சாம்சன் 85, திவாதியா 53 ராஜஸ்தான் அபார வெற்றி

ஷார்ஜா: பஞ்சாப் அணியை 4 விக்கெட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பந்துவீச முடிவு செய்தார். கிங்ஸ் லெவன் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் களமிறங்கினர். ராகுல் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, மறுமுனையில் மயாங்க் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு ராயல்ஸ் பந்துவீச்சை சிதறடித்தார்.

இவர்களைப் பிரிக்க முடியாமல் ராயல்ஸ் பவுலர்கள் விழிபிதுங்கினர். குறிப்பாக, மயாங்க் ஆட்டத்தில் அனல் பறந்தது. 26 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் அரை சதம் அடித்த அவர், அதிரடியைத் தொடர கிங்ஸ் லெவன் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. கே.எல். ராகுல் 35 பந்தில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 16.3 ஓவரில் 183 ரன் சேர்த்து மிரட்டியது. மயாங்க் 106 ரன் விளாசி (50 பந்து, 10 பவுண்டரி, 7 சிக்சர்) டாம் கரன் பந்துவீச்சில் சஞ்சு சாம்சன் வசம் பிடிபட்டார். ராகுல் 69 ரன் எடுத்து (54 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) ராஜ்பூத் பந்துவீச்சில் ஷ்ரேயாஸ் கோபால் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.கடைசி கட்டத்தில் மேக்ஸ்வெல், நிகோலஸ் பூரன் இருவரும் அதிரடியாக விளையாட, பஞ்சாப் ஸ்கோர் 200 ரன்களைக் கடந்தது. பூரன் தன் பங்குக்கு 3 இமாலய சிக்சர்களை அடித்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன் குவித்தது.

மேக்ஸ்வெல் 13 ரன், நிகோலஸ் பூரன் 25 ரன்னுடன் (8 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் ராஜ்பூத், டாம் கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஜோஸ் பட்லர், கேப்டன் ஸ்மித்  இருவரும் துரத்தலை தொடங்கினர். பட்லர் 4 ரன் மட்டுமே எடுத்து காட்ரெல்  வேகத்தில் கான் வசம் பிடிபட்டார். எனினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடியாக விளையாடி 19.3 ஓவரில் 226 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சாம்சன் 85, திவாதியா 53  ரன்கள் எடுத்தனர்.

Related Stories: