கண்ணுறங்கு மகளே

நன்றி குங்குமம் தோழி

உறக்கம் என்பது உடல் ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் மிகவும் முக்கியம். தூக்கம் இல்லையெனில் ஆரோக்கியம் கெட்டு, அதன்மூலம் அழகும் கெட்டுப்போவது நிச்சயம்.தூக்கப்  பிரச்னை  என்பது  அனைவருக்கும் பொதுவானதுதான். அதிலும் பெண்களே அதிகமாக பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில்  தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு தூக்கம் குறைந்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

பரபரப்பான இந்த வாழ்க்கைச் சூழலில் ஒவ்வொரு செயலைச் செய்வதற்கும் மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது. வீடு, அலுவலகம், பள்ளி,  கல்லூரி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளை மிகுந்த சிரமத்துக்கு இடையிலேதான் நகர்த்த வேண்டியுள்ளது. இதில் அரைகுறையாக  தூங்கி எழுந்து செல்பவர்கள்தான் அதிகம் பேர். வேலை செய்யும் இடத்திலும் சிலருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தூக்கம்  வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.

இதற்கெல்லாம் காரணம் சராசரியாக அவர்கள் தூங்காததுதான். அதிலும் குறிப்பாக ஆண்களைவிட பெண்கள்தான் சராசரி அளவில் தூங்க  வேண்டும் என்று ‘உலக சுகாதார மையம்’ எச்சரிக்கிறது. அப்படி முறையாக அவர்கள் தூங்கவில்லை என்றால் பல்வேறு  உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டு ஆயுளுக்கும் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்படுவார்கள் என்றும் கூறுகிறது.ஆண்களுக்கு நிகராக பெண்களும் இன்று பல வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். கணவன், குழந்தை என்று ஒரு  குடும்பத்தை நிர்வகிப்பது மட்டுமல்லாமல் அவர்களும் அலுவலகத்துக்குச் சென்று தங்களது குடும்ப சேமிப்பை  உயர்த்த  நினைக்கிறார்கள்.  இப்படி அங்குமிங்கும் ஓய்வு இல்லாமல் உழைக்கும் பெண்களும் சரி, வீட்டு வேலை உட்பட பல வேலைகளில் தங்களது கவனத்தை  செலுத்தும் பெண்களும் சரியான அளவில் தூங்காமல் இருப்பதால் உடல் ஆரோக்கிய குறைபாடுகள் அதிகம் ஏற்படுகிறது. அதோடு  ஆண்களைவிட பெண்களுக்கே உடல் ரீதியான மாற்றங்கள் நிறைய ஏற்படுகிறது.

இந்தக் காலங்களில் அவர்கள் முறையான தூக்கத்தை கடைப்பிடித்தால் உடல் சோர்விலிருந்து விடுபடலாம். மன ஆற்றலும்  அதிகரிக்குமாம். மூளையும் புத்துணர்ச்சி அடைந்து நீண்ட ஆயுளும் கிடைப்பதாக கூறுகிறார்கள்.ஒரு பெண் சராசரியாக 7 மணி நேரம்  முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டியது அவசியமாகிறது. 64 வயதுக்கு மேலானவர்கள் 7 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை  தூங்க வேண்டுமாம். இளம் வயதினரும் குழந்தைகளும் 9 முதல் 10 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்றும் அந்த ஆய்வு  கூறுகிறது.இந்த வழிமுறையை பின்பற்ற தவறினால் மாதவிடாய் காலத்தில் பிரச்னைகள் அதிகரிப்பது, மனஉளைச்சல் ஏற்படுதல்,  சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறது.

Related Stories: