குட்கா டைரி, மணல் மாபியா சேகர் ரெட்டி வழக்கு: அதிமுக அரசின் ஒவ்வொரு ஊழலையும் பாஜக அரசு காவலாளியாகக் காப்பது ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: சேகர் ரெட்டி வழக்கை முடித்துவைத்து அதிமுகவுக்கு பாஜக அன்புப் பரிசு அளித்தது அதிர்ச்சியளிக்கிறது என்று திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 நோட்டுகளை கடந்த 2016ம்  ஆண்டு தடை செய்து விட்டு புதிய நோட்டுகளை மோடி அரசு அறிமுகம் செய்தது. தொழிலதிபர் சேகர் ரெட்டி பழைய நோட்டுகளை,  வங்கி அதிகாரிகளின் உதவியுடன் மாற்றி, அதற்கு பதிலாக புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்கியதாக புகார் எழுந்தது இதனை  தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் சேகர் ரெட்டி மற்றும் அவருடன் பிரேம்குமார், ஸ்ரீனிவாசுலு, ரத்தினம், ராமச்சந்திரன், பரம்சல் லோதா  ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை வங்கிகள் தொடர்பான மோசடி வழக்குகளை விசாரிக்கும், சென்னை 11வது சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி  ஜவஹர் முன்பு நடந்து வந்தது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் மீதும், குற்றத்தை நிரூபிப்பதற்கான எந்தவித சரியான  ஆதாரங்களும் இல்லை. எனவே, சிபிஐ தரப்பே வழக்கை முடித்துக் கொள்வதாக கூறிய கோரிக்கையை ஏற்று, சேகர் ரெட்டி மீதான  வழக்கை நீதிமன்றம் நேற்று முடித்து வைத்தது.

இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,  வழக்குகளிலிருந்து அதிமுக அரசை காக்கும் காவலாளியாக பாஜக அரசு செயல்படுவதன் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மு.க.ஸ்டாலின் கூறுகையில்,

மணல் மாஃபியா சேகர் ரெட்டி:

* 247.13 கோடி ரூபாய் ஊழல் வழக்கிற்கு ஆதாரமில்லை என சிபிஐ சொல்லியிருக்கிறது. செயற்குழு நடந்த தினத்தில் அதிமுகவுக்கு  மத்திய அரசு வழங்கிய சிறப்புப் பரிசு இது.

* 170 சாட்சிகள், 800 ஆவணங்களை பரிசீலித்தும் ஆதாரம் கிடைக்கவில்லையாம், புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கி  கொடுத்தது என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

கரூர் அன்புநாதன்-கண்டெய்னர் லாரி:

* கரூர் அன்புநாதன் வீட்டில் 4.77 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. 570 கோடி ரூபாயுடன் திருப்பூரில் கைப்பற்றப்பட்ட  கண்டெய்னர்களை ஒரு கீழ் மட்ட வங்கி அதிகாரி உரிமை கொண்டாடி, பணக் கடத்தல் நியாயமாக்கப்பட்டது.

குட்கா டைரி:

* 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு, 40 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் என்ற குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்சம்  கொடுக்கப்பட்டது என டைரியே கிடைத்தது. ஆனால், விசாரணை முடக்கப்பட்டு அமைச்சரே விடுவிக்கப்பட்டார்.

RK நகர் தேர்தல் முறையேடு:

* அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 80 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டு தேர்தலே ரத்து செய்யப்பட்டது. முதலமைச்சர் உள்ளிட்ட அரை  டஜன் அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்கள். சென்னை  அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்கு க்ளோஸ்  செய்யப்பட்டது.

* வேலூர் தேர்தலில் 16 மாதங்களுக்குப்பிறகு சிபிஜயிடம் புகார் அளித்துள்ள தேர்தல் ஆணையமோ, வருமான வரித்துறையோ-இந்த  அளவு கோலை, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலில் ஏன் கடைபிடிக்கவில்லை? இது தான் அதிமுகவிற்கும்-பாஜகவிற்கும் உள்ள  ஊழல் கூட்டணி ரகசியம்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்:

* 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்ட பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்குப் போனது. எந்த அதிமுக விஐபிகளையும் தொடாமல்  ஒரு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து அதிலிருந்தும் அதிமுகவைக் காப்பாற்ற சிபிஐ அமைப்பை பாஜக அரசு  பயன்படுத்தியிருக்கிறது.

கொடநாடு கொலைகள்:

* கொடநாடு எஸ்டேட் ரெய்டு, ஊழல்கள், கொலைகளில் இதுவரை உண்மை கண்டு பிடிக்கப்படவில்லை.

பிற ஊழல் புகார்கள்:

* முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மீது தமிழக ஆளுநரிடம்  கொடுத்த ஊழல் புகார்கள் மீது தூசி படிந்து விட்டது.

* 100 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட ஒப்பந்தக்காரர் செய்யாத்துரை நாகராஜன் மீதான ரெய்டு-அவருக்கும் துறை அமைச்சருமான  பழனிசாமிக்கும் உள்ள தொடர்புகளை இன்னும் வருமான வரித்துறை வெளியிலும் விடவில்லை.

* 6 லட்சம் போலிகளை சேர்த்து 110 கோடி கொள்ளையடித்த பி.எம்.கிசான் ஊழலை சில ஊழியர்களின் ஊழல் என்று பாஜக-அதிமுக  அரசுகள் பூசி மெழுகி மறைக்கின்றன.

ஊழலுக்கு காவலாளி பாஜக:

* முதலமைச்சர் பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் தினமும் செய்யும் ஊழலுக்கு உற்ற பாதுகாவலாளி யார் என்றால் சாட்சாத் மத்திய பாஜக அரசு தான்.

* 2021-ல் அதிமுகவுடன் வைக்கும் கூட்டணிக்காகவும் -விரும்பிய எண்ணிக்கையில் இடங்களைப் பெறுவதற்கும் தான் இருவருக்கும் இடையில் வெளிப்படையான இந்த ஊழல் பாதுகாப்பு ஒப்பந்தமா? மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களை தங்குதடையின்றி செயல்படுத்தி விவசாயிகளை வஞ்சித்திட இந்த ஒப்பந்தமா? மாநில உரிமைகளைப் பறித்து அதிமுக அரசை தங்களின் அடிமையாக வைத்துக்கொண்டு மதவெறி அஜெணடாவை இந்தி திணிப்பை தமிழகத்தில் புகுத்துவதற்காக இந்த ஒப்பந்தமா?

* ஊழல் ஊழல் என்று ஊர் முழுக்க பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்குத்துறை போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை பிசுபிசுக்க வைப்பது ஏன்? என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: