சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து தனியார் கல்லூரி தாளாளரிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்: 5 பேர் கைது

பூந்தமல்லி: மதுரவாயல் கிருஷ்ணா நகர் 7வது தெருவை சேர்ந்தவர் ராகேஷ் (40).  ஆலப்பாக்கத்தில் பல் மருத்துவ கல்லூரி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டிற்குள்  நுழைந்த டிப்டாப் ஆசாமிகள் 7 பேர், தங்களை சிபிஐ அதிகாரிகள் என்று கூறி, அடையாள  அட்டையை காட்டி, வீட்டில் உள்ள வேலையாட்களை வெளியேற்றினர்.  பின்னர், ‘‘சிலை கடத்தல் வழக்கில் உங்கள் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ₹10 கோடி கொடுத்தால் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவீர்கள்,’’ என கூறினர். அவர்கள் மீது சந்தேகமடைந்த ராகேஷ், அவர்களது கவனத்தை திசை திருப்பி, மதுரவாயல்  போலீசுக்கு போனில் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், அந்த 7 பேரை மடக்கி பிடிக்க முயன்றனர்.

அதில், 2  பேர் தப்பி ஓடி விட்டனர்.  5 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், குன்றத்தூரை சேர்ந்த நரேந்திர நாத் (40), அனகாபுத்தூரை  சேர்ந்த ஸ்டாலின் (40), குன்றத்தூரை சேர்ந்த யோவான் (41), ராம சுப்பிரமணி (42),  சங்கர் (41) என்பது தெரியவந்தது. இதில், ராமசுப்பிரமணி ராகேஷ்க்கு அறிமுகமானவர் என்பதும் தெரிந்தது. ராகேஷ் பழமை வாய்ந்த பொருட்களை வாங்கி சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர் என்பதால், தனது வீட்டில் ஏராளமான பொருட்களை வாங்கி வைத்துள்ளார்.  இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராமசுப்பிரமணி, தனது  நண்பர்களை சிபிஐ அதிகாரிகள் போல் நடிக்க வைத்து பணம் பறிக்க  முயன்றது தெரிய வந்தது. அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி  வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை தேடி  வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.   

Related Stories: