கடல் நீர் உள்புகுந்து நெற்பயிர்கள் சேதம்

பொன்னேரி: பொன்னேரி அடுத்த கள்ளூர் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து வரும் மழைநீர் கால்வாய் கள்ளூர் கிராமத்தின் அருகில் உள்ள பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரியில் சென்று  முடிகிறது. மழை காலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் ஆரம்பாக்கம், மாங்கோடு பகுதி வழியாக பழவேற்காடு ஏரி மூலம் கடலில் கலக்கிறது. பழவேற்காடு ஏரியிலும் கடல்நீர் பல்வேறு பகுதிகளின் கால்வாய்  மற்றும் ஆறுகள் மூலம் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில், ஏரியில் உள்ள கடல்நீர் அதே கால்வாய் வழியாக பின் நோக்கி கள்ளூர் கிராமத்தினுள் புகுந்து விளைநிலங்களை சூழ்ந்து நெற்பயிர்களை மூழ்கடித்துள்ளது.

இதனால் விளைநிலங்களில் தேங்கியுள்ள உவர்ப்பு நீர் வடிந்தாலும், நெற்பயிர்கள் மீண்டும் வளர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே, பழவேற்காடு ஏரியின் உவர்ப்பு நீர் கால்வாய்  வழியாக விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்க கள்ளூர் பகுதியில் வெள்ளத் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Related Stories: