கோவில்பட்டி அருகே கொரோனா ஊரடங்கால் பனைநார் தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி பரிதவிப்பு: அரசு உதவியை எதிர்பார்த்து காத்திருப்பு

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே வேம்பார் பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கி போன பனை நார் பெட்டி தயாரிக்கும் தொழிலை மீண்டும் தொடங்க அரசின் உதவியை எதிர்பார்த்து தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் திருமணம் போன்ற சுபநிகழச்சிகளில் சீர் வரிசை பொருள்கள் கொண்டு செல்வதற்கும், கோவில் திருவிழாக்களின் போது பூஜை பொருள்கள் கொண்டு செல்வதற்கும் பனை ஓலை மற்றும் பனைநார் ஆகியவற்றினால் தயாரிக்கப்படும் ஓலை பெட்டி, ஓலைக்கொட்டான், சுளவு ஆகியவற்றை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.

இதனால் பனையைச் சார்ந்த பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது. தற்போது நவீன கால பிளாஸ்டிக்கினால் பனையைச் சார்ந்த பொருள்கள் தயாரிப்பு பாதிக்கப்பட்டாலும் இன்றளவும் சுபநிகழ்ச்சிகள் மற்றும் கோவில் திருவிழாக்காலங்களில் பனை பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வேம்பார் பகுதியில் இன்றளவும் பல வண்ணங்களுடன் கூடிய ஓலைப்பெட்டி, ஓலைக்கொட்டான், சுளவு ஆகியவற்றை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு தயாரிக்கப்படும் ஓலைப்பெட்டி, ஓலைக்கொட்டன், சுளவு ஆகியவை தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குடிசைத் தொழிலான இவற்றில் பல வண்ணங்களில், பல்வேறு அளவுகளில் தயார் செய்யப்படும் ஓலைப்பெட்டி, ஓலைக்கொட்டன் ஆகியவை 20 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் மற்றும் அதனைச் சார்ந்த ஊரடங்கால் கடந்த 5 மாதமாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் போதிய வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். கொரோனாவால் தங்களுடைய வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடப்பதோடு தயாரித்த பெட்டிகளை விற்பனை செய்ய முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.

மேலும் இவற்றுக்கான மூலப்பொருள்களான பனை நார், மட்டை, ஓலை ஆகியவற்றை ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வாங்கி வர வேண்டும் என்றும், கடந்த 5 மாதங்களாக பஸ் போக்குவரத்து இல்லாத காரணத்தினால் மூலப்பொருள்களை வாங்க செல்லவில்லை. தற்போது பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் மீண்டும் இத்தொழிலை ஆரம்பிக்க உள்ளதாகவும், எனினும் முன்பு போல் விற்பனை மற்றும் வருவாய் கிடைக்குமா? என்று தெரியவில்லை  என்கிறார் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சொர்ணா. கடந்த 5 மாதமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் நடைபெறவில்லை என்பதால் தங்களுடைய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும்,

தற்போது தான் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகள் தொடங்கியுள்ளதால் கணிசமான பெட்டிகள் விற்பனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கும் முத்துலெட்சுமி என்பவர், கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட தங்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலமாக கடன் வழங்கினால் மீண்டும் தொழிலை நல்லபடியாக செய்ய முடியும் என்றார். கடந்த 5 மாதங்களாக வீட்டில் முடங்கி கிடந்த இந்த தொழிலாளர்கள் தற்போது தொழிலை தொடங்கி இருப்பதால் அரசு உதவி செய்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்பாடு அடைவது மட்டுமின்றி,  பனை பொருள்கள் தயாரிப்பு தொழிலும் வளர்ச்சி அடையும்.

Related Stories: