தாமிரபரணி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்: 50 நாட்களாக குடிநீர் வரவில்லை

விருதுநகர்: தாமிரபரணி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் ரோசல்பட்டி ஊராட்சியில் 50 நாட்களாக தண்ணீர் விநியோகம் செய்யப்படாமல் மக்கள் காலிக்குடத்துடன் அலைகின்றனர். விருதுநகர் ஊராட்சி ஒன்றிய கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த மார்ச் 1ல் தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது. திட்டம் செயல்பாட்டிற்கு வந்து 155 நாட்கள் கடந்தும் ரோசல்பட்டி, சிவஞானபுரம், பாவாலி ஊராட்சிகளுக்கு தண்ணீர் முழுமையாக போய் சேரவில்லை.

விருதுநகரை ஒட்டிய 30 ஆயிரம் மக்கள் தொகை உடைய ரோசல்பட்டி ஊராட்சிக்கான ஆனைக்குட்டம் பகுதி கிணறு, போர்வெல்களில் இருந்தும், தாமிரபரணி தண்ணீரும் வராததால்    பாண்டியன்நகர், முத்தால் நகர், அண்ணா நகர் பகுதிகளில் 50 நாட்களாகியும் தண்ணீர் விநியோகம் செய்யவில்லை. ரோசல்பட்டி ஊராட்சியில் நிலத்தடி நீர் மட்டம் 400 அடிக்கும் கீழ் சென்று விட்டது. எனவே ஊராட்சி மக்கள் அனைத்து தேவைக்கான தண்ணீரையும் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ரோசல்பட்டி ஊராட்சிக்கு தினசரி 5 லட்சம் லிட்டம் விநியோகம் செய்ய வேண்டும். குழாய்களில் உடைப்பெடுத்து வீணாகி வரும் நிலையில் தினசரி 3 ஆயிரம் லிட்டருக்கு குறைவான தண்ணீரே போய் சேருகிறது.

மக்கள் பயன்பாட்டிற்கு சென்று சேர வேண்டிய தண்ணீர் பாவாலி ரோட்டில் குழாய் உடைப்பெடுத்து குளம் போல் தேங்கி வீணாகிறது. முதல்வர் துவக்கி வைத்த திட்டத்தை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மக்கள் குடங்களுடன் வீதிகளில் அலையும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories: