கடந்த நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1.04 லட்சம் கோடி வசூல்: தொடர்ந்து 2வது மாதமாக இலக்கை தாண்டியது

புதுடெல்லி: கடந்த நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1.04 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. இதன்மூலம், தொடர்ந்து 2வது மாதமாக மத்திய அரசு நிர்ணயித்த சராசரியாக மாதம் ரூ.1 லட்சம் கோடி வசூல் இலக்கை தாண்டியுள்ளது. மாதத்துக்கு குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாக வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. ஆனால், ஜிஎஸ்டி அறிமுகம் செய்ததில் இருந்து பெரும்பாலான மாதங்கள் இந்த இலக்கு எட்டப்படவில்லை. அதிலும், கொரோனா ஊரடங்கு துவங்கியதில் இருந்து வசூல் வெகுவாக சரிந்து விட்டது. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு நேரடி வரி வருவாய் குறைந்து விட்டது.

அக்டோபர் மாதத்தில் அதிக அளவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாலும், கெடு தேதிக்கு பிறகும் தொடர்ந்து கணக்கு தாக்கல் செய்யப்பட்டு வருவதாலும் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கேற்ப கடந்த அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி ரூ.1,05,155 கோடி வசூல் ஆனது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.95,379 கோடி வசூலாகியிருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாக வசூலாகியுள்ளது.இதுபோல், கடந்த நவம்பர் மாதத்திலும் ஜிஎஸ்டி சராசரி இலக்கை தாண்டி வசூலாகியுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவ து: பொருளாதாரம் மீட்சி அடைவதை குறிக்கும் வகையில், ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,03,491 கோடி வசூல் ஆனது. இது கடந்த ஆண்டு நவம்பரை விட 1.4 சதவீதம் அதிகம். இதுபோல், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இறக்குமதி மூலம் கிடைக்கும் வரி வசூல் 4.9 சதவீதம், இறக்குமதி சேவைகள் உட்பட உள்நாட்டு பரிவர்த்தனைகளில் கிடைத்த வரி வசூல் 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதாவது, கடந்த நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1,04,963 கோடி வசூல் ஆகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.19,189 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.25,540 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.51,992 கோடி வசூலானது. இதில் இறக்குமதி மூலம் ரூ.22,078 கோடி அடங்கும். செஸ் வரி ரூ.8,242 கோடி வசூலானது. இதில், இறக்குமதி வரி ரூ.809 கோடி அடங்கும் என கூறப்பட்டுள்ளது. அதிகமாக ஜிஎஸ்டி செலுத்தும் 25,000 பேர் கணக்கு தாக்கல் செய்யவில்லை எனவும், இவர்களுக்கு நினைவூட்டல் அனுப்பப்பட்டு வருவதாகவும் நிதியமைச்சக அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர். கடந்த 28ம் தேதி வரை 80 லட்சம் ஜிஎஸ்டி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

Related Stories: