டெல்டாவில் 2வது நாளாக பலத்த மழை: அறுவடைக்கு தயாராக இருந்த 200 ஏக்கர் நெற்பயிர் சேதம்

நாகை: வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ெடல்டா மாவட்டங்களில் இரவு நேரத்தில் மழை பொழிந்து வருகிறது. 2வது நாளாக நேற்று பல இடங்களில் மழை பெய்தது. நாகை மாவட்டம் முழுவதும் 30 நிமிடம் இடியுடன் பலத்த மழை பெய்தது.  நாகூர், காடம்பாடி, வெளிப்பாளையம், கிழக்கு கடற்கரைசாலை, செல்லூர், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. கீழ்வேளூர் பகுதியில் இரவு 11.30 மணி முதல் 1 மணி வரை கனமழை கொட்டியது.  பட்டமங்கலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஏக்கர் குறுவை நெல் சாய்ந்தது.

இதேபோல் பட்டமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பயிர்கள் மழையால் சாய்ந்தன. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருவாரூரில் 48.4, நன்னிலம் 36.8, குடவாசல் 49.6, வலங்கைமான் 18.4, நீடாமங்கலம் 52.4, பாண்டவையாறு தலைப்பு 30, மன்னார்குடி 42, திருத்துறைப்பூண்டி 10, முத்துப்பேட்டை 24.2 என மாவட்டத்தில் சராசரியாக 34.6 மி.மீ. மழை பெய்துள்ளது. தஞ்சையில் நேற்றிரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பலத்த மழை பெய்தது. இன்று காலை ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

பாபநாசம் பகுதியில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. இந்த மழை 45 நிமிடம் நீடித்தது. இதனால் அய்யம்பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. உள்ளிக்கடையில் 5 மின்கம்பங்கள், ஆடுதுறையில் 2 மின்கம்பங்கள் சாய்ந்தன. திருவையாறு- கும்பகோணம் சாலையில் மேட்டுத்தெரு, உள்ளிக்கடை, ஆடுதுறை, புத்தூர் உள்ளிட்ட பகுதியில் அறுவடைக்கு தயாரான 100 ஏக்கர் வயலில் தண்ணீர் புகுந்தது. கோவிந்தநாட்டுச்சேரி, புத்தூர், கூடலூர், குடிகாடு, நாயக்கர்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தன.

புதுக்கோட்டை, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை பகுதிகளில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது. இன்று காலையில்  தூறல் மழை பெய்து வருகிறது. அரியலூரில் நேற்றிரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இடியுடன் பலத்த மழை பெய்தது.  பெரம்பலூரில் நேற்றிரவு 11 மணி முதல் 12 மணி வரை பலத்த மழை கொட்டியது. திருச்சி மாநகரம் மற்றும் புறநகர் பகுதியில் நேற்றிரவு மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

Related Stories: