வெள்ளத்தில் தத்தளிக்கும் கர்நாடகம்...!! தொடர் சூறைக்காற்று கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்து சாலை போக்குவரத்து துண்டிப்பு!!!

பெங்களூரு:  கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஏற்கனவே கொரோனாவின் தாக்கம் பாதித்து வரும் நிலையில், அதன் மற்றொரு புறமாக வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் பிறப்பிடமாக உள்ள குடகு மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் காவிரி, ஸ்வர்ணாவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் மடிகேரி, பாகமண்டலா, தலைக் காவிரி, சோமவார்பேட்டை, விராஜ்பேட்டை, கோணிக்கொப்பா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழையால் ஆங்காங்கே பெருமளவு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மின் கன்பங்கள் முறிந்து விழுந்ததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனையடுத்து சாலைகளில் பல்வேறு ராட்சத மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. குடகு மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த செய்தி கர்நாடக மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Related Stories: