கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பாலியல் தொழிலாளர்களுக்கு இலவச உணவுப் பொருட்கள்: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பாலியல் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச உணவுப் பொருட்களை வழங்க வேண்டும்,’ என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கொரோனா ஊரடங்கால், பாலியல் தொழில் முற்றிலும் முடங்கி விட்டதால், அதை சார்ந்த தொழிலாளர்கள் வருமானமின்றி உணவுக்கு கூட வழி இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. கடந்த 21ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாககேஸ்வர ராவ் அமர்வு, ‘பாலியல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்்டும்,’ என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கானது நேற்று மீண்டும் காணொலி மூலமாக விசாரணைக்கு வந்தது. பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு போன்றவற்றால் அடையாளம் காணப்பட்டுள்ள பாலியல் தொழிலாளர்கள் அனைவருக்கும், அனைத்து மாநில அரசுகளும் இலவச உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். அடுத்த 4 வாரத்துக்குள் இவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி, எத்தனை பேருக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய அறிக்கைகளை, அனைத்து மாநில அரசுகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,’’ என்று கூறி, வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: