வேளாண் சட்டங்கள் சர்ச்சை: நாட்டின் எதிர்காலத்திற்காக, விவசாயிக்காக எதிர்க்கிறோம்: ராகுல் காந்தி பதிலடி

புதுடெல்லி: ‘‘விவசாயிகளுக்காக மட்டுமல்ல, நாட்டின் எதிர்கால நலனுக்காகவும் வேளாண் சட்டங்களை எதிர்க்க வேண்டும்’’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் ராகுல் காந்தி வீடியோ கான்பரன்சிங்  மூலம் கலந்துரையாடிய 11 நிமிட வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. இதில் ராகுல் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, 3 வேளாண் சட்டங்கள் ஆகிய மூன்றுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதில் வேளாண் சட்டத்திற்கு மட்டும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம், இது விவசாயிகளின் நெஞ்சில் நேரடியாக குத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதை விட வேளாண் சட்டங்கள் இன்னும் அதிக தீங்கு விளைவிக்கக் கூடியவை.

இந்த சட்டத்தை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில், இது விவசாயிகளுக்காக மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலகத்திற்காகவும் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். விவசாயிகள் வெறும் விவசாயிகள் அல்ல. விவசாயிகளின் குரல் ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும், ராணுவத்திலும், காவல் துறையிலும் உள்ளது. விவசாயிகளின் குரல் மிகுந்த சக்தி வாய்ந்தது. இந்த குரல்தான் இந்தியாவை சுதந்திரமடைய வைத்தது. அதே போல், விவசாயிகளின் குரல் தான் மீண்டும் ஒருமுறை தேசத்திற்கு சுதந்திரத்தை பெற்றுத் தரப் போகிறது.

இந்த சட்டங்கள், கறுப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கை என்கிறார்கள். அது உண்மையல்ல. நமது அமைப்புசாரா துறையையும், ஏழைகளையும் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் பலவீனப்படுத்துவதே அதன் நோக்கம். ஜிஎஸ்டியும் இதே நோக்கத்தை கொண்டது. ஆங்கிலேயர் காலத்து கிழக்கிந்திய கம்பெனி கலாச்சாரத்தை மீண்டும் புகுத்த இப்போது ‘‘மேற்கிந்திய கம்பெனி’’ வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயியின் வேதனை குரல்

ராகுலுடன் கலந்துரையாடலில் பங்கேற்ற மகாராஷ்டிராவின் யவாத்மால் பகுதியை சேர்ந்த அசோக் பூத்ரா கூறுகையில், ‘‘வேளாண் சட்டத்தை எதிர்த்து எந்த விவசாயி போராடினாலும் இனி சிறையில் அடைக்கப்படுவர் என நினைக்கிறேன். இந்த சட்டத்தால் விளைபொருட்களை இனி யாருமே குறைந்தபட்ச ஆதார விலையில் வாங்கப் போவதில்லை. கடந்த 1840ல் கிழக்கிந்திய கம்பெனி பருத்திக்கான விலையை இங்கிலாந்தில் இருந்து அறிவிக்கும். அந்த விலையில் உலகம் முழுவதும் வாங்கப்படும். ஆனால், பெரிய பெரிய தொழிலதிபர்கள் முன்கூட்டியே விலையை அறிந்திருப்பார்கள். அப்படித்தான், இனி விவசாய விளைபொருட்கள் விலையும் நிர்ணயிக்கப்படும். விவசாயிகளும், சிறு தொழிலதிபர்களும் சுரண்டப்படுவார்கள். விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல், விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும்,’’ என வேதனையுடன் தெரிவித்தார்.

Related Stories: