உத்தர பிரதேசத்தில் 4 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் சாவு: சிகிச்சை பலன் அளிக்கவில்லை

டெல்லி, லக்னோவில் போராட்டம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் 4 பேர் கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண், சிகிச்சை பலனின்றி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார்.  உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 19 வயது இளம்பெண்,  கடந்த 14ம் தேதி தனது தாயுடன் வயலுக்கு சென்றார். பின்னர், திடீரென காணாமல் போனார். பிறகு, உடலில் கடுமையான காயங்களுடன், நாக்கு துண்டிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அப்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, கழுத்தை நெரித்தும் கொலை செய்வதற்கு முயன்றுள்ளது. மேலும், பலாத்காரத்தின் போது அப்பெண்ணின் நாக்கையும் அந்த கொடூரன்கள் கடித்து கடுமையாக சேதப்படுத்தி விட்டனர். அந்த பெண். அலிகா ர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல்நிலை மோசமானதால், கடந்த திங்களன்று டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் 2 கால்களும் செயல் இழந்து விட்டன. கைகள் பாதியளவு முடங்கி விட்டன. நாக்கு துண்டிக்கப்பட்டதாலும், கழுத்து நெரிக்கப்பட்டதாலும் அவருடைய உடல்நிலை மோசமாகி விட்டது. அவரை காப்பாற்ற முடியவில்லை,’ என்றனர். இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். உபி.யில் ஏற்கனவே உன்னாவ் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது, இந்த இளம்பெண்ணின் மரணத்தால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி, லக்னோவில் போராட்டம் வெடித்தது. இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில், “பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும், மாநில செய்து தர வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலமாக உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும்,” என்றார்.

உடனடியாக தூக்கில் போட வேண்டும்

இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றத்தின் மூலம், உடனடியாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர்கள் கொந்தளித்துள்ளனர். பிரபல நடிகர் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்த சம்பவத்தால் நான் மிகவும் கோபத்துடனும், வெறுப்பிலும் இருக்கிறேன். அந்த குற்றவாளிகளை உடனடியாக தூக்கில் போட ேவண்டும்,’ என கூறியுள்ளார். இதேபோல், பல்வேறு பிரபல நடிகர்கள், நடிகைகளும் வலியுறுத்தி உள்ளனர்.

பகிரங்கமாக குற்றங்கள் செய்யும் குற்றவாளிகள்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘வெறித்தனமான செயலால் பாதிக்கப்பட்டு, உயிருக்காக போராடிய தலித் இளம்பெண் உயிரிழந்து விட்டார். உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாகி விட்டது. பெண்கள் பாதுகாப்பில் ஒற்றுமை கிடையாது. குற்றவாளிகள் பகிரங்கமாக குற்றச் செயல்களை செய்கின்றனர். இளம்பெண் சாவுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கேள... நீங்கள்தான் உத்தரப் பிரதேச பெண்களின் பாதுகாப்புக்கு பொறுப்பு,’ என குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் ஆணையம் உதவி

தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கூறுகையில், “பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, உபி. போலீசாரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆணையம் செய்யும்,” என்றார்.

Related Stories: