இன்று தேசிய மாசு தடுப்பு தினம்: சுத்தமற்ற காற்று நம் ஆயுளை குறைக்கும்

சேலம்: 1984ம் ஆண்டு டிசம்பர் 2ம்தேதி இரவு மற்றும் 3ம்தேதி அதிகாலை பொழுதில் மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் மீத்தைல் ஐசோ சயனைடு என்ற நச்சுவாயு பரவியதில் 2,500 பேர் பலியாகினர். கண்எரிச்சல், மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் கண்பார்வை இழந்தனர். இந்த விபத்து உலகளவில் மாசால் நிகழ்ந்த மாபெரும்  பேரிடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. விபத்தில் இறந்தவர்களின் நினைவாக இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 2ம்தேதி (இன்று) தேசிய மாசு தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய சூழலில் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கமும், தொழிற்சாலைகளின் தேவையும், வளர்ச்சிக்கான மேம்பாட்டு பணிகளும் ஏதாவது ஒரு விதத்தில் மாசு அதிகரிக்க காரணமாகிறது என்றால் அது மிகையல்ல. காற்று மாசடைதல், நீர் மாசடைதல், நிலம் மாசடைதல் என்று பல்வேறு நிலைகளில் பிரிக்கின்றனர்  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதேபோல் ஒலியினால் ஏற்படும் மாசு, உயிரி மருத்துவ கழிவுகளால் ஏற்படும் மாசு, மின்னியல் கழிவுகளால் ஏற்படும் மாசு என்று பலவழிகளில் மாசு பிரச்சினைகள் உருவாகிறது.

இதில் காற்றுமாசு என்பது சமீபகாலமாக இந்தியாவில் பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. மோசமான காற்று மாசு நிறைந்த 20 நாடுகளில் இந்தியா 7வது இடத்தில் இருப்பதாக  ஆய்வுகள் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியின் புறநகரான குருக்ராம் பகுதி  தான், உலகத்திலேயே மோசமான மாசு நிறைந்த நகரம் என்று அதில் தெரிவித்திருப்பது அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.உலகளவில் வேகமாக பரவி வரும் மாசு அபாயங்களால் அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் லட்சக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படும் என்று கிரீன்பீஸ் சவுத் ஏசியா அமைப்பின் ஆய்வறிக்கை  தெரிவித்திருப்பது அதிர்ச்சியின் உச்சமாக உள்ளது.

மாசுபட்ட காற்றில் வரும் தூசியை தொடர்ந்து சுவாசித்தால் நோயாளியாக இல்லாதவர்களுக்கு கூட, நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும். ஆஸ்துமா நோயாளிகள் மிகவும் அவதிப்படுவார்கள். வயதானவர்களின் உடல் உறுப்புகள் சத்து குறைந்திருக்கும்  நிலையில், காற்று மாசு கூடுதல் அபாயங்களை உருவாக்கும். இப்படி பல்வேறு நிலைகளில் சுத்தமற்ற காற்று நம் ஆயுட்காலத்தை சராசரியாக 1:8 மாதங்கள் குறைக்கும் என்று மருத்துவ நிபுணர்கள்  தெரிவித்துள்ளனர்.

மூலப்பொருட்கள், எரிசக்தி, தண்ணீர் அல்லது பிற ஆதாரங்களை சிறப்பாக பயன்படுத்துதல், மறுசுழற்சி, சுத்திகரிப்பு உள்ளிட்டவற்றை முறையாக பின்பற்றுவதை, நமது முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதவேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் மாசுக்களை அவற்றின் ஊற்றுக்கண்ணிலேயே கண்டறிந்து  குறைக்க வேண்டும். இது  போன்ற நடவடிக்கைகளே எதிர்கால அபாயங்களுக்கும், அச்சுறுதல்களுக்கும் தீர்வாக அமையும் என்கின்றனர் இயற்கையை நேசிக்கும் மாசுதடுப்பு விழிப்புணர்வு ஆய்வாளர்கள்.

Related Stories: