களக்காடு முண்டந்துறை போல் நடவடிக்கை தேவை: மேகமலையில் 12 ஆயிரத்து 500 ஏக்கர் ஆக்கிரமிப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் மேகமலை வனப்பகுதியில் 12 ஆயிரத்து 500 ஏக்கர்  ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளது. இப்போதைய அரசியல் சூழலில் இவர்களை அகற்றுவது சாத்தியமில்லை என்பதால், களக்காடு- முண்டந்துறை போல் மக்களை வைத்தே வனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பொதிகை மலையில் வற்றாத ஜீவநதியாக உற்பத்தியாகி ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி கடந்த 1970ம் ஆண்டுகளில் வறண்டு தான் கிடந்தது. இந்த நதியின் நீர் ஆதார பகுதிகளில் பெரும் அளவு அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியது. இதனால் வனத்தை பாதுகாக்க வேறு வழியின்றி 1988 ம் ஆண்டு களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயம் உருவானதும், இங்கு ஆக்கிரமித்து வசித்த மக்களை வைத்தே வனப்பாதுகாப்பு பணிகளை செய்ய தொடங்கினர். இதனால் மக்களுக்கும் வேலை கிடைத்தது. வனமும் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்தது. இதன் விளைவாக ஐந்தே ஆண்டுகளில் தாமிரபரணி மீண்டும் உயிர் பெற்று வற்றாத ஜீவநதியாக உருவானது. தற்போது பெய்யும் மழையில் தாமிரபரணி கரைபுரண்டு வருவதை மக்கள் மிகவும் ஆச்சர்யத்தோடு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அதேபோல் மேகமலை வனப்பகுதியும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதாவது 629 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. வைகையும் வற்றாத ஜீவநதியாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. பின்னர் மெல்ல மெல்ல வனவளம் அழிய தொடங்கியதால் வைகை 2017, 2018ம் ஆண்டுகளில் முற்றிலும் வறண்டது. அரசு அடுத்தடுத்து எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக தற்போது மேகமலையில் உயிரினச்சூழல் பாதுகாக்கப்பட்டு வனவளம் ஓரளவு மேம்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டு இதுவரை மூல வைகை ஆற்றில் 200 நாட்களை கடந்து தண்ணீர் வந்து கொண்டுள்ளது. மேகமலையில் இ்ன்னும் மழை பெய்கிறது. இதே நிலை நீடித்தால் ஆண்டுக்கு 9 மாதங்கள் நீர்வரத்து என்று புதிய சாதனையை எட்டி விடும்.

வைகை அணை நீர் தான் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வசிக்கும் ஒரு கோடி மக்களின் குடிநீருக்கும், விவசாய பயன்பாட்டிற்கும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. களக்காடு- முண்டந்துறை பாணியில் மேகமலையையும் புலிகள் சரணாலயமாக மாற்றி, இந்த மலையை நம்பி வாழும் மக்களை வெளியேற்றாமல் வனப்பகுதிகளை அவர்களை வைத்தே பாதுகாக்கும் சூழ்நிலையை உருவாக்கினால் நிச்சயம் மேகமலையை பாதுகாக்க முடியும். வனத்துறையும் இதற்கு பரிந்துரைத்துள்ளது. ஆனால் வனத்தை கொள்ளையடிக்கும் ஒரு கும்பல் இந்த திட்டத்தை தடுத்து வருகிறது. இதனால் ஒரு கோடி மக்களின் வாழ்வாதாரமும், குடிநீர் தேவையும் கேள்விக்குறியான சூழலில் உள்ளது. இந்த கும்பலின் ஆதிக்கத்தை முறியடித்து வனத்தை பாதுகாக்க அரசு உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மேகமலை வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‛மேகமலையை புலிகள் சரணாலயமாக மாற்ற நாங்கள் அரசுக்கு பரிந்துரை செய்து 7 ஆண்டுகளை கடந்து விட்டது. என்ன காரணத்திற்காக இத்திட்டம் தாமதம் ஆகிறது என்பது தெரியவில்லை. ஆனால் புலிகள் சரணாலயமாக மாறினால் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்பது மட்டும் உறுதி. மாறாக மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். வனமும் பாதுகாக்கப்படும். வைகையும் மீண்டும் உயிர்பெற்று ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவநதியாக ஓடும். இதுகுறித்து அரசு தான் உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: