கொரோனா தடுப்பூசி சுற்றுலா: இங்கிலாந்து செல்ல இந்தியர்கள் ஆர்வம்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கான சுற்றுலாவில் இங்கிலாந்துக்கு செல்ல, ஏராளமான இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். உலக நாடுகளில் முதல் முறையாக, கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம்  என கடந்த புதனன்று இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தது. இதன் மூலமாக, அடுத்த வாரம் முதல் அங்கு பிபைசர், பயோன்டெக் தடுப்பூசி ஆகியவை பொதுமக்களுக்கு போடப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, இந்தியர்கள் பலர் கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக இங்கிலாந்து செல்வதற்கு ஆர்வமாக உள்ளனர். இங்கிலாந்து செல்வதற்கான பயண விவரங்கள் குறித்து அவர்கள் விமான டிக்கெட் ஏஜென்டுகளிடம் விசாரணை நடத்தத் தொடங்கி உள்ளனர்.  டிராவல்  ஏஜென்ட் ஒன்று இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசியை பெற விரும்பும் இந்தியர்களுக்காக மூன்று இரவு பொழுது தங்கி இருக்கும் வகையிலான பயண திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது தொடர்பாக மும்பையை சேர்ந்த டிராவல் ஏஜென்ட்டுகள், ‘மக்கள் எப்படி? எப்போது? கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக இங்கிலாந்து செல்ல முடியும் என   விசாரித்து வருகின்றனர்,’ என கூறியுள்ளனர்.  எனினும், கொரோனா தடுப்பூசி போட விரும்பும் பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் இருக்குமா? இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்களா?  இல்லையா? என்பது குறித்து இங்கிலாந்து அரசு தெளிவுபடுத்துவதற்காக டிராவல் ஏஜென்ட்டுகள் காத்திருப்பதாக தெரிவித்துள்ளன.

5 நாள் தனிமை கட்டாயம்

* இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், அங்குள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

* வெளிநாடுகளில் இருந்து டிசம்பர் 15ம் தேதி முதல் இங்கிலாந்து வருபவர்கள், 5 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். 6வது நாள் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்யப்படும் என்றும் இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

Related Stories: