துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!

நன்றி குங்குமம்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சுதேசி கப்பலை இயக்கியவருமான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப் பேரன் துறவியாகி இருக்கிறார் என்பதுதான் ஹாட் நியூஸ். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீன மடம், தென் இந்தியாவிலுள்ள சைவ ஆதீனங்களில் முதன்மையானது. கி.பி.14ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்த ஆதீனத்தில் இப்போது 24வது குருமகா சந்நி தானமாக  ஸ்ரீலஸ்ரீ  அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். கடந்த வாரம் இங்கு நடந்த ஆன்மார்த்த மூர்த்தி பூஜையில் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன் சிவசங்கரனுக்கு கல்லாடை யாத்திரை கஷாயம் கொடுத்து வேலப்ப சுவாமிகள் என்ற தீட்சா நாமமும் வழங்கி ஆதீன திருக்கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

‘‘சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்துல சிக்கல்னு ஒரு கிராமம். பி.டெக் படிச்சிருக்கேன். வ.உ.சி.க்கு நான்கு மகன்கள், நான்கு மகள்கள். நான் மூத்த மகள் ஞானாம்பிகையின் பேரனின் மகன். அதாவது, மூத்த மகள் ஞானாம்பிகையின் மகன் சங்கர நாராயணன். இவரின் மகன் திருஞானசம்பந்த மூர்த்தி. இவரின் மூத்த மகன்தான் நான். எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆன்மீகத்துல நாட்டம் அதிகம். தமிழ் மீதும் சைவத்தின் மீதும் பற்றுள்ளவன். அடிக்கடி சிவமடங்களில் நடக்கற சொற்பொழிவுகள்ல கலந்துப்பேன். இதனால, சந்நியாசம் பெறணும்னு முடிவெடுத்தேன். என் பெற்றோர்கிட்ட முறைப்படி சம்மதம் வாங்கி, திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சந்நிதானம் ஆசியுடன் இப்ப துறவறம் ஏற்றிருக்கேன்...’’ என்கிறார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரனான சிவசங்கரன் என்கிற வேலப்ப சுவாமிகள்.

துறவறம் போன வ.உ.சி...

‘‘வ.உ.சி.யும் சிறுவயதில் துறவறம் போனவர்தான். துறவறத்திற்காக மொட்டை அடித்துக் கொண்டு, கோவணத்துடன் போனதாகவும், பிறகு தந்தை வருத்தப்பட்டதால் திரும்பி வந்ததாகவும் தன் சுயசரிதையில் கூறியுள்ளார். இதை, தோல்வியுற்ற துறவறம் என்றே எழுதியிருக்கிறார். எண்ணிலா தடவை இப்படி நேர்ந்ததாகச் சொல்கிறார். வ.உ.சி.யின் எழுத்துகளில் நிறைய ஆன்மீக நாட்டம் உள்ளதைப் பார்க்கலாம். அவர் சிறையிலிருந்து வந்தபின்பு மெய்யறம் என தத்துவார்த்த நூல்களையே எழுதினார். அவர் எண்ணம் போல அவரின் கொள்ளுப்பேரனும் துறவறம் பூண்டுள்ளார்...’’ என்கிறார் வ.உ.சி. பற்றிய ஆய்வாளரான ரெங்கையா முருகன்.

தொகுப்பு: ராஜேந்திரன்

Related Stories: