காரைக்குடி பகுதியில் குடியிருப்பை சூழ்ந்த மழைநீர்; மக்கள் அவதி: நகராட்சி வேடிக்கை

காரைக்குடி: காரைக்குடி காளவாய்பொட்டல் பகுதியில் உள்ள வீடுளை சுற்றி குளம்போல் தண்ணீர் தேங்கி மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காரைக்குடி 30வது வார்டுக்கு உட்பட்ட  காளயப்பாநகர் தந்தை பெரியார் தெருவில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலை என்பதே கிடையாது. மழை பெய்தால் தண்ணீர் வெளியேறுவதற்கு உரிய கால்வாய்கள் இல்லை. ஒவ்வொரு வருடமும் மழை பெய்யும் போதும் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த சாதாரண மழைக்கே குடியிருப்பை சுற்றி குளம்போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வீட்டுக்குள் இருந்து மக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விஷ பூச்சிகள் வீட்டுக்குள் நுழைவதால் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து தண்ணீர் தேங்கி கழிவுநீர் போல மாறி கடும் துர்நாற்றம் வீசுகிறது. கிணறு, போர்களில் மழைநீர் இறங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கி கிடப்பதால் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதோடு காய்ச்சல் உள்பட பல்வேறு தெற்றுநோய் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் பிரகாஷ் கூறுகையில்,‘‘தண்ணீரை வெளியேற்ற நகராட்சி சார்பில் நிரந்தர நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தற்கு, மழைகாலங்களில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் மோட்டர் கொண்டு அப்புறப்படுத்துவதாகவும், காலியிடங்களை சீரமைத்து சரி செய்ய தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகிறது என பதில் அளித்துள்ளனர். ஆனால் அதுபோன்று செய்வது கிடையாது. ஒவ்வொரு வருடமும் மழைபெய்தால் எங்கள் பாடுதிண்டாட்டம் தான். அதிகாரிகள் யாரும் வந்து பார்ப்பது இல்லை,’’என்றார்.

Related Stories: