நீங்க ஆல்ஃபாவா, பீட்டாவா?

நன்றி குங்குமம் தோழி

பெண் பலவீனமானவள்; எளிதில் உடையக்கூடியவள்; உணர்ச்சி மிக்கவள்; பணிந்து போகக்கூடியவள்;  ஒரே மாதிரியான எண்ணம்  கொண்டவள்... இன்னும் பல... ஆண்கள் பெண்களைப்பற்றி கொண்டுள்ள தவறான கருத்துக்கள். இவற்றைக் காரணம் காட்டி, பெண்  எப்போதுமே இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படுகிறாள். எல்லா பெண்களும் அப்படி இல்லை. தனித்துவமான பெண்களும் உண்டு. அவள்  ‘ஆல்ஃபா பெண்’ என்று சொல்லும் உளவியலாளர்கள் பெண்களிடம் உள்ள மாறுபட்ட குணங்களை வைத்து ஆல்ஃபா, பீட்டா, ஒமேகா என  மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்.

பீட்டா வகை

பீட்டா பெண்கள் எந்த சூழலுக்கும் வளைந்து கொடுக்கக்கூடியவர்கள். ஆதிக்க மனோபாவம் கொண்டவள். மேலும், தன்னுடைய கணவனோ,  காதலனோ எப்போதும் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, தன்னைச்சுற்றியே இருக்க வேண்டும்; தன்னை உள்ளங்கையில்  வைத்து தாங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவளாயிருக்கிறாள். மற்ற பெண்களைப்பற்றி தவறான கற்பனை உருவம் சித்தரிப்பவளாகவும்,  தனக்குக்கீழ் வேலை செய்யும் மற்ற பெண்களை சரிசமமாக நடத்தத் தெரியாதவளாகவும் இருக்கிறாள்.

ஒமேகா வகை

ஒமேகா பெண்களோ, சமூகத்தோடு இணையாமல், தனிமையில் இருப்பதை விரும்புவார்கள். ஒரு வட்டத்திலிருந்து வெளியே வராமல்,  எந்த ஒரு முடிவையும் தன்னிச்சையாக எடுக்கத் தெரியாமல், கூண்டுக்கிளி போல வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்கிறாள். எந்த ஒரு புதிய  விஷயத்தையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமற்று, சோம்பேறிகளாய் முடங்குவதோடு, தந்தை, சகோதரன் அல்லது கணவனைச் சார்ந்து  வாழ்வதை விரும்புபவளாக இருக்கிறாள். இவர்கள் மிகவும் கருணையுள்ளம் கொண்டவர்கள். இதுவே இவர்களுடைய பலவீனமும் கூட.  தன்னுடைய இயல்பான இரக்க சுபாவத்தால் எளிதில் ஏமாற்றப்படுபவளாகவும் இருக்கிறாள்.

ஆல்ஃபா வகை  

                                                                                            

ஆல்ஃபா பெண்களோ மற்ற பெண்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு தனித்துவமாக தெரியக்கூடியவர்கள் என்பதற்கான அடையாளங்களைஇவர்கள் கூறுகிறார்கள்.‘பாஸ்’ என்ற அதிகாரத்திமிரோடு மற்றவர்களை அடக்கி ஆள்பவள், சூழ்ச்சியானவள், கர்வம் மிகுந்தவள்,  அடங்காதவள் என்று பெண்ணை அடக்கி ஆள விரும்பும் ஆண்களால் விவரிக்கப்படும் ஆல்ஃபா பெண்கள் உண்மையில் அப்படி இல்லை  என்கிறார்கள் டெக்ஸாஸ் கிறிஸ்டியன் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர்கள். வலுவான ஆளுமை, அதீத தன்னம்பிக்கை  மற்றும்  விடாமுயற்சி போன்ற வழக்கத்திற்கு மாறான குணங்களைக் கொண்ட ஆல்ஃபா பெண்கள் உறவுகளில் மட்டுமல்ல அன்றாட வாழ்க்கையில்  தான் எதிர்கொள்பவர்களாலும் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறார்கள். ஆனால், புகழ்பெற்ற பெண் ஆளுமைகள் பலரும் ஆல்ஃபா பெண்களே.  உளவியலாளர்கள் ஆல்ஃபாபெண்களுக்கான சில குண நலன்களை கூறுகிறார்கள்.  பின்வரும் குணநலன்களை நீங்களும் பின்பற்றினால்  ஒரு ஆல்ஃபா பெண்ணாக உருவாக முடியும்.

சுயமரியாதை, கவுரவம்

ஆல்ஃபா பெண்கள் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்காகக்கூட தன் கொள்கைகளை தளர்த்திக் கொள்ளமாட்டார்கள். தன்னுடைய  கௌரவம், சுயமரியாதையை தக்க வைத்துக்கொள்வதற்காக யாரையும், எவருடையஎதிர்பார்ப்பையும் ஒதுக்கிவிடுவார்கள். ஒரு போதும் தன்  கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தன்னை அழகு படுத்திக் கொள்வதிலும் கண்ணியம்காக்கும் இப்பெண்களின் ஆடை  அலங்காரம்  மற்றவர்கள் மதிக்கும் விதத்தில் இருக்கும்.

தலைமைப் பண்பு

தன்னுடைய சமூக வட்டத்தில் ஒரு மையமாக செயல்படும் ஆல்ஃபா பெண், மக்களை இணைக்க விரும்புகிறாள். ஒரு கூட்டத்தில் முதல்  நடவடிக்கையை எடுப்பதற்கு தயக்கமோ, பயமோ ஆல்ஃபா பெண்ணுக்கு இருக்காது. எந்த ஒரு பதட்டமான சூழ்நிலையையும் கையாள்வது  மற்றும் தன்னுடைய இனிமையான பேச்சால் அனைவரையும் எளிதில் தன் கட்டுக்குள் கொண்டுவரும் திறமைசாலியான இந்தப்  பெண்களை, அவளைச் சுற்றியுள்ள மக்கள் எளிதாக தங்களின் தலைவியாக ஏற்றுக்கொண்டு, அவளது வழிகாட்டுதலை தானாக பின்பற்றத்  தொடங்கிவிடுவார்கள்.

தனித்துவம்

தான் நம்பக்கூடிய, தனக்குப்பிடித்த வாழ்க்கையை வாழ்பவர்கள். தனக்குப்பின்னால் பேசுபவர்களுக்காக தன் நடை, உடை, பாவனைகளை  மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அதேபோல மற்றவர்களைப் பின்பற்றியோ, மற்றவருக்காகவோ வாழ்வதையும் விரும்பமாட்டார்கள். தான்  என்ன நினைக்கிறார்களோ அதுதான் இறுதி முடிவு.

சுய நம்பிக்கை

தான் கொண்டுள்ள நம்பிக்கையில் உறுதியாக நிற்பவள். நீதி, நேர்மையில் வலுவான உணர்வு கொண்டுள்ள ஆல்ஃபா பெண்கள் ஒருபோதும்  நீதி தவறாதவர்கள். அநீதியான வார்த்தை களைக்கூட பேசமாட்டார்கள். தன் உள்மனம் சொல்வதை திடமாக நம்பும் இவர்கள் அதை  செயல்படுத்துவதிலும் பின்வாங்க மாட்டார்கள்.

மீள்திறன்

வாழ்க்கை சில நேரங்களில் இவர்களை அதள பாதாளத்தில் தள்ளினாலும், ஒருபோதும் மனம் உடையாதவர்கள். வறுமை, நோய், பாலியல்  கொடுமை, குடும்ப வாழ்க்கை என எந்த ஒரு சூழலால் பாதிக்கப்பட்டாலும் ஆல்ஃபா பெண்கள் சிலிர்த்தெழுந்து மீண்டுவிடுவார்கள். இவை  எல்லாம் ஒரு போதும் அவர்களின் தன்னம்பிக்கையை குலைக்காது.

விசுவாசம்

ஆல்ஃபா பெண்ணின் நம்பிக்கைக்குரியவராவது மிகக்கடினம். அவரது நம்பிக்கையைப் பெற்றுவிட்டால் இறுதிவரை நமக்கு விசுவாசமாக  நடந்து கொள்வதோடு, நமக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். நன்கு அறிமுகமானவர்களைக்கூட தன்னுடைய நெருங்கிய நட்பு  வட்டத்துக்குள் நுழையவிடமாட்டார்கள். நெருக்கமானவர்களையும் தன் சொந்த விஷயத்தில் தலையிட அனுமதிக்கமாட்டார்கள்.  யாரிடமிருந்தும் சற்று விலகியே இருப்பார்கள். இதனாலேயே இவர்களுக்கு நண்பர்கள் மிகக்குறைவு.

பிறரை நடத்தும் விதம்

எப்படி தனக்கான சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டார்களோ, அதேபோல மற்ற பெண்களையும் மரியாதையாக நடத்துவார்கள்.  தனக்குக் கீழ் வேலை செய்யும் பெண்களை மட்டம் தட்டி பேசவோ, மரியாதைக் குறைவாக நடத்தவோ மாட்டார்கள். அலுவலகத்திலோ,  தன் வீட்டிலோ மற்றும் அக்கம் பக்கத்திலோ உள்ள பெண்களைப்பற்றி தவறாக பேசுவதை விரும்ப மாட்டார்கள்.

வெளிப்படைத் தன்மை

எண்ணம் வேறாகவும், செயல் வேறாக

வும் இரண்டுவித முகம் இவர்களுக்கு இருக்காது. எண்ணம், செயல் இரண்டும் ஒன்றுதான். மற்றவர்கள் கவனத்தை தன்பால் ஈர்க்கவும்  விரும்ப மாட்டார்கள். அதேபோல் தனக்கு என்ன தேவை? என்ன நினைக்கிறாள் என்பதை வெளிப்படையாகப் பேசும் முதிர்ச்சியான  நடத்தை கொண்டவர்கள் ஆல்ஃபா பெண்கள். அலுவலகம், வியாபாரம் எந்த இடமாக இருந்தாலும் சரிசமமாக நடத்தப்படுவதையே  விரும்புவார்கள்.

ஆல்ஃபா பெண் தனக்கும் தன் ஆன்மாவிற்கும் உண்மையாக இருப்பதில் உறுதி கொண்டவள். சர்ச்சைக்கு இடமளிக்கும் சூழலிலோ அல்லது  தனக்கு மரியாதைக்குறைவு ஏற்படும் இடத்திலிருந்தோ சட்டென்று வெளியேற தயங்க மாட்டார்கள். சக்திவாய்ந்த, வலுவான,  தன்னம்பிக்கை மிக்க மற்றும் சுயமரியாதை கொண்ட பெண்ணாக தோன்றினாலும், கொடூரமானவள் என்று அர்த்தம் இல்லை.  மற்றவர்களைப்பற்றி புறம்பேசி, கொடூரமாக நடந்து கொள்ளும் பெண்ணைப் பார்த்தால் உறுதியாகச் சொல்லலாம் அந்தப் பெண் ஆல்ஃபா  பெண் இல்லை என்று. தன் வேலையைத் தானே செய்து கொள்வதையே விரும்பும் இவர்கள் எதற்காகவும் மற்றவர்களைச் சார்ந்து வாழ  விரும்ப மாட்டார்கள்.              

-இந்துமதி

Related Stories: