பவானிசாகர் அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு

சத்தியமங்கலம்:  நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக இருந்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்வதால் பில்லூர் அணையிலிருந்து பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல், கூடலூர் மசினகுடி, முதுமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக அதிகரித்துள்ளது.  நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 25,168 கன அடியாக உள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த இரு நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 86.14 அடியாக இருந்த நிலையில் நேற்று மாலை 89.31 அடியாக உயர்ந்துள்ளது. 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளதால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணையில் நீர் இருப்பு 21.1 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: