எந்த ரேஷன் கடைகளிலும் இனி பொருட்கள் வாங்கலாம் தமிழகத்தில் `ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்’ நடைமுறைக்கு வந்தது: முதல்வர் எடப்பாடி நேற்று துவக்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை”  திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்க முடியும். தமிழகத்தில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் பொதுவிநியோக திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை, தங்களின் விருப்பத்திற்கேற்ப தமிழ்நாடு முழுவதும் எந்த ஒரு நியாயவிலை கடையிலும் பெறத்தக்க வகையில் குடும்ப அட்டைகளின் மின்னணு முறை மாநில அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உரிம அளவிலான உணவு தானியங்களை தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெறத்தக்க வகையிலும், புலம்பெயர் குடும்பங்கள் தாங்கள் ஏற்கனவே வைத்துள்ள குடும்ப அட்டை விவரங்களின் அடிப்படையில் உணவு தானியங்கள் பெறத்தக்க வகையிலும், `ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’’ திட்டத்தை தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார். இந்த திட்டம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 32  மாவட்டங்களில் நேற்று முதல் செயல்படுத்தப்பட்டது.

தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் வருகிற 16ம் தேதி முதல் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு புலம்பெயரும் குடும்ப அட்டைதாரர்கள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி தங்களுக்குண்டான உணவு பொருட்களை உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதல் மூலம் இடம்பெயரும் மாநிலத்தில் பெற்றுக்கொள்ளலாம். பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு இடம்பெயரும் குடும்ப அட்டைதாரர்கள், தாங்கள் ஏற்கனவே வைத்துள்ள குடும்ப அட்டையினை கொண்டு, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி உரிம அளவிலான உணவு பொருட்களை மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட விநியோக விலையில் தங்களின் வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கைரேகையை பதிவு செய்து பெறலாம்.

தமிழகத்தை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் தொழில்நுட்ப காரணங்களினால் பயோமெட்ரிக் முறையிலான தகவலை உறுதிப்படுத்த இயலாத நிலையில், தற்போதுள்ள மின்னணு குடும்ப அட்டை மற்றும் ஆதார் தொடர்புடைய கைப்பேசிக்கு வரும் எஸ்எம்எஸ், ஆதார் கார்டு மற்றும் தற்போதுள்ள நடைமுறையான குடும்ப அட்டை ஸ்கேனிங் முறையை பின்பற்றியும் அத்தியாவசியப் பொருள்களை பெறலாம். வயது முதிர்ந்தோர் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேரில் வர இயலாத பயனாளிகள் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், தலைமை செயலாளர் சண்முகம், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சுதா தேவி, உணவு பொருள் வழங்கல்  மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: