அமைதியான இந்தியாவுக்காக பெண்களின் பரப்புரை பயணம்.

நன்றி குங்குமம் தோழி

இந்தியா முழுவதுமிருந்து பல முனைகளிலிருந்து பெண்கள் இணைந்து ஒரு பிரசாரப் பயணத்தைத் துவக்கி, புது டில்லியில் அப்பயணம் முடியவிருக்கிறது.  இந்த நீண்டப் பயணம் ஏன்? டெல்லியில் ஷப்னம் ஹஷ்மி, ஆனி ராஜா, லீனா டாய்புரு என்ற மூன்று அமைப்புகளைச் சார்ந்த பெண்கள் ஒருங்கிணைந்து பேசி, அதன் வழியாக ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் குழுக்கள், அமைப்புகள், தனி நபர்களை இணைத்துக்கொண்டு புறப்பட்ட இந்தப் பயணங்கள் சமூகத்தில் மிகப்பெரும் தாக்கத்தை விளைவிக்க வல்லது.

ஒவ்வொரு குழுவிலும் 20 முதல் 25 பெண்கள் பங்கேற்கிறார்கள். பல மொழிகள் பேசும் அவர்கள் அனைவரும் பல கலாசாரங்களைப் பின்பற்றுபவர்கள். ஒரு வானவில் கூட்டணியாக வண்ணத்துப்பூச்சிகளைப் போல் வண்ணமயமாகப் புறப்பட்டிருக்கிறார்கள். ஐந்து முனைகளிலும் தமிழகத்திலிருந்து ஐந்து பேர் பங்கேற்றிருக்கிறார்கள். காஷ்மீரிலிருந்து கிளம்பும் குழுவில் திருநங்கை அனு பங்கேற்றிருக்கிறார். அஸ்ஸாம் மாநிலம் ஜோஹர்ட்டிலிருந்து பயணிக்கும் கவிதா கஜேந்திரன், டெல்லியிலிருந்து கிளம்பிய குழுவில் திலகவதி, கன்னியாகுமரியிலிருந்து ராஜலட்சுமி பயணிக்கிறார்.

ஆனி ராஜா கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்ட தமிழகக் குழுவுடன் இணைந்து பயணிக்கிறார். கேரளத்தில் காசர்கோட்டிலிருந்து ஷப்னம் ஹஷ்மி, லீனா டாய்புரு தலைமையில் பயணிக்கும் தமிழகத்தின் லில்லி பயணிக்கிறார் குழந்தைகள்,பெண்கள்,சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான தாக்குதல், பள்ளி, கல்வி நிலையங்களில் மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை, பண்பாட்டு கலாசாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல், மாநில தன்னாட்சி அதிகாரத்தின் மீதான தலையீடு போன்றவை அறிவிக்கப்படாத எமர்ஜன்சி காலநிலையை விட மோசமான அளவிற்கு இன்றைய மத்திய ஆட்சியின் செயல்பாடுகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனை உறுதிபடுத்தும் விதமாக சுகாதாரம், பாகுபாடு பார்த்தல், கலாசார மரபுகள், பாலியல் வன்கொடுமை, பாலியல் அல்லாத வன்கொடுமை, ஆள் கடத்தல் போன்ற காரணங்களை அடிப்படையாக கொண்டு தாம்ஸன் ராய்டர்ஸ் தனியார் நிறுவன ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்று அந்த ஆய்வு கூறியிருந்தது. இந்தச் சூழலை உணர்ந்து பொதுமக்களுக்கு ‘வன்முறையற்ற இந்தியாவை உருவாக்குவோம்’ என்கிற தலைப்பில் அமைதிக்கான உரையாடல் பயணத்தை இந்திய அளவில் பல்வேறு பெண்கள் அமைப்புகள் இணைந்து மேற்கொண்டிருக்கின்றனர்.

செல்லும் வழியெங்கும் இவர்கள் எளிய மக்களையும் தொழிலாளப் பெண்களையும் அதிகம் சந்திக்கிறார்கள். அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் பயணிக்கும் குழுவினர், பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களுடன் உரையாடுவது, அவர்களையும் கலை நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொள்வது என்று நட்புணர்வு மிளிர தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள்.

காஷ்மீரிலிருந்து ஏராளமான இஸ்லாமியப் பெண்களும் இந்தப் பரப்புரையில் இணைந்திருக்கிறார்கள். வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்தையும் தவறாமல் அனைவரும் முன்வைக்கிறார்கள். “மொழி, கலாச்சாரம் வெவ்வேறானாலும், நமது உணர்வுகள், நோக்கங்கள் ஒன்றுதான்! நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைச் சிதைக்கும் காவி அழிவு சக்திகளை துடைத்தெறியும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம்!” என்று அவர்கள் சொல்லி விடைபெற்ற தருணம் நெகிழ்ச்சியானது...

- ஜெ.சதீஷ்

Related Stories: