மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு

ஆனைமலை: பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குரங்கு அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை,பூங்காமற்றும் குரங்கு அருவிக்கு உள்ளூர் மட்டுமின்றி, கோவை, ஈரோடு, திருப்பூர்,பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால், குரங்கு அருவி, ஆழியார் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆழியார் குரங்கு அருவியில் நீர்பிடிப்பு பகுதிகளான சக்தி எஸ்டேட், கவர்கல் உள்ளிட்ட பகுதியில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆழியார் குரங்கு அருவியில் காட்டாற்று வெள்ளம் கொட்டி வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக,  தண்ணீரின்றி வறண்டு கிடந்த குரங்கு அருவியில், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: