இந்தியாவில் 14% பேர் பட்டினியுடன் தினமும் இரவில் உறங்கச் செல்கிறார்கள்!

நன்றி குங்குமம்

அதிர்ச்சி ரிப்போர்ட்

ஆமாம். தலைப்பில் உள்ள இந்த விஷயம்தான் - ஆய்வறிக்கைதான் - சமீபத்திய ஹாட் டாக். பட்டினியின் அடிப்படையில் 107 நாடுகளை ஆய்வு செய்ததில் இந்தியாவுக்கு 94வது இடம். அதாவது கட்டக் கடைசி பட்டினிச் சதவீதம் குறைவாக உள்ள நாடு முதலிடம் பிடிக்கும். பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கையைவிட இந்தியா பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தவிர, இந்தியாவில் 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் பட்டினிக்கான குறியீடாக அந்த ஆய்வு எடுத்திருக்கிறது. இந்த பட்டினிக் குறியீடு உணவு இல்லாமையாலா அல்லது ஊட்டச்சத்து குறைபாட்டாலா என்ற அடிப்படையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் க.ஜோதி விநாயகத்திடம் பேசினோம். ‘‘முதலில் மனிதனுக்கு ஏதாவது உணவு கிடைக்க வேண்டும். பிறகுதான் அதில் என்ன ஊட்டச்சத்து இருக்கிறது என்று ஆய்வு செய்ய முடியும். முட்டை, பால், இறைச்சி, காய்கறிகள், பழங்களில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால், அடிப்படை உணவுகளான அரிசி, பருப்பு, உளுந்து, சர்க்கரையில் கூட குறைந்த அளவில் சத்துக்கள் உண்டுதானே! இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை உணவு கிடைத்தாலே போதும் என்ற நிலை. இதுவே அவர்களை ஓரளவுக்காவது ஆரோக்கியமாக வாழ வழிசெய்யும். அப்படிப் பார்க்கும்போது இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை உணவு கிடைப்பது கூட ரொம்பவே அரிதாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கிறது இந்த ஆய்வு.

அதாவது அரசின் கையிருப்பில் உணவு இருந்தாலும் அது சரியான மக்களுக்குப் போகவில்லை என்பதைத்தான் சூசகமாகச் சொல்கிறது இந்த ஆய்வு...’’ என்ற ஜோதி விநாயகத்திடம், ‘இந்தியாவின் அடித்தட்டு மக்களின் பசியைப் போக்கத்தான் 2013-ல் உணவுப் பாதுகாப்பு என்ற சட்டம் வந்தது. அதன்மூலம் ரேஷன் கடைகள், பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவு, கருவுற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் இளைய சமூகத்துக்கு நூறு நாள் வேலை போன்ற திட்டங்கள் வந்தன. அப்படியிருக்க இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில் உள்ள 7 கோடி டன் உணவுச் சேமிப்பால் இந்த பட்டினியைத் தீர்க்க முடியாதா..?’ என்றோம். ‘‘தமிழ்நாடு, கேரளா போன்ற ஒருசில மாநிலங்களில்தான் உணவுக்கான பொது விநியோகம் சிறப்பாக நடக்கிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் எல்லோருக்குமான பொதுவிநியோகம் ரேஷன் கடைகள் மூலம் நடைபெறுகிறது. ஆனால், பல வட மாநிலங்களில் குறிப்பிட்ட வருமானமுள்ள மக்களுக்குத்தான் ரேஷன் கடைகள் மூலம் உணவு விநியோகம் செய்யப்படுகிறது. பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம் உட்பட 8 மாநிலங்களில் வறுமை தாண்டவமாடுகிறது. அந்த மாநிலங்களில் எல்லோருக்குமான பொதுவிநியோகம் இல்லை. அத்துடன் பலருக்கு ரேஷன் அட்டையே இல்லை. தவிர, 2012ல் எடுக்கப்பட்ட வறுமைக்கோடு கணக்கீட்டுப்படிதான் அங்கே ரேஷன் அட்டைகளும் வழங்கப்பட்டன.

27 சதவீதத்தினர்தான் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பதாக அந்தக் கணக்கீடு சொன்னது. ஆனால், கடந்த 8 வருடங்களில் இந்தியாவின் வறுமை மேலும் உயர்ந்துள்ளது. ஆக்ஸ்ஃபாமின் ஆய்வு இந்தியாவில் 65 முதல் 70 சதவீதமானவர்கள் வறுமையில் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளது. இந்தியாவின் வறுமையை மத்திய அரசு கணக்கிட்டுச் சொல்லத் தயங்குகிறது. இதுதான் இந்தியாவின் பட்டினிக்கு முக்கிய காரணம். மட்டுமல்ல, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப்போக அரசு முயற்சிக்கிறது. உதாரணமாக நூறு நாள் வேலைத்திட்டத்தில் அரசு செலவிடும் தொகை குறைந்து வருகிறது. இதற்கு மீனை இலவசமாகக் கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கவேண்டும் என்று காரணம் வேறு சொல்கிறது அரசு. இதற்காகத்தான் லோன் வாங்கிக் கொள்ளுங்கள்... வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளுங்கள் என்று அரசு ஆலோசனை தருகிறது...’’ என்றவரிடம் ‘இவ்வளவு பிரச்சனைகள் இருக்க, மோடியை இரண்டாம் முறையாகவும் மக்கள் எப்படி ஜெயிக்க வைத்தார்கள்..?’ என்றோம். ‘‘வட மாநிலங்களில் உணர்ச்சிகரமான அரசியலுக்குத்தான் இடம். இரண்டாவது, தேர்தலில் பாகிஸ்தான், பாதுகாப்பு என்று சொல்லி மக்களைத் திசை திருப்பினார்கள். அத்துடன் வடமாநிலங்களில் கல்வி வளர்ச்சியும் குறைவு. மக்கள் சமூகப் பிரச்னைகளை ஆய்வு செய்து வாக்களிப்பதில்லை. சாதி, மதம் தொடர்பான பிரச்னைகளைத் தேர்தல் காலங்களில் கிளறிவிட்டு மக்களிடம் உணர்ச்சிகரமான அரசியலைச் செய்கிறார்கள் அரசியல்வாதிகள்.

வேலையில்லாத் திண்டாட்டம் தென் மாநிலங்களைவிட வடமாநிலங்களில்தான் அதிகம். இதை கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையை வைத்தே புரிந்துகொள்ள முடியும். இப்போதிருக்கும் நிலையே தொடர்ந்தால் பட்டினி மேலும் தீவிரமாகலாம்...’’ என்று ஜோதி விநாயகம் முடிக்க, ‘‘இந்திய அரசின் உணவுச் சேமிப்பு போதுமானதாக இருந்தாலும் அது பட்டினியை விரட்டாது...’’ என்று இன்னொரு கோணத்தையும் விவரித்தார் பவானி. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் விவசாயம் மற்றும் ஊட்டச்சத்துக்கான நிபுணர் இவர். ‘‘இந்திய விவசாயத்தில் 85 சதவீதம் சிறுவிவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. உலக நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் உணவு உற்பத்தி போதுமானதாக இல்லை. உண்மையில்  சிறுவிவசாயம் மிகவும் அழிந்த நிலையில் உள்ளது. பூச்சிக்கொல்லிகள் மற்றும் செயற்கையான விவசாயத்தின்மூலம் மண்ணைக் கெடுத்து விளைச்சலை வீழ்ச்சியடைய வைத்திருக்கிறோம். சிறுவிவசாயம் சீரிய முறையில் இருந்திருந்தால் உள்ளூர் உணவுத்தேவைகள் சரி செய்யப்பட்டிருக்கும். உணவுப் போதாமையோடு வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்திருப்பதால் பட்டினியின் அளவு கூடிக்கொண்டே போகிறது. சிலவற்றை சமாளிக்க அரசுக்கு வேண்டிய ஆலோசனைகளையும் நிபுணர்கள் சொல்லி வருகிறார்கள். உதாரணமாக பொது விநியோகத்தில் சிறுதானியங்களையும் சேர்க்க கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் அரசின் செவிமடுப்பின் மூலமே சாத்தியமாகும்..’’ என்று முடித்தார் பவானி.

தொகுப்பு: டி.ரஞ்சித்

Related Stories: