லட்சுமி விலாஸ் வங்கிக்கு சிக்கல் புது நிர்வாகிகள் நியமனத்தை பங்குதாரர்கள் புறக்கணிப்பு

சென்னை: லட்சுமி விலாஸ் வங்கியில் புதிதாக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிர்வாகிகளில், 7 பேரை பங்குதாரர்கள் புறக்கணித்துள்ளனர். லட்சுமி விலாஸ் வங்கியின் 93வது ஆண்டுப் பொதுக்கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இதில், ஏற்கெனவே பதவியில் இருந்த 7 பேர் மறு நியமனம் உட்பட 10 இயக்குநர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடந்த வாக்கெடுப்பில், ஏற்கெனவே வங்கி நிர்வாகத்தில் இருந்த நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுந்தர், இயக்குநர்கள் என்.சாய் பிரசாத், கே.ஆர்.பிரதீப் உட்பட 7 பேருக்கு எதிராக பங்குதாரர்கள்  வாக்களித்துள்ளனர். இதுபோல், சட்டமுறை தணிக்கை அதிகாரிக்கும் எதிராக வாக்களித்துள்ளனர்.

வராக்கடன் அதிகரிப்பு போன்றவற்றால் நிதி தள்ளாட்டத்தில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியை, இந்தியா புல்ஸ் நிறுவனத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஏறக்குறைய அனைத்தும் முடிவடையும் நிலையில், ரிசர்வ் வங்கி இந்த இணைப்பை நிராகரித்து விட்டது. இந்த வங்கியின் மூலதன தேவை விகிதம் 1.12 சதவீதமாக உள்ளது. சட்ட விதிகளின்படி 8 சதவீதம் இருக்க வேண்டும். வராக்கடன் 25.39 சதவீதமாக உள்ளது. தற்போது, இந்த வங்கியை கிளிக்ஸ் கேபிடல் நிறுவனத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் வங்கி நிறுவனர்கள் உட்பட பழைய நிர்வாகத்தில் இருந்தவர்களின் மறு நியமனத்துக்கு எதிராக பங்குதாரர்கள் வாக்களித்துள்ளது, இணைப்பில் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Related Stories: