மூதாட்டி கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை மூதாட்டி கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து, 12 வருடமாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். ஊத்துக்கோட்டை திருவள்ளூர் சாலையில் வசித்து வந்தவர் ரங்கநாயகி (70).  இவர், கடந்த 2008ம் வருடம் வீட்டில் தனியாக இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் இவரை அடித்து கொலை செய்து விட்டு வீட்டின் பீரோவில் இருந்த 12 சவரன் நகைகளை திருடிச்சென்று விட்டார். தகவலறிந்த ஊத்துக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கிருஷ்ணகிரி மாவட்டம் கொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்ற மீன்கார ராமலிங்கம் (50)  என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த ராமலிங்கம் நீதிமன்றத்திற்கு ஒவ்வொரு மாத வாய்தாவுக்கும் ஆஜராகவில்லை. ஆகையால், ராமலிங்கத்தை கைது செய்து, ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.  

இந்நிலையில், திருவள்ளூர் எஸ்பி. அரவிந்தன் உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையில் எஸ்.ஐ.ராக்கிகுமாரி மற்றும் ஏட்டுகள் ராவ்பகதூர், லோகநாதன், செல்வராஜ் ஆகியோர் கொண்ட தனி படை அமைத்து ஜாமீனில் வெளியே வந்த கொலைக்குற்றவாளி ராமலிங்கத்தை திருவள்ளூர் அருகே மணவாள நகர் பஸ் நிறுத்தத்தில் கைது செய்தனர்.  பின்னர், அவனை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.  மேலும், ராமலிங்கம் மீது திருத்தணி, ஆர்.கே.பேட்டை, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர் என பல இடங்களில் 25 திருட்டு வழக்குகள் உள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட  ராமலிங்கம் ஜாமினில் வெளியே வந்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல்  12 வருடங்களாக தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: