சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ‘சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் நடைபெறும்’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அகில இந்தியக் குடிமைப் பணி முதன்மை தேர்வுக்கு(மெயின்)தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் வருகிற 5ம் தேதி முதல் 12ம் தேதி முடிய (சனி, ஞாயிறு நீங்கலாக) ஆறு நாள்களுக்கு இலவச இணையவழிப் பயிற்சி வகுப்புகள், தமிழ்நாடு மாநில அரசின் (சென்னைப் பசுமைவழிச் சாலையில் இயங்கும்) அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தால் நேரலையில் நடத்தப்பட உள்ளன.

இதில் யூடியூப் வழியே ஆர்வமுள்ள அனைவரும் இணைந்துகொள்ளலாம். மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கல்வித்துறையினருக்கும் பயன்படும் வகையில் தமிழிலக்கியம், ஆங்கில இலக்கியம், இந்திய வரலாறு, புவியியல், தொடக்கக்காலத் தமிழக வரலாறு, உலகப் பொருளாதாரச்சூழல், இந்தியப் பொருளாதாரச் சூழல், அறிவியல், இந்திய அரசியல் அமைப்பு, கோயில்களும் கட்டடக் கலையும், மன அழுத்த மேலாண்மை, சூழலியல் எனப் பல்வேறு பாடத் தலைப்புகளில் மிகச் சிறந்த அறிஞர்கள் பங்கேற்றுக் கருத்துரையாற்ற உள்ளனர்.

அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுக்குரிய பாடங்களை அனைவருக்கும் கற்பிக்கும் நோக்கிலும், திறமையும் ஆர்வமும் உழைப்புமுள்ள இளைஞர்களை அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் நோக்கி ஆற்றுப்படுத்தும் நோக்கிலும் காலை 11.00-12.30 மற்றும் பிற்பகல் 2.00-3.30 என்ற இரு வேளைகளில் இக்கருத்துரைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இது ஓர் அரிய வாய்ப்பு. இதில் கலந்துகொள்ளப் பதிவுகள் ஏதும் தேவையில்லை. முயற்சியும் தேடலும் உள்ளோர் அனைவரும்,www.civilservicecoaching.com, Youtube Name:  AICSCCTN இணைப்புவழி இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: