அரசு பள்ளியில் பயின்று சிவில் சர்வீஸ் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து புதுச்சேரி மாணவி சாதனை!: அரசு சார்பில் பாராட்டு விழா..!!

புதுச்சேரி: அரசு பள்ளியில் பயின்று யு.பி.எஸ்.சி. தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து புதுச்சேரி மாணவி சரண்யா சாதனை படைத்துள்ளார். மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 36வது இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த சரண்யா அசத்தியுள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆட்சியர் அர்ஜுன் சர்மா, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் மாணவிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினர். 26 வயதாகும் மாணவி சரண்யாவுக்கு இந்த வெற்றி எளிதில் கிடைத்துவிடவில்லை.

இரண்டு முறை யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி பின்னடைவை சந்தித்த அவரது தளராத போராட்டத்தால் 3வது முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இதுகுறித்து புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்ததாவது, மக்கள் வரிப்பணத்தில் இருந்து அரசு செய்யக்கூடிய அத்தனை செலவுகளும் சிறந்த மாணவர்களை, சிறந்த குடிமகன்களை உருவாக்குவது என்ற அடிப்படையில் செல்வி சரண்யாவின் ஐ.ஏ.எஸ். வெற்றி புதுச்சேரி கல்வித்துறைக்கு ஊக்கமாகும் என குறிப்பிட்டார்.

சரண்யாவின் தாயார் புனிதா 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், தந்தையின் அரவணைப்பிலேயே வளர்த்துள்ளார். அரசு பள்ளி, அரசு கல்லூரியில் படித்ததால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை தான் கற்றுக்கொள்ள முடிந்ததாக சரண்யா குறிப்பிட்டுள்ளார். ஐ.ஏ.எஸ். பதவியை பெறுவதற்கான பிரகாசமான வாய்ப்புள்ள சரண்யா அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புது நம்பிக்கையை பாய்ச்சியுள்ளார்.

Related Stories: