளபார்ட்’ நடராஜன். ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் நெடுக இல்லாவிட்டாலும், ரமாமணி,  ரோஸ்ஸா ராணி தோன்றும் காட்சிகள் அனைத்தும் கதையின் போக்கையே மாற்றக்கூடிய திருப்புமுனைக் காட்சிகளாக  வடிவமைக்கப்பட்டிருக்கும். மனோரமாவின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாதது இந்த ’கள்ளபார்ட்’ வேடம்.

மறக்க முடியாத பாத்திரங்கள் எத்தனை எத்தனை?!

‘பொம்மலாட்டம்’ ஜாம்பஜார் ஜக்கு சோ, சைதாப்பேட்டை கொக்கூ… ஆச்சி இருவரையும் மறக்க முடியுமா? ‘வா வாத்யாரே வூட்டாண்டே, நீ  வராங்காட்டி நான் வுட மாட்டேன், ஜாம்பஜார் ஜக்கு; நான் சைதாப்பேட்ட கொக்கு’ காலம் தாண்டியும் ஒலிக்கும் குரல் அல்லவா !‘சூரியகாந்தி’ படத்தில் சி.ஐ.டி. சகுந்தலாவுடன் ‘தெரியாதோ நோக்கு தெரியாதோ’ என்று மடிசார் மாமியாகப் போடும் ஆட்டம், பாடலுக்குள்  ‘மன மோகன…. ஆங்கே….. வாடுதே கனவிலும் என் மனம்..’ என்று ‘சகுந்தலை’யின் துஷ்யந்தனான ஜி.என்.பாலசுப்பிரமணியன்  பாடலையும் கலந்து கட்டிப் பாடி கேலி செய்வது, காலனியில் சக குடித்தனக்காரர்களின் தலையை உருட்டும் ஊர்வம்புப் பேச்சு… தன்  நடிப்பில் எதைத்தான் அவர் மிச்சம் வைத்தார்?

‘சரஸ்வதி சபதம்’ படத்தில் அவர் தத்தித் தத்திப் பேசும் தமிழும் ஓர் அழகுதான். ‘காசேதான் கடவுளடா’ படத்தில் பணத்தைப் பிசாசு போல  அடைகாக்கும் பணக்காரப் பெண்ணாக, அப்பணத்தைச் சுற்றி வரும் அனைவரையும் தன் அதிகாரத்தால் கைக்குள் வைத்து அடக்கியாளும்  கம்பீரமான ஒரு பெண்ணாகவும் வந்து அசத்துவார். மதுரை, கொங்குத்தமிழ், அய்யராத்து பாஷை, சென்னைத் தமிழ் என தமிழகத்தின்  அத்தனை வட்டார வழக்குகளும் அவருக்குத் தண்ணீர் பட்ட பாடு. ‘நடிகன்’ படத்தின் முதிர்கன்னியை நினைவிலிருந்து நீக்க முடியுமா?  அது நாள் வரை திருமணம் செய்து கொள்ளாமல் சந்நியாசி போல் வாழ்ந்தவர், தன் அண்ணன் மகளையும் மிகுந்த கண்டிப்புடன்  வளர்த்தவர், முதியவர் வேடமிட்ட இளைஞர் சத்யராஜ் மீது காதல் கொண்டு, தன் தோற்றத்தையே மாற்றிக்கொண்டு அவரைப்  பின்தொடர்வதும் துரத்துவதும் நகைச்சுவையின் உச்சம்.

‘ஞானப்பறவை’ யில் நடிகர் திலகத்தின் ஜோடிப் பறவையாகவும் ஜொலித்தார். அவர்களிருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இது  மட்டுமே. சிலம்பம் எடுத்துச் சுழற்றும் ’பாட்டி சொல்லைத் தட்டாதே’ பாட்டி, பிரிந்து கிடக்கும் உறவுகளை இணைத்து வைக்கும் பாலமாக  ‘கம்முன்னா கம்மு.. கம்முனட்டி கோ’ ‘கம்முன்னு கெட’ என்று வீட்டுக்குள் நாடகம் போடும் ’சம்சாரம் அது மின்சாரம்’ வேலைக்காரி  கண்ணம்மா, தாயும் மகளும் பணத்துக்காக இருவரும் மேடையில் நடித்தாலும், ’அசல் வாழ்க்கையை நடிப்பாக நினைத்து விடாதே’ என்று  மகளுக்கு அறிவுரை சொல்லி, காதலனுடன் சேர்த்து வைக்கும் தாயாக ‘மைக்கேல் மதன காமராஜன்’ நாடக நடிகை என்று  சொல்லிக்கொண்டே போகலாம். ஆச்சி பற்றி ஓர் இதழில் சொல்லி விட முடியுமா? அடுத்த இதழிலும் ஆச்சி மனோரமா தொடர்வார்.

(ரசிப்போம்!)

படங்கள் : ஸ்டில்ஸ் ஞானம்

Related Stories: