பேத்தி நிச்சயதார்த்தத்தில் கொரோனா விதிமீறல் : பாஜ மாஜி அமைச்சர் உட்பட 18 பேர் கைது

அகமதாபாத், :குஜராத்தில் கொரோனா வழிகாட்டுதலை மீறியதற்காக பாஜக முன்னாள் அமைச்சர், அவரது மகன் உட்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். அம்மாநில ஐகோர்ட் கண்டிப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குஜராத் மாநில பாஜக முன்னாள் அமைச்சர் காந்தி காமித் பேத்தியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி டோஸ்வரா கிராமத்தில் நடந்தது. இந்த விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். கொரோனா வழிகாட்டுதலின் படி, திருமண விழாவில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளக் கூடாது. ஆனால் அமைச்சரின் பேத்தியின் நிச்சயதார்த்தத்தில் முகக் கவசம் அணியாமல் ஆயிரக்கணக்கான உறவினர்கள் கலந்து கொண்டனர்.

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும், உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக மாநில காவல்துறை கடுமையாக  கண்டித்தது. உயர்நீதிமன்றத்தின் கடுமையான கருத்துக்களைத் தொடர்ந்து, தற்போது அமைச்சருக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் காந்தி காமித் ஐபிசி மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் 308, 188, 269, 270 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், அவரது மகன் ஜிதேந்திர காமித், சோனேகர் நகராட்சி உறுப்பினர் வினோத் சந்தத்ரேயா, பாஜக செயற்பாட்டாளர் கெவின் தேசாய், வீடியோகிராபர், மேடை அலங்கரிப்பாளர், சமையல்காரர்கள் உட்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.  அதேசமயம், நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: