நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகை : கடலூர், விழுப்புரம் மாவட்டம் செல்ல திட்டம்

சென்னை, :நிவர் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது. கடலூர், விழுப்புரம் மாவட்டம் சென்று நேரில் ஆய்வு செய்கிறது.தமிழகத்தை கடந்த 25ம் தேதி `நிவர்’ புயல் தாக்கியது. அப்போது காரைக்கால் - புதுச்சேரி இடையே 145 கி.மீ. சூறாவளி காற்றும், கனமழையும் பெய்தது. கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் விவசாய நிலங்கள் சேதம் அடைந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து, வீடுகள் தண்ணீரில் மூழ்கியது. புயல் அடித்த 10 நாட்கள் ஆகியும் இன்னும் புறநகர் பகுதிகளில் தண்ணீரில் மிதக்கிறது. இந்நிலையில், புரெவி புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால், ஏற்கனவே நிவர் புயலுக்கு பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிப்படைந்துள்ளது.

இதையடுத்து புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஸ் தலைமையில் 7 பேர் கொண்ட குழு கடந்த 30ம் தேதி தமிழகம் வருவதாக இருந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் `புரெவி’ என்ற புதிய புயல் உருவாகி, 4ம் தேதி (இன்று) கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மத்திய குழு சென்னை வருவது தாமதம் ஆனது.தற்போது புரெவி புயல் நேற்று (3ம் தேதி) வலுவிழந்து விட்டது. ஆனாலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிதம்பரம், கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நிவர் புயல் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது. நாளை மதியம் டெல்லியில் இருந்து புறப்படும் மத்திய குழுவினர், நாளை மதியம் 3 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறது. பின்னர் நாளை மாலை 4 மணிக்கு தலைமை செயலகம் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய குழு சந்திக்கிறது.

இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதங்கள் குறித்து முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகள் மத்திய குழுவிடம் விளக்கி கூறுவார்கள். இதையடுத்து மத்திய குழுவினர் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 6ம் தேதி நேரில் சென்று நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்வார்கள். பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்பார்கள்.

தமிழகத்தில் ஆய்வு பணிகளை முடித்துவிட்டு புதுச்சேரி மாநிலம் செல்லவும் திட்டமிட்டுள்ளனர். இரண்டு மாநிலத்திலும் 3 நாள் ஆய்வு பணிகளை முடித்துவிட்டு, 8ம் தேதி மீண்டும் சென்னையில், தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் மத்திய குழுவினர் 8ம் தேதி மாலை டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளனர்.பின்னர் தமிழகத்தில் நடத்திய ஆய்வுகள் குறித்து அறிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்படும். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், மத்திய அரசு தமிழகத்திற்கு நிவர் புயல் நிவாரண தொகை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories: