கடவுளாக நினைத்து வழிபடும் கருவிகளுக்கு தீவைப்பதன் மூலம் விவசாயிகளை அவமானப்படுத்துகின்றனர் : பிரதமர் மோடி வேதனை!!

டெல்லி : வேளாண் சட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சிகாக சிலர் எதிர்கின்றனர் என்று பிரதமர் மோடி குற்றச்சாட்டியுள்ளார்.கங்கையை புத்துயிரூட்டும் திட்டத்தின் கீழ் உத்ரகாண்டில் ஆறு மெகா திட்டங்களை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.மேலும் கலாச்சாரம், பல்லுயிர்ப் பெருக்கம், கங்கை நதியில் மேற்கொள்ளப்பட்ட புத்தாக்க நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ‘கங்கை அவலோகன்’ என்னும் கங்கை குறித்த முதலாவது அருங்காட்சியகத்தையும் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.

இதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ” நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுத்தமான குடிநீர் வழங்க மத்திய நீர்வளத்துறை முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஸ்வாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சிகாக சிலர் எதிர்கின்றனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளை சிலர் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சுகாதார பணிகளில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

வேளாண் திருத்தச் சட்ட மசோதாக்கள் மூலம் விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் உரிமையை மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. கறுப்புப் பணத்தை சேர்ப்பதற்கான மற்றொரு வழியும் அடைக்கப்பட்டதால் வேளாண் சட்டங்களை எதிர்க்கின்றனர்.வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்; இடைத்தரகருக்கு ஆதரவானவர்கள். கடவுளாக நினைத்து வழிபடும் கருவிகளுக்கு தீவைப்பதன் மூலம் விவசாயிகளை அவமானப்படுத்துகின்றனர். 4 ஆண்டுகளுக்கு முன் துல்லிய தாக்குதல் நடத்திய போது, அதற்கான ஆதாரத்தை எதிர்க்கட்சிகள் கேட்டனர்.துல்லியத் தாக்குதலை எதிர்ப்பதன் மூலம் நாட்டுக்கு எதிரான அவர்களின் நிலைப்பாடு தெளிவாக தெரிகிறது, என்றார். 

Related Stories: