தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம்?: மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை...மாலை முக்கிய அறிவிப்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் நாளையுடன் 8-ம் கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம்தேதி முதல் வரும் 30ம் தேதி (நாளை) வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனினும் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 8வது கட்ட ஊரடங்கு நாளையுடன் (30ம் தேதி) முடிவடைகிறது.

இதைத்தொடர்ந்து அக்டோபர் 1ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பது? கூடுதலாக புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் அக்டோபர் மாதம் முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் ஊரடங்கில் மேலும் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்து மாவட்ட கலெக்டர்களின் கருத்துக்களை முதல்வர் எடப்பாடி கேட்டறிந்தார்.

முக்கியமாக, தமிழகத்தில் கடந்த 6 மாதத்திற்கும் மேல் தியேட்டர்கள் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால் வேலைவாய்ப்பு மற்றும் படங்களை வெளியிட முடியாததால் பல கோடி ரூபாய் முடங்கி கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், திரையரங்குகளை அக்டோபர் மாதம் முதல் திறக்க அனுமதி அளிப்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில், பொதுமக்கள் வேலைக்கு சென்றுவர மின்சார ரயில்களை அதிகம் பேர் பயன்படுத்துவார்கள். அதனால், சில கட்டுப்பாடுகளுடன் அக்டோபர் 7ம் தேதி முதல் மின்சார ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து மத்திய ரயில்வே துறைக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட உள்ளது.

அடுத்து சென்னை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் இந்த மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. இதுதவிர, தற்போது கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 8 மணி என்று இருப்பதை இரவு 9 மணி வரை அதிகரிப்பது, அக்டோபர் 1ம் தேதி முதல் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தற்போது மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில் ஆட்சியர்களுடன் நடைபெற்ற ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் விளக்குகிறார். மேலும் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தை குறைக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்க உள்ளார். மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை முடிவுக்கு பிறகு அக்டோபர் மாதம் முதல் கூடுதலாக என்னென்ன தளர்வுகள் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் குறித்து இன்று மாலை அல்லது நாளை தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: