காண்பவை எல்லாம் உண்மையல்ல

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

அண்மையில் ஒரு விளம்பரம் தொலைக்காட்சியில் வெளியானது. இந்த விளம்பரம் வெளியானதும், பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த விளம்பரம் என்ன சொல்கிறது?சில நண்பர்கள் காரில் அமர்ந்துள்ளனர். அப்போது சில யானைகளைக் கொண்ட யானை மந்தை ஒன்று  அந்த காரை கடந்து செல்கிறது. அடுத்த சில வினாடிகளில், ஒரு குட்டி யானை வருகிறது. அந்த குட்டி யானையை, காரில் இருந்த ஒரு  பெண் கையிலிருந்த கீ செயின் மூலம் அதனை குட்டியின் தாயுடன் சேர்த்து வைக்கிறார்.

பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது?ஆனால் நிஜத்தில் இது எவ்வளவு ஆபத்தானது? இதே போல் நாளை யாராவது காரை நிறுத்தி, கீ  செயின் மூலம் குட்டியை தாய் யானையுடன் சேர்த்து வைக்க நினைத்தால் என்னவாகும்?உண்மையில் விளம்பரப் படத்தில் உள்ள சூழலை  வர விடவே கூடாது. யானை மந்தையை பார்த்தாலே, காரை வேகமாக ஓட்டி, நெடுதூரம் போய் விட வேண்டும். மாறாக விளம்பரத்தில்  உள்ளது போல் நடந்தால், மந்தையில் செல்லும் யானைகளில் ஒன்று குறும்பாகவோ அல்லது கோபத்திலோ, காரையே குப்புறத் தள்ளி  விட்டு விடக்கூடும். அது மட்டுமல்ல குட்டி பிரிந்து வரும் நிலையில், தாயும் அதனை தேடி திரும்ப வரக்கூடும். நீங்கள் செய்யும் நல்லதை  புரிந்து கொள்ளாமல் கோபத்தில் ஆக்ரோஷமாக காரையும் உங்களையும் தாக்கினால் என்னவாகும்?இனியாவது இது போன்ற  விளம்பரங்களை எடுப்பவர்கள் பின் விளைவுகள் பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டறிந்து பிறகு எடுக்க முன்வருவார்களா?

பின்குறிப்பு:

1.     ஊட்டி - மைசூர் சாலையில் காடு குறுக்கிடுகிறது. இதில் சிலர் மிருகங்களை எதிர்பாராத விதமாக பார்த்தால் காரை நிறுத்தி  புகைப்படம் எடுப்பதுடன் குறும்பு வேலைகளில் ஈடுபடுவதும் உண்டு. இதனால் காட்டின் நுழைவாயிலிலும், முடிவு வாயிலிலும் ஒவ்வொரு  வண்டியின் இயக்க நேரம் கணக்கெடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் காட்டைக் கடந்து வெளி வராவிட்டால் அபராதம் உடனே  விதிக்கப்படும்.

2.     யானை எப்போது சாந்தமாக இருக்கும்... எப்போது பாயும் எனச் சொல்ல இயலாது.  ஆண்டுதோறும் குறைந்தது  40 பேராவது  யானை தாக்கி இறக்கிறார்கள்.

- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூர்

Related Stories: