அவிநாசி அருகே ஆயிரம் ஆண்டு பழமையான பொருட்கள் கண்டுபிடிப்பு

அவிநாசி: அவிநாசி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை  தொல்லியல் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் வஞ்சிபாளையம் அருகே கவுசிகா நதிக் கரை ஓரத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான முன்னோர்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், விலங்கினத்தின் எலும்புத்துண்டுகள், இரும்புக் கசடுகள் கண்டறியப்பட்டுள்ளது. அவிநாசி மங்கலம் ரோட்டில் கௌசிகா நதியில் பாலம் கட்ட அடித்தளப் பணிக்கான அகழ்வு மேற்கொண்டபோது வடபுறக் குழியில் பானை ஓடுகள் அதிக அளவில் கிடந்தது தெரியவந்தது. இத்தகவலறிந்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு சம்பவயிடம் சென்று அப்பொருட்களைப் பார்வையிட்டார்.

இது குறித்து அவர் கூறியதாவது:  இப்பகுதியில் சிவப்பு, கறுப்பு மற்றும் கறுப்பு சிவப்பு, வழவழப்பான கறுப்புக் கலய பாகங்கள் ஆகிய பானை ஓடுகள் கிடைத்துள்ளன. 2 மி.மீ., 3 மி.மீ. அளவிலான மெல்லிய தடிமனுடைய சமையலறைக் கலய உடைசல்கள்  அதிக அளவில் காணப்படுகின்றன. தடிமனான பானை ஓடுகள் மிகக் குறைவான அளவில் காணப்படுகிறது.  இது தவிர இரும்புக் கசடுகள் கிடைத்துள்ளன. விலங்கின எலும்புகளும் கிடைத்துள்ளன. வழவழப்பான பந்து போன்ற உருண்டை வெங்கல் கண்டறியப்பட்டுள்ளது. இது கவண் கல் ஆயுதமாகவோ அல்லது எடைக்கல்லாகவோ இருக்கலாம். மாவட்டத் தொல்லியல் துறைக்கு தகவல் தரப்பட்டுள்ளது.  சேகரிக்கப்பட்ட தொல் பொருட்களை காப்பாட்சியர் சிவக்குமார் வசம் ஒப்படைத்துள்ளோம். இவ்வாறு வரலாற்று ஆய்வாளர் முடியரசு தெரிவித்துள்ளார்.

Related Stories: