ஒருமுறை, 2 முறையல்ல 72 முறை பாம்புகள் கடித்தும்உயிர் வாழும் அதிசய மனிதர்

சித்தூர்: கூலித்தொழிலாளியை பலமுறை பாம்பு கடித்தும் அவர் உயிர் வாழும் அதிசயம் சித்தூரில் நடந்துள்ளது.. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பைரெட்டிப்பள்ளி அடுத்த கும்மரகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(45),  கூலித்தொழிலாளி. இவரை கடந்த 8 ஆண்டுகளாக நாகப்பாம்பு ஒன்று பின்தொடர்ந்து வந்து கடித்துள்ளது. இதுவரை 72 முறை கடித்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது: கிராமம் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு வேலைக்கு  சென்றபோது நாகப்பாம்பு காலில் கடித்தது. பின்னர், பலமநேர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து குணமடைந்தேன். கடந்தாண்டு வீட்டில் அமர்ந்திருந்தபோது பாம்பு கடித்தது. இதுவரை சுமார் 72 முறை பாம்புகள் கடித்துள்ளன.  கிராமத்தில் இருந்து வெளியூருக்கு கூலி வேலைக்கு சென்றாலும் அங்கேயும் பின் தொடர்ந்து வந்து பாம்பு கடித்தது.

 

கர்நாடக மாநிலம், முள்பகள் பகுதியில் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து கொண்டிருந்த போதும் பாம்பு கடித்தது. நாக தோஷம் இருப்பதால் பாம்பு பின்தொடர்ந்து கடித்து வருகிறது. காளஹஸ்தி சிவன் கோயிலில்  நாக பூஜை  செய்தால்  நன்மை கிட்டும் என்று உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, நான் சிவன் கோயிலில் நாக பூஜை செய்தேன். மேலும், குல தெய்வமான நாகம்மா கோயிலில் பிரதோஷ பூஜை செய்தேன். கர்நாடக மாநிலம், கோலார் பகுதியில்  உள்ள நாகதேவதை கோயிலில் நாக பிரதோஷ பூஜை செய்தேன். இதற்காக பலரிடமிருந்து ₹5 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கியுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.  72 முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த அதிசயம் அப்பகுதி மக்களிடையே  பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: